27 பரோட்டா சாப்பிட்டால் ‘கோல்ட் காயின்’ பரிசு... அறிவிப்பை வெளியிட்ட பிரியாணிக் கடை!

 
Thoothukudi

தூத்துக்குடியில் 27 பரோட்டா சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என பிரியாணி கடை அறிவித்துள்ளது இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தூத்துக்குடியில் வி.ஐ.பி என்ற பெயரில் பிரியாணிக் கடை ஒன்று சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாக அதிரடி ஆஃபரை அறிவித்தது. அது என்னவென்றால், 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு முடிக்கும் நபருக்குத் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்குப் பரோட்டா திருவிழா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த தூத்துக்குடி இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு பரோட்டா திருவிழாவில் கலந்துகொண்டு வருகின்றனர். இதையடுத்து இந்த போட்டியில் கலந்துகொண்ட அருண் பிரகாஷ் என்ற இளைஞர் 27 பரோட்டா, ஒரு சிக்கன் ரைஸ், ஃபலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் சாப்பிட்டு அசத்தியுள்ளார்.

Arun-Prakash

இதையடுத்து வெற்றி பெற்ற அருண் பிரகாஷுக்கு கடையின் உரிமையாளர்கள் தங்க நாணயத்தை வழங்கினர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் கண்ணா பாண்டியன் கூறுகையில், “எங்களது கடையை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம்.

அந்த வகையில் பரோட்டா திருவிழா நடத்தி வெற்றி பெறுபவர்களுக்குத் தங்க நாணயம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். இதற்குத் தூத்துக்குடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் ஆர்வத்துடன் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார்கள்” எனக் கூறினார்.

From around the web