தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும்; சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

 
Ponmudi

தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன், கிணத்துக்கடவு தொகுதியில் ஒரு கலை, அறிவியல் கல்லூரியை தொடங்க தமிழ்நாடு அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துப் பேசினார். அப்போது அவர், கிணத்துக்கடவு தொகுதியில் கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் எண்ணம் தற்போது அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார். பெரும்பாலும் எல்லா சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் இது போன்ற விண்ணப்பங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த கல்வி ஆண்டுக்கு மட்டுமே உயர்கல்வித்துறை சார்பில் 10 கலை, அறிவியல் கல்லூரிகளும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகளும், கூட்டுறவுத்துறை சார்பில் ஒரு கல்லூரியும் என மொத்தம் 21 கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

From around the web