தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர்! – தமிழருவி மணியன்

தமிழகத்தின் தனிப்பெரும் அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியுற்ற கோடானுகோடித் தமிழர்களில் எளியனும் ஒருவன். அரசியல் உலகிலும், இலக்கிய உலகிலும், கலை உலகிலும் அவர் அளித்த பங்களிப்பைப் புறந்தள்ளிவிட்டு எந்த மனிதராலும் தமிழக வரலாற்றை வரைந்துவிட முடியாது. மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் ஒரே மையப்புள்ளியில் ஒன்றிணையக் கூடியவர்கள். ஓசூருக்குப் பக்கத்தில் தொரப்பள்ளி என்ற குக்கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றலால்,
 


மிழகத்தின் தனிப்பெரும் அரசியல் ஆளுமையாகத் திகழ்ந்த கலைஞர் அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியுற்ற கோடானுகோடித் தமிழர்களில் எளியனும் ஒருவன். அரசியல் உலகிலும், இலக்கிய உலகிலும், கலை உலகிலும் அவர் அளித்த பங்களிப்பைப் புறந்தள்ளிவிட்டு எந்த மனிதராலும் தமிழக வரலாற்றை வரைந்துவிட முடியாது.

மூதறிஞர் இராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் ஒரே மையப்புள்ளியில் ஒன்றிணையக் கூடியவர்கள். ஓசூருக்குப் பக்கத்தில் தொரப்பள்ளி என்ற குக்கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து தனது அறிவாற்றலால், இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக உயர்ந்தவர் இராஜாஜி. சில ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்த விருதுபட்டியில் பிறந்து, காங்கிரஸ் கூட்டங்களுக்கு மக்களைத் திரட்ட தமுக்கடித்தத் தொண்டராகத் திகழ்ந்து தன்னுடைய தன்னலமற்றத் தியாகத்தால், இந்தியாவின் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய மகத்தான தலைவராக உயர்ந்தவர் காமராஜர். திருவாரூருக்குப் பக்கத்திலுள்ள திருக்குவளைக் கிராமத்தில் பிறந்து வலிமைமிக்க எந்தப் பின்புலமுமில்லாமல் பொதுவாழ்வில் அடியெடுத்து வைத்துத் தன்னுடையக் காந்தச் சொற்களாலும், கடும் உழைப்பாலும், உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்து, 1996 முதல் இந்தியப் பிரதமர்களை உருவாக்குவதில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் கலைஞர்.

பேசத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியாது. பேசவும் எழுதவும் தெரிந்தவர்களுக்கு மக்கள் நலன் சார்ந்து சோர்வறியாமல் உழைக்கும் உள்ளம் இருக்காது. அளப்பரிய பேச்சாற்றல், வியக்கத்தக்க எழுத்தாற்றல், சோர்வறியா கடும் உழைப்பு ஆகியவற்றின்
பூரண வடிவமாகத் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட அபூர்வமான தலைவர் கலைஞர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று வாய் மலர்ந்த அண்ணாவின் வழியில், திறமையுள்ளவர்கள் தனக்கு எதிர் வரிசையில் நின்றாலும், அவர்களை அன்பால் ஆரத்தழுவி அரவணைத்துக் கொள்ளும் பரந்த மனம் கொண்ட கலைஞரைப்போல் வேறொருவரை இந்தப் பாழ்பட்ட அரசியலில் அவ்வளவு எளிதாகப் பார்த்துவிட முடியாது.

எண்பது ஆண்டுகள் இடையறாத பொதுவாழ்வுப் பணி, அறுபதாண்டுகள் சட்டப்பேரவையில் சரித்திர சாதனை, ஐம்பதாண்டுகள் தி.மு. கழகத்தின் கட்டுமானம் கலைந்து விடாமல் காப்பாற்றியக் கட்சித் தலைமை, தேர்தல் காலங்களில் சூழலுக்கேற்ப அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்திய நேர்த்தி, தமிழின்பால் கொண்ட தனிப் பெருங்காதல், பேனா முனையில் பிரசவித்த இலக்கிய மணம் கமழும் வசீகரமான வார்த்தைகளின் அணிவகுப்பு, சமூக நீதிக்காகவும் சாமான்யர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் ஆற்றிய அரும்பணிகள் ஆகிய அனைத்தும் இந்த மண்ணில் கடைசித் தமிழர் உள்ளவரை மறவாமல் காலத்தால் போற்றப்படும்.

மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இடம் ஒதுக்கிய தமிழக அரசு, கண்மூடும் வரை அண்ணாவைப் போற்றி வாழ்ந்த கலைஞருக்கு, அண்ணா கண்ணுறங்குமிடத்தில் இளைப்பாறுவதற்கு அனுமதி வழங்குவதுதான் முறையான செயல். அதைத் தமிழக அரசு செய்யத் தவறினாலும், நீதிமன்றம் செய்திருப்பது வரவேற்கத் தக்கது.

கலைஞர் நூறாண்டு கடந்தும், இந்த மண்ணில் மக்கள் நலன் சார்ந்து களப்பணியாற்றிட வேண்டும் என்பதுதான் தமிழினத்தின் கனவாக இருந்தது. அந்தக் கனவு நிறைவேறாத நிலையில் கலங்கித் தவித்திடும் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது குடும்ப உறவுகளுக்கும் கழகத் தொண்டர்களுக்கும் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் என் ஆறுதல் வார்த்தைகளை வழங்குவதற்கு மேல் வேறென்ன என்னால் செய்ய இயலும்!

தமிழருவி மணியன்
தலைவர் – காந்திய மக்கள் இயக்கம்

From around the web