இறப்பு என்பது எப்போதும் இல்லை… ஏனெனில்?

நான் வாழ்ந்த மொழி… வாழும் மொழி… வளரும் மொழி… எனக்கு இறப்பு என்பது எப்போதும் இல்லை ஏனெனில் என் பெயர் தமிழ். குகைகளிலிருந்து குடிசைக்கும்… குடிசையிலிருந்து கோட்டைக்கும்… நடந்த கால்கள் என் “நாற்றங்கால்கள்…” ஏனெனில் என் பெயர் தமிழ். பானையில் கீறலாய் கல்லில் வெட்டாய் ஏட்டில் எழுத்தாய் அச்சில் அச்சாய்.. கணினியில் எழுத்துருவாய் என் உயிரும்.. மெய்யும்… உயிர் மெய்யும்… ஏனெனில் என் பெயர் தமிழ்.. அரண்மனைகளில் அந்தப்புரங்களில் ‘புழங்கியதால்’ துவங்கவில்லை… துலங்கவில்லை… என் இருப்பு. ஏனெனில்
 

இறப்பு என்பது எப்போதும் இல்லை… ஏனெனில்?

நான்
வாழ்ந்த மொழி…
வாழும் மொழி…
வளரும் மொழி…
எனக்கு
இறப்பு என்பது
எப்போதும் இல்லை

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

குகைகளிலிருந்து
குடிசைக்கும்…
குடிசையிலிருந்து
கோட்டைக்கும்…
நடந்த கால்கள்
என்
“நாற்றங்கால்கள்…”

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

பானையில் கீறலாய்
கல்லில் வெட்டாய்
ஏட்டில் எழுத்தாய்
அச்சில் அச்சாய்..
கணினியில் எழுத்துருவாய்
என்
உயிரும்..
மெய்யும்…
உயிர் மெய்யும்…

ஏனெனில்
என் பெயர் தமிழ்..

அரண்மனைகளில்
அந்தப்புரங்களில்
‘புழங்கியதால்’
துவங்கவில்லை…
துலங்கவில்லை…
என் இருப்பு.

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

கொற்றவனும்…
குயத்தியும்…
கணியனும்…
கணக்காயனும்…
குறமகளும்..‌
கொல்லனும்…
வணிகனும்..
வண்ணக்கனும்…
சேரனும் சோழனும் பாண்டியனும்…
கூடிப் பாடிய
கூட்டியக்கம் நான்.

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

வெள்ளம் வரும் போகும்…
“கள்ளம்” வரும் போகும்…
ஆயினும்
உள்ளம் உடைய
உயர்மக்கள்
என் மக்கள்.

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

எனக்கு
இறப்பு என்பது
எப்போதும் இல்லை

ஏனெனில்
என் பெயர் தமிழ்.

இறப்பு என்பது எப்போதும் இல்லை… ஏனெனில்?

ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்.

From around the web