தமிழக அரசியலின் அடிப்படை திராவிடமே!.. தமிழருவி மணியனுக்கு சுப. வீரபாண்டியன் பதில்

துக்ளக் விழாவில் பேசிய காங்கிய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியனின் பேச்சுக்கு பதிலளித்துள்ளார் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திராவிடக் கட்சிகளின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். அந்த அறிக்கை விவரம் வருமாறு: ”சென்ற வாரம், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகக் கோவை சென்றபோது, விமான நிலையத்தில், என் வயதிற்கு இணையான, ஒரு நண்பரையும், அவரது துணைவியாரையும் சந்தித்தேன். இருவரும் என் அருகில் வந்தனர். அவர் என் கையைப் பிடித்துக்
 

தமிழக அரசியலின் அடிப்படை  திராவிடமே!.. தமிழருவி மணியனுக்கு சுப. வீரபாண்டியன் பதில்துக்ளக் விழாவில் பேசிய காங்கிய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியனின் பேச்சுக்கு பதிலளித்துள்ளார் திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் திராவிடக் கட்சிகளின் சாதனைகளைப் பட்டியலிட்டுள்ளார். அந்த அறிக்கை விவரம் வருமாறு:

”சென்ற வாரம், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகக் கோவை சென்றபோது, விமான நிலையத்தில், என் வயதிற்கு இணையான, ஒரு நண்பரையும், அவரது துணைவியாரையும் சந்தித்தேன். இருவரும் என் அருகில் வந்தனர். அவர் என் கையைப் பிடித்துக் கொண்டு, என் உரைகளைத் தொடர்ந்து வலையொளியில் கேட்பதாகக் கூறிப் பாராட்டினார். “நீங்கள் தொடர்ந்து திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பப் பாடுபட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

என்ன வியப்பு என்றால், அவர் நெற்றி நிறையத் திருநீறு இருந்தது. பொட்டும் வைத்திருந்தார். அவற்றை நான் கவனித்ததை அவர் கவனித்து விட்டார். “ஆமா, நான் கடவுள் நம்பிக்கை உடையவன்தான். இந்து மதத்தைச் சேர்ந்தவன்தான். ஆனாலும், திராவிட இயக்கம் இல்லையென்றால், நாங்களெல்லாம் படித்து உயர் வேலைகளுக்கு வந்திருக்க முடியுமா? பூணூல் போட்டவங்களுக்குத்தானே அடிமையாக இருந்திருப்போம்!” என்றார்.

இந்தத் தெளிவும், நன்றியுணர்ச்சியும் உள்ள இத்தகையோர்தான், இன்றும் இம்மண்ணில் திராவிட இயக்கம் சாய்ந்து விடாமல் காக்கும் தூண்களில் சிலவாக உள்ளனர் என்பது புரிந்தது.

இந்தச் சூழல் நிலவும் தமிழகத்தில்தான், இரண்டு நாள்களுக்கு முன், வலையொளியில், திருச்சியில், தமிழருவி மணியன் அவர்கள் பேசியதைக் கேட்டேன். “என் மூச்சு அடங்குவதற்குள், தமிழகத்தை விட்டு இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியையும் நீக்க வேண்டும், அதுதான் என் இலட்சியம்” என்று கூறியுள்ளார். எவ்வளவு பெரிய லட்சிய வெறி! இரண்டு கட்சிகளையும் நீக்கிவிட்டு, யாருடைய ஆட்சியைக் கொண்டு வரவேண்டும்? தமிழ் நாடு, இனம், மொழி ஆகியனவற்றிற்காக ரத்தம் சிந்தி, பாடுபட்டுச் சிறைக்குச் சென்று, பல தியாகங்களைச் செய்துள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.

விஜய்காந்த், வைகோ இருவரையும் முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்த களைப்பில் சற்று ஓய்வெடுத்துக் கொண்டு, இப்போது ரஜினியை முதல்வராக்கும் பணியில் இறங்கியுள்ளார். அகில இந்திய அளவில் சு.சாமி செய்யும் ‘கண்ணியமான’ அதே பணியை இவர் தமிழக அளவில் செய்ய முயற்சி செய்கின்றார்.

இவ்வளவையும் அவர் எங்கே பேசுகிறார் என்றால், துக்ளக் பொன்விழா மேடையில் பேசுகின்றார். தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களைப் பார்த்து, ‘நீங்கள்லாம் ஆம்பிளையா?’ என்று கேட்ட குருமூர்த்தியைக் கண்ணியமானவர் என்கிறார். (ஓ பி எஸ் ஆம்பளை இல்லையென்றால், அதனால் குருமூர்த்திக்கு என்ன பிரச்சினை?) சோவின் இடத்தை நிரப்பிவிட்டாராம் குருமூர்த்தி, சொல்கிறார் மணியன்.

வாய் திறந்தால் சத்தியம் என்பதாகவும், அறம் சார்ந்து வாழ்வதின் இலக்கணமாகவும் திகழ்ந்தவர் சோ என்றும் சான்றிதழ் வழங்குகின்றார். போகிற போக்கைப் பார்த்தால், மணியனுக்குப் ‘பூணல் கல்யாணம்’ நடத்தினாலும் நடத்தி விடுவார்கள் போலிருக்கிறது! இதயம் பேசுகிறது மணியனின் இடத்தை, தமிழருவி மணியன் நிரப்பிவிடுவார் என்று கருதலாம்.

‘கழகங்கள் இல்லாத தமிழ்நாடு’ என்பது பாஜகவின் முழக்கம். (ஆனால் வெட்கமில்லாமல், அதிமுக வோடு கூட்டணி). கழகங்களை ஒழிப்பதே மணியனின் உயிர் மூச்சுக்கு கொள்கை! திராவிடம் என்பதே பார்ப்பனியத்தின் இளைய பங்காளி என்பது இன்னொருவரின் (மணியரசன் ஜி) கண்டுபிடிப்பு! ஆக மொத்தம், எல்லோருக்கும் ஒரே நோக்கம்தான். அதாவது திராவிட இயக்கத்தை அழிப்பது.

அதற்கு என்ன செய்யலாம்? திராவிட இயக்கத்தின் சார்பில் ஆட்சிக்கு வரக்கூடிய திமுக வை அழிப்பது. அதற்கு முதல் வேலையாக, திமுக வைத் தாங்கிப் பிடித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் மீது அவதூறுகள் பரப்புவது! அதற்காகத்தான் பஞ்சமி நிலம், மிசா சட்டம் எல்லாம். ஆனால் எதுவுமே பயன்படவில்லை. பூமராங் போலத் திருப்பி வந்து தாக்கிவிட்டது. .

இரண்டு திராவிடக் கட்சிகளையும்தானே எதிர்க்கின்றனர் என்று கேட்கலாம். அது ஒரு பாசாங்கு! அதிமுக வோடு கூட்டு வைத்துக் கொண்டு அந்தக் கட்சியை எப்படி எதிர்க்க முடியும்? இரண்டு காட்சிகளையும் சேர்த்துச் சேர்த்துச் சொன்னால், நடுநிலை என்பது போல் ஒரு தோற்றம் வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அவ்வளவுதான்!

50 ஆண்டுகாலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான், தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது இவர்கள் திரும்பத் திரும்பக் கூறும் குற்றச்சாற்று. அதில் எந்த உண்மையும் இல்லை என்பதை அரசு புள்ளி விவரங்களே நமக்குச் சொல்கின்றன.

தமிழ்நாட்டில் கங்கிரஸ் ஆட்சியின் இறுதி ஆண்டுகளில், (1965-66), 89.4 மில்லியன் டன்னாக இருந்த தானிய உற்பத்தி, 72.3 மில்லியன் டன்னாகக் குறைந்துவிட்டது. அதாவது, 19% உற்பத்தி குறைந்தது. அந்த நிலை மீண்டும், அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்புதான், சரி செய்யப்பட்டது. அதனால்தான், அண்ணாவால், அரிசிப் பஞ்சத்தை நீக்க முடிந்தது. அவர் ஆட்சியில், ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், அரிசி கிடைக்கவில்லையென்றால், எலிக்கறி சாப்பிடுங்கள் என்று சொல்லப்பட்ட நிலை முற்றிலுமாக மாறியது.

தமிழ்நாடு பொதுத் தேர்வு ஆணையம் தரும் தகவலின்படி, 1967-77 காலகட்டங்களில் (அண்ணா, கலைஞர் ஆட்சி) அரசுப் பணிகளில் இணைந்த பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியது.

சிறுதொழில் வளர்ச்சி நிறுவனங்கள் (சிட்கோ), தொழில் வளர்ச்சி நிறுவனங்கள் (டிட்கோ) போன்றவை திமுக ஆட்சியில்தான் இங்கு காலூன்றின. அதனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் பயன்களைப் பெற்றனர். 1973-75 ஆம் ஆண்டுகளில், ஆறு சர்க்கரை ஆலைகள் நிறுவப்பட்டு, ஏராளமான கரும்பு விவசாயிகளும், உடல் உழைப்பாளிகளும் பயன் பெற்றனர்.

கலைஞர் ஆட்சியில்தான், பொது விநியோகத் திட்டம் (PDS) வலிமை பெற்று, அனைத்து மக்களுக்கும், அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற தேவையான பொருள்கள் சென்றடைந்தன. 1970-76 இல், பொது உற்பத்தி நிலை (State domestic product) 17.1 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடாக உயர்ந்தது. 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், 39.5 விழுக்காடாக இருந்த மக்களின் கல்வியறிவு, 1981 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 54.4 விழுக்காடாக உயர்ந்தது.

இனாம்தாரர் ஒழிப்புச் சட்டத்தின் மூலமும், நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் மூலமும், எவ்வளவு ஏழைகளின் வாழ்வில் திமுக ஒளியேற்றியது என்பதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள். ரத்தம் சிந்திப் பெறக்கூடிய உரிமைகளை ஒரு துளி மையினால் பெற்றுத்தந்தவர் கலைஞர் என்று மூத்த பொதுவுடைமைக் கட்சித் தலைவர் மணாலி கந்தசாமி பாராட்டினார். ஏழைகளுக்கு நிலம் வழங்கிய பங்கினை அன்றைய புதுக்கூட்டை நாடாளுமன்ற உறுப்பினர், பொதுவுடைமைக் கட்சித் தலைவர் உமாநாத் பாராட்டியுள்ளார்.

பொருளியலில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென், தன்னுடைய An uncertain glory என்னும் நூலில், இந்தியாவிலேயே தமிழகத்தின் வளர்ச்சி கடந்த 50 ஆண்டுகளில். பிற மாநிலங்களுடன் ஒப்பிட முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்கிறார்.

ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவித் திட்டம், கணவனை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் என்று எவ்வளவு சமூக நலத் திட்டங்கள்! அனைத்தையும் பட்டியல் போடுவது என்றால், அவற்றை ஒரு கட்டுரையில் அடக்கமுடியாது, ஒரு பெரிய புத்தகமே எழுத வேண்டியிருக்கும்!

இவை அனைத்தையும் திரை போட்டு மறைத்துவிட்டு, திராவிட வெறுப்பு அரசியலை இவர்கள் திட்டமிட்டு வளர்ப்பதன் நோக்கம் என்ன? தமிழ்நாட்டில் திராவிட உணர்வு இருக்கும்வரை, பார்ப்பனியம் இந்துக்களை அடிமைகளாக நடத்த முடியாது. பார்ப்பனர்களால், இந்துக்களின் கல்வி உரிமையை மறுக்க முடியாது. கோயில் கதவுகளைச் சாத்த முடியாது. பெண்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆள முடியாது.

எனவே இந்த மண்ணில் பார்ப்பனியம் காலூன்ற வேண்டுமானால், திராவிடம் அழிய வேண்டும். அதற்காகத்தான், பாப்பனர்களும், பாப்பன அடிமைகளும் ஒவ்வொரு நாளும் வேலை செய்கின்றனர். புதிய புதிய பொய்களை அவிழ்த்து விடுகின்றனர்.

திராவிடம் என்பது தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என்னும் நிலங்களின் சேர்க்கைதானே என்கின்றனர். இல்லை, அந்தக் கருத்து, 1956க்கு முந்தியது. இப்போது சொல்கிறோம், திராவிடம் என்பது வெறும் நிலங்களின் சேர்க்கையன்று, அது பெரியாரியம், அம்பேத்காரியம், மார்க்சியம் என்னும் சித்தாந்தங்களின் சேர்க்கை!

தமிழகத்தைப் பொறுத்தவரையில், சமூக நீதி மற்றும் இடதுசாரிச் சிந்தனைகளைத் திராவிடம் ஏந்தி நிற்கிறது. அதனால்தான் அதனை அழிக்க முற்படுகின்றனர். ஆம், இன்றைய தமிழக அரசியலின் அடிப்படையே, திராவிட ஆதரவா, எதிர்ப்பா என்பதில்தான் அடங்கியுள்ளது! எந்தப் போரிலும் திராவிடம் வெல்லும்.”

இவ்வாறு சு.ப.வீரபாண்டியன் அறிக்கையில் கூறியுள்ளார்

https://www.A1TamilNews.com

From around the web