ஸ்டார்ட்-அப் விக்கிரமாதித்தன்ஸ் – ஒரு நம்பிக்கைத் தொடர்!

வாசக நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். நான் கார்த்திகேயன் பாஸ்டுரா. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே கிரேக்கத்திற்கு வணிகம் செய்து புகழ்பெற்ற மதுரை மாநகரில் எளிய குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறையாக படித்து வளர்ந்து தொழில் முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக போராடிக்கொண்டிருக்கும் ஒரு தொழில் முனைவோன் நான். போராட்டங்கள் என் வாழ்வில் உள்ளும் புறமும், அல்லும் பகலும் எங்கும் இருந்தன. ஆனால் அதை விட பன்மடங்கு ஆற்றலை, நம்பிக்கையை, உற்சாகத்தை புத்தகங்கள் வழியாக பெற்றதால் போராட்டங்கள் பாறைகள் உருக்கொண்டு வந்தாலும்
 

ஸ்டார்ட்-அப் விக்கிரமாதித்தன்ஸ் – ஒரு நம்பிக்கைத் தொடர்!வாசக நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும். நான் கார்த்திகேயன் பாஸ்டுரா. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே கிரேக்கத்திற்கு வணிகம் செய்து புகழ்பெற்ற மதுரை மாநகரில் எளிய குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறையாக படித்து வளர்ந்து தொழில் முயற்சியில் இறங்கி வெற்றிகரமாக போராடிக்கொண்டிருக்கும் ஒரு தொழில் முனைவோன் நான். போராட்டங்கள் என் வாழ்வில் உள்ளும் புறமும், அல்லும் பகலும் எங்கும் இருந்தன. 

ஆனால் அதை விட பன்மடங்கு ஆற்றலை, நம்பிக்கையை, உற்சாகத்தை புத்தகங்கள் வழியாக பெற்றதால் போராட்டங்கள் பாறைகள் உருக்கொண்டு வந்தாலும்  நீர்க்குமிழிகள் போல நம்மை தொட்டவுடன் சிதறிவிடும். நம்பிக்கையின் சூட்சுமம் என்பது நீங்கள் அதனை எவ்வளவு கொடுக்கிறீர்களோ அதைவிட பன்மடங்கு உங்களுக்குள் ஊறும். அது ஊற்று பெருக பெருக நீங்கள் விஸ்வரூபம் கொள்வீர்கள். அதைத் தான் என் முகநூல் பதிவுகள் மூலமாக முயற்சிக்கிறேன். அதன் ஒரு பகுதியாகத் தான் இந்த கட்டுரைகள் பிறந்தன.     

இதன் மூலம் நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன் என்றால் நமக்கு முன் சென்று பல போராட்டங்களை கண்டு வெற்றி கொண்டவர்களின் விதைகளை எடுத்துக் கொண்டு வீரியத்தை தேக்கி முன்னோக்கி செல்கிறேன். நான் பயணிக்கும் இந்த பயணத்தில் பாதையெங்கும் அந்த வீரிய விதைகளை தூவிக்கொண்டே செல்கிறேன். அவைகள் பெரும் மரங்களாக வளர்ந்து காடாக மாறி  மேகங்களை ஈர்த்து நம்பிக்கை மழையாக பெய்து மண்ணை செழிக்கச் செய்யும் என்று உளமார நம்புகிறேன்.  

பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஒரு ஸ்டார்ட்அப்பை தொடங்க மிகப் பெரும் தொழிற்சாலை தேவையில்லை, பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் தேவையில்லை, நீண்ட கால அனுபவம் தேவையில்லை, பெரும் முதலீடு தேவையில்லை, வயது தடையில்லை, பாலினம் தடையில்லை, கல்விஅறிவு தடையில்லை, இனம், மொழி, தேசம் என்று எதுவும் தடையில்லை. 

இதற்கு மேலும் ஒரு தடை உண்டென்றால் அது நமது நம்பிக்கையற்ற எண்ணம் மட்டுமே. அதை இந்த தொடர் நிச்சயம் உடைக்கும். ஒரு புது உலகின் வாசலை இது திறந்துவிடும். அதில் பயணம் செய்த வெற்றியாளர்களின் கதைகளை படிக்கும் போது அவர்களும் நம்மிடமிருந்து உருவானவர்கள் தான் என்பது புரியும். ஒரு முக்கிய தகவலை சொல்கிறேன். இந்த தொடரில் இடம் பெற்றுள்ள எவரும் பரம்பரை பணக்காரர்கள் அல்ல. எல்லோரும் முதல் தலைமுறை சாதனையாளர்கள். இதற்கு மேலே சொல்வதற்கு என்ன இருக்க முடியும்.

ஒரு தொழில்முனைவோராக நான் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பற்றி அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. நிறைய புத்தகங்கள் படிக்க படிக்க தான் என் கனவுகளின் எல்லை மிக பிரமாண்டமாக விரிந்தது. ஸ்டார்ட்அப் கதைகள் இந்த நூற்றாண்டின் பொருளாதார, சமூக புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தொழில் தொடங்கவும் அதை வெற்றிகரமாக நடத்தவும் நூற்றாண்டுகளாக இருந்த விதிகள் அனைத்தும் தகர்ந்துபோயிருக்கிறது. 

இந்த தொடரைப் படிக்கும்போது உங்களுக்குள் இருக்கும் பல மனத்தடைகள் தகர்ந்துவிடும் என்பதை நான் உறுதியாக சொல்வேன். 

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு

என்பது வள்ளுவர் வாக்கினை ஞாபகம் கொள்வோம். அந்த வெற்றி உள்ளத்தை பெறுவோம். வள்ளியம் என்னும் பெரும் செல்வத்தை அடைவோம். உலகத்தின் பார்வையை நம் பக்கம் திருப்புவோம். 

ஸ்டார்ட்-அப் விக்கிரமாதித்தன்ஸ் – ஒரு நம்பிக்கைத் தொடர்!

– கார்த்திகேயன்
நிறுவனர்: Fastura Technologies
www.fastura.com 

From around the web