நீங்கள் நம்பும் விஷயத்துக்கு ரிஸ்க் எடுங்கள்- எலன் மஸ்க்

ஸ்டார்ட்-அப் விக்கிரமாதித்தன்ஸ் – 19 ‘டெஸ்லா’ எலன் மஸ்க் ‘வானம் வசப்படும்’ என்ற இந்த சொற்றொடர் தமிழில் நாவல்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படங்கள், திரைப்பாடல்கள் என்று நிறைய வந்துள்ளது. காரணம் அந்த சொற்களில் உள்ள பிரமாண்டமான ஊக்கசக்தி. உண்மையிலேயே வானத்தை வசப்படுத்திய மனிதர் என்றால் அது எலன் மஸ்க் தான். Zip2வில் இருந்து 22மில்லியன் டாலர்களுடன் வெளியே வந்தவர் X.com என்ற பெயரில் சொந்த முதலீட்டில் ஆன்லைன் வங்கி வர்த்தக நிறுவனத்தை தொடங்குகிறார். இதே தொழில்நுட்பத்தில்
 

ஸ்டார்ட்-அப் விக்கிரமாதித்தன்ஸ் – 19  ‘டெஸ்லா’ எலன் மஸ்க்

நீங்கள் நம்பும் விஷயத்துக்கு ரிஸ்க் எடுங்கள்- எலன் மஸ்க்

‘வானம் வசப்படும்’ என்ற இந்த சொற்றொடர் தமிழில் நாவல்கள், கதைகள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்படங்கள், திரைப்பாடல்கள் என்று நிறைய வந்துள்ளது. காரணம் அந்த சொற்களில் உள்ள பிரமாண்டமான ஊக்கசக்தி. உண்மையிலேயே வானத்தை வசப்படுத்திய மனிதர் என்றால் அது எலன் மஸ்க் தான்.

Zip2வில் இருந்து 22மில்லியன் டாலர்களுடன் வெளியே வந்தவர் X.com என்ற பெயரில் சொந்த முதலீட்டில் ஆன்லைன் வங்கி வர்த்தக நிறுவனத்தை தொடங்குகிறார். இதே தொழில்நுட்பத்தில் Confinity என்ற இன்னொரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தோடு மல்லுக்கட்டவேண்டி இருக்கிறது. மல்லுக்கட்டி சக்தியை விரயமாக்குவதை விட போட்டியாளரையும் பங்காளியாக்கி கொள்வதே அறிவு என்ற கார்பரேட் பாடத்தின் படி அவர்களுடன் இணைந்து Paypal என்ற புதிய நிறுவனத்தை உருவாக்குகிறார். Paypal என்ற உலகமறிந்த பெரும் நிறுவனம் உருவானகதை இப்படிதான்.

எலனின் சிந்தனையும் செயலும் நாலுகால் பாய்ச்சலில் இருக்கும். அவரது வேகமான அணுகுமுறை அந்தக் கூட்டு நிறுவனத்திற்கு தலைவலியாக தோன்ற எலன் தன் புது மனைவியோடு தேனிலவுக்கு சென்ற சமயம் அவரை CEO பதவியில் இருந்து தூக்கியடிக்கப்படுகிறார். இதற்கு எலனின் பதிலடி என்ன தெரியுமா? தன்னிடம் இருக்கும் பணம் அனைத்தையும் Paypal இல் முதலீடு செய்கிறார்.

பங்குகள் அதிகமாக ஆனபோதும் மீண்டும் CEO பதவியை கோரவில்லை. சாதாரண ஆளாக இருந்தால் பிரச்சனைக்குள்ளேயே இருந்து உழட்டி கொண்டிருப்பார்கள். ஆனால் இவர் அதையே வாய்ப்பாக கருதி பால்ய கனவின் வர்த்தக சாத்தியகூறுகளை ஆராய கிளம்பிவிட்டார். சொந்தமாக ஒரு விண்வெளி நிறுவனத்தை நடத்தி மனிதகுலத்தை காப்பதுதான் அவரது சிறுவயது கனவு.

ராக்கெட் கனவு

இடையில் மலேரியாவில் படுத்த படுக்கையாகி உயிர்போய் உயிர்வந்ததால் நீண்ட ஓய்வில் இருக்கவேண்டிய நிலை. மீண்டும் புத்தக உலகில் தனது கனவிற்கு விடை தேடுகிறார். எப்படி ராக்கெட் செய்வது? எப்படி அனுப்புவது? பதில்கள் கிடைக்கிறது.

ஆனால் அது போதாது. ரஷ்யாவிற்கு பயணிக்கிறார். ரஷ்ய விஞ்ஞானிகளிடம் செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ராக்கெட் அனுப்பவேண்டும் என்று கேட்க அவர்கள் ஆடிப்போய் விடுகிறார்கள். நம்பமுடியவில்லை இல்லையா… ஆனால் அது உண்மை தான். பிறகு அது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்கிறார். ஆனால் கனவினை விட்டுவிடவில்லை.

எந்த ஒரு தொழில்முனைவோருக்கும் இப்படி ஒரு கனவு பிறக்க முடியுமா… விஞ்ஞான உலகமே அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்துகொண்டிருக்கும் போது செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப யாராவது யோசிப்பார்களா?

ஆனால் அவர் யோசித்தார், முடியும் என்று நம்பினார் அது தான் எலன் மஸ்க். தனது கனவினை நனவாக்க முதலீடு வேண்டுமல்லவா? Paypalஇல் அவரிடம் இருந்த அத்தனை பங்குகளையும் விற்று 250 மில்லியன் டாலருடன் வெளியில் வந்தார். மிக வேகமாக வளர்ந்துகொண்டு வரும் நிறுவனத்தில் இருந்து வெளியில் வருகிறானாம், அதுவும் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் அனுப்ப… இவனுக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா…?

கனவில் உறுதி

ஆனாலும் தன் கனவில் அவர் உறுதியாக இருந்தார். SpaceX தொடங்கப்பட்டு சொந்தமாக ராக்கெட்டுகள் தயாரிக்கப்பட ஆரம்பித்தது. இந்த சமயத்தில் அவருக்கு எலெக்ட்ரிக் கார்கள் மேல் கவனம் திரும்பியது. JB Straubel என்ற எலெக்ட்ரிக்கார் என்ஜினியரை சந்திக்கிறார். பிறகு Tesla என்ற ஸ்டார்ட்-அப் அவரிடம் தங்கள் ஐடியாவை முன் வைக்கிறார்கள். அவர் என்ன எதிர்பார்த்தாரோ அதை கண்முன்னே நிறுத்தவே உடனடியாக முதலீடு பண்ணுகிறார். கூடவே JB Straubel சேர்த்துக்கொள்ள சொல்ல, ஒரு புது இளைஞர்படை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத அதி நவீன Tesla கார்களை உற்பத்தி செய்ய தொடங்குகிறது. இதற்கு தோதாக Toyoto கார் நிறுவனம் ஒரு பெரிய கார் ப்ளாண்டை விற்க முன்வர அதில் Tesla கார் நிறுவனம் உற்பத்தியை தொடங்குகிறது. அவரது ஐடியாக்களை பாருங்கள். ஒன்றுகூட சாதாரணமாக இல்லை. சிந்தனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது.

மறுபுறம் SpaceX-இன் முதல் ராக்கெட் தோல்வி அடைகிறது. ஆனால் NASA உடன் அவர்களது விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு பூமியில் இருந்து பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தம் போடப்படுகிறது. இடையில் அவரது சகோதரர் ஆரம்பித்த சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் எடுக்கும் ஸ்டார்ட்அப்பில் பெரும் முதலீடு செய்கிறார். இப்போது கையிருப்பில் பணமே இல்லை. எல்லாம் முதலீடு செய்தாயிற்று

சோதனைக் காலம் ஆரம்பிக்கிறது. SpaceX இன் இரண்டாம் ராக்கெட்டும் தோல்வி, மூன்றாம் ராக்கெட் நான்கு செயற்கைகோளுடன் கிளம்பி வெடித்து சிதறுகிறது. “நான் தான் அப்பவே சொன்னேன்ல இதெல்லாம் சரிப்பாடாது” என்று பத்திரிகைகள் விமர்சகர்கள் கிண்டல் செய்கிறார்கள். SpaceX, Tesla இரண்டும் கையிருப்பெல்லாம் கரைந்து கடன்களில் ஓடுகிறது. நம்பிக்கைகள் உடைந்துகொண்டிருந்தாலும் உழைப்பை குறைக்காமல் இருந்தார்கள்.

வெற்றியுடன் விண்வெளியில் ராக்கெட்

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். ஆம் அவர்களின் உழைப்பு நான்காவது ராக்கெட்டை வெற்றி பெற செய்து NASAவின் மூலமாக கூலி கொடுத்தது. 1.2 பில்லியன் டாலர்களுக்கு அடுத்த 12 ராக்கெட்டுகள் ஏவ NASAஉடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி கணிசமான முன்பணமும் பெறப்பட்டது. அதேசமயம் Teslaவும் திவாலாக இருந்த நிலையில் கடைசி மணி நேரத்தில் முதலீடு கிடைக்கவே மீண்டும் உயிர் பெற ஆரம்பித்தது.

SpaceX, Tesla, SolarCity என்று அவரின் நிறுவனங்கள் அனைத்தும் அந்த நொடியில் இருந்து வீறுகொண்டு எழுந்து வெற்றிப்பயணம் செய்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் டெஸ்லாவின் பங்கு கிட்டத்தட்ட 1000% சதவீதம் ஏறி இருக்கிறது. இன்னும் மேலே தான் ஏறும். ஏனென்றால் டெஸ்லா தான் நிகழ்காலத்தில் மட்டுமல்லாது எதிர்காலத் தேவையும் பூர்த்தி செய்கிறது. அனைத்து கார் கம்பெனிகளும் டெஸ்லாவை தான் உற்று நோக்குகிறார்கள்.

எலன் அடுத்த பயணத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார். OpenAI என்ற லாபநோக்கற்ற (லாபம் வெளியில் தெரியாது) குழுமத்தை தொடங்கி இருக்கிறார். இதன் நோக்கமானது ஹாலிவுட்காரர்கள் பயமுறுத்தும் செயற்கை அறிவு திறன் கொண்ட இயந்திரங்கள்.

ஸ்டார்ட்அப் பாடம்

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை – என்பார் வள்ளுவர்.

உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேருமாம் வெற்றி. அதை 200% உண்மை என உணர்த்தியவர் எலன் மஸ்க்.

-கார்த்திகேயன்
நிறுவனர்: Fastura Technologies
www.Fastura.com 

முந்தைய வாரம்:

ஸ்டார்ட்அப் தொடங்க இந்தக் குணம் அதிஅவசியம்!

From around the web