இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்! தமிழர்களுக்கு பின்னடைவா?

ஒருவழியாக இலங்கை நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.. பெரிதும் எதிர்பார்த்த முடிவுகள்தான் என்றாலும் இதன் உட்கிடையான சில விசயங்களை பேசலாம்.. ராஜபக்ஷேக்களின் முற்றதிகாரமும் சிங்கள பேரினவாதமும் இணைகரங்களாக இனி தீவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும். மகிந்தாவின் பொதுஜன பெரமுனா மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை என்ற இலக்கில் களமிறங்கினாலும் அதை கடக்காமல் ஆனால் நெருங்கியிருக்கிறது. சஜித் ப்ரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி மோசமான தோல்வியை பெற்று தெற்காசியாவின் குறிப்பிடத்தக்க
 

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்! தமிழர்களுக்கு பின்னடைவா?ஒருவழியாக இலங்கை நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன.. பெரிதும் எதிர்பார்த்த முடிவுகள்தான் என்றாலும் இதன் உட்கிடையான சில விசயங்களை பேசலாம்..

ராஜபக்ஷேக்களின் முற்றதிகாரமும் சிங்கள பேரினவாதமும் இணைகரங்களாக இனி தீவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும். மகிந்தாவின் பொதுஜன பெரமுனா மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை என்ற இலக்கில் களமிறங்கினாலும் அதை கடக்காமல் ஆனால் நெருங்கியிருக்கிறது. சஜித் ப்ரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி மோசமான தோல்வியை பெற்று தெற்காசியாவின் குறிப்பிடத்தக்க அரசயநய அரசியலாளரான ரணில் விக்ரமசிங்கே தனது கோட்டையான கொழும்பு தேர்தல் மாவட்டத்திலேயே தோல்வியை தழுவியிருக்கிறார்.. மற்றொரு பாரம்பரிய கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுவடின்றி மறைய மைய நீரோட்ட தேசியக்கட்சியான அதன் ஒரே உறுப்பினர்(அங்கஜன் ராமநாதன்) தமிழ்த்தேசியக்களமாக யாழ்பாண தேர்தல் மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த தேர்தல் மரபான இரு தேசியக்கட்சிகளும் தத்தமது புதிய பொறியமைவிற்குள் (ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி- ஸ்ரீலங்கா மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி- ஐக்கிய மக்கள் சக்தி) ஐக்கியப்படுத்திக்கொண்டுள்ள முக்கிய திருப்பத்தின் சாட்சியாகி இருக்கிறது. மேலும் ராஜபக்ஷேக்களின் முற்றதிகாரத்திற்கு எதிர்நிலையிலான அரசியல் தரப்பின் தலைமைத்துவத்தை சஜித்ப்ரேமதாசவிற்கு வரலாறு வழங்கியிருக்கிறது.

அவர் அதற்கான தகுதிப்பாடுகள் கொண்டவரும் கூட.. நிதானமான அணுகுமுறையும், அரவணைக்கும் அரசியல் பண்புகளும், நவஇலங்கைக்கான நல்லிணக்கத்தின் குரலில் பேசுபவருமான; அவர் எதிர்வரும் காலங்களில் தீவின் இனமுரண்களை நேர்ப்படுத்தி வருங்காலத்திற்கான பரஸ்பர நன்னம்பிக்கைக்கான அரசியலை நடத்த வேண்டும்.. பெரும்பான்மைவாதத்தின் அரசியல் பொறியமைவுகள், பிரச்சார இயந்திரங்களின் கூட்டுத்தாக்குதலை எல்லா நாடுகளிலும் தாராளவாத சமூக ஜனநாயகத்தலைவர்கள் எதிர்கொள்கின்றனர்.. சஜித்தும் இந்த சவால்மிக்க களத்திற்குள் நிற்கிறார்..

இன்னொருபுறம் தமிழ் வாக்குகள் மோசமாக சிதறியிருக்கின்றன. தமிழர்களின் பிரதான அரசியல்தரப்பான தமிழ்தேசிய கூட்டமைப்பும் பாரிய சறுக்கலை சந்தித்திருக்கிறது. அம்பாறையில் அதன் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்திருக்கிறது.. முந்தைய கணக்கில் ஆறு ஆசனங்களை(16-10) பறிகொடுத்திருக்கிறது. யாழ்பாணம், மட்டக்களப்பு, வன்னி ஆகிய தேர்தல் மாவட்டங்களில் அதன் வாக்குவிகிதங்களில் பாரிய சரிவைக்காண முடிகிறது..

மாவை சேனாதிராஜா உள்ளிட்ட அதன் முக்கியத்தலைவர்கள் தோல்விமுகம் கண்டிருக்கிறார்கள்.. தமிழ்தேசிய அரசியல் பேசுவோரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவு ஒருபுறமிருக்க ராஜபக்ஷேக்களுக்கு நெருக்கமான ஈழமக்கள் ஜனநாயக கட்சி அதன் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தவிரகூடுதலாக ஒரு இருக்கையை வென்று வாக்குவிகிதத்திலும் கணிசமாக முன்னேறி இருக்கிறது.

மலையகத்தில் மறைந்த ஆறுமுகம் தொண்டைமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கணிசமான செல்வாக்கை மீட்டெடுத்திருக்கிறது. ஜீவன் தொண்டைமான் அடுத்த மகிந்தவின் அரசில் இடம்பெற்று 29 வயதில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்கே வின் சாதனையை முறியடிக்ககூடும்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை மனோ கணேசனின் வெற்றி தக்க வைத்திருக்கிறது. இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் பெரிய மாற்றங்களின்றி நீடிக்கிறது.

தமிழ்தேசியக்கூட்டமைப்பின் சறுக்கல் அரசு ஆதரவு தமிழ்க்குழுக்கள், கடும்போக்கு தமிழ் தேசிய தரப்பினர் மற்றும் கூட்டமைப்பிற்குள்ளான உள் முரண்கள் ஆகிய மும்முனைத்தாக்குதலின் விளைவு. ஆனால் எதுவாயினும் கூட்டமைப்பின் பின்னடைவு தமிழ்த்தரப்பின் பேர வலிமையை குறைத்திருக்கிறது என்பதிலும் இது எதிர்மறையானது என்பதிலும் ஐயமில்லை. அரசியல் மீட்சிக்கான பாதை அத்தனை சுலபமுமல்ல..

– இரா. முருகானந்தம்

From around the web