வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா... மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல்!

 
வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா... மொத்தமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல்!

பல்வேறு வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் 2021 ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் தேவையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், கொல்கத்தா அணியில் பல வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள் தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
 
கொல்கத்தா வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் அவர்களுடன் நெருக்கமாக இருந்த வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் சிஎஸ்கே அணியிலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளர் லக்‌ஷ்மிபதி பாலாஜி, அணியின் பேருந்து கிளீனர் என மூவருக்கும் தொற்று இருப்பது உறுதியானதால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து கொல்கத்தா - பெங்களூா் அணிகள் நேற்றிரவு மோத இருந்த ஆட்டமும் நாளை நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே - ராஜஸ்தான் ஆட்டமும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சன்ரைசர்ஸ் அணியையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஹா, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தகவல் அளித்துள்ளார்.

கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்திய வீரரான அஸ்வினும் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். அவரது மனைவி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web