ஆன்மீகமும் மதமும்.. சித்தர் வழியில் ஆத்ம விழிப்பு!

சமீப ஆண்டுகளில் நம் சமூகத்தில் நடக்கும் மதம் சார்ந்த அவலங்களைக் காணும் போது, இதுவரை வைத்திருந்த இறையாண்மை மேல் சந்தேகம் வரத் துவங்கியிருந்தது. பேராசைக் கொண்டோர் தங்களின் அரசியல் லாபத்திற்காக, அதிகாரப் பசிக்காக, பிறர் உழைப்பில் தாம் பிழைப்பதற்காக மத வெறியைத் தூண்டிவிட்டு, அதைக் கொண்டு மக்களிடையே வேற்றுமைகளைத் உண்டாக்கி, கலவரங்களும், கொலைகளும், கற்பழிப்புகளும், செய்து வருவதைக் கண்டு அச்சமும், கூச்சமும் பெருகிற்று. குறிப்பாக 2018ல்,காஷ்மீர் மாநிலம் கத்துவாவில், குதிரை மேய்க்கப் போன ஒரு 8 வயது
 

மீப ஆண்டுகளில் நம் சமூகத்தில் நடக்கும் மதம் சார்ந்த அவலங்களைக் காணும் போது, இதுவரை வைத்திருந்த இறையாண்மை மேல் சந்தேகம் வரத் துவங்கியிருந்தது. பேராசைக் கொண்டோர் தங்களின் அரசியல் லாபத்திற்காக, அதிகாரப் பசிக்காக, பிறர் உழைப்பில் தாம் பிழைப்பதற்காக மத வெறியைத் தூண்டிவிட்டு, அதைக் கொண்டு மக்களிடையே வேற்றுமைகளைத் உண்டாக்கி, கலவரங்களும், கொலைகளும்,  கற்பழிப்புகளும், செய்து வருவதைக் கண்டு அச்சமும், கூச்சமும் பெருகிற்று.

குறிப்பாக 2018ல்,காஷ்மீர் மாநிலம் கத்துவாவில், குதிரை மேய்க்கப் போன ஒரு 8 வயது இஸ்லாமியப் பெண் குழந்தையை கடத்தி, வன்கொடுமை செய்து, கொன்றச் சம்பவம் நம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அந்தப் பெண்குழந்தை அந்த கொடூரமான நாளன்று வீட்டுக்கு திரும்பாதலால் ஊராரும், பெற்றோரும் தேடி அலைந்திருக்கின்றனர். சில நாட்கள் கழித்து அந்தக் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட போது அந்த குழந்தையை அங்கிருந்த இந்துக் கோவிலுக்குள் வைத்து தான் அரக்கர்கள் சிலர் சிதைத்திருக்கிறார்கள் என தெரிய வந்தது.

அப்போது அந்தக் குழந்தையின் தந்தை நம் நெஞ்சே பிளக்குமாறு கதறியது என்னவென்றால்
“எல்லா இடத்திலும் தேடினோம். ஆனால் அந்தக் கோவிலுக்குள் சாமி இருப்பதால் தன் பிள்ளைக்கு அங்கு தீங்கேதும் நேராது, அங்கு அவள் இருக்க வாய்ப்பில்லை என நம்பி அங்கு மட்டும் தேடாமல் விட்டுவிட்டோம்”.

ஒரு குழந்தையை எந்தக் கொடூரத்திற்கு ஆளாக்கக் கூடாதோ அதற்கு ஆளாக்கிவிட்டு, பின் அதை மதவாதப் பிரச்சனையாக மாற்ற முயன்ற அசிங்க அரசியல் வர்க்கத்தை, உடன் சேர்ந்து சதி செய்த அதிகார கொடூரத்தை என்ன சொல்வது!  தூணிலும், துரும்பிலும் தெய்வம் இருக்கிறதென்று நம்பும் நம்மை, கோவிலுக்குள் இருந்த தெய்வம் கைவிட்டுவிட்ட நிலையை எங்குச் சொல்லி அழுவது.

இருந்தாலும் இறைவனையும், வாழ்க்கை சித்தாந்தங்களையும் பின்பற்றி தமிழ் மண்ணில் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப் போன வாழ்க்கை நெறிகள், தத்துவங்கள், மனித நேயத்தின் இன்றியாமை, சமகாலத்தில் நாம் திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியம். நாம் வந்த வரலாற்றில் நம் முன்னோர்கள் பலர் தாம் ஈட்டியப் பொருளை பிறருக்கு தானம் செய்வதற்கே பயன்படுத்தினர். நேர்மைத் தவறாது பொருள் ஈட்டினர். ஊழல் செய்து சந்ததிகளுக்கு சொத்து குவிப்பதற்கல்ல. அரசுப் பதவிகள் பெருவதற்கல்ல. பிறரை அடக்கி ஆள்வதற்கல்ல.

“மாடுண்டு; கன்றுண்டு; மக்களுண்டு என்று மகிழ்வதெல்லாம்
கேடுண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே!
ஓடுண்டு; கந்தையுண் டுள்ளேயெழுத் தைந்தும் ஓதவுண்டு
தோடுண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையு முண்டே!”

என்றுப் பாடிய சித்தர் பட்டினத்தார், பெரும் செல்வந்தராக வாழ்ந்தவர். பிறகு கந்தையுடுத்திக் கொண்டு பிச்சையெடுத்து உண்டு, சிவனடி எய்தியவர்.

“காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” எனத் தன் வளர்ப்பு மகனான சிவபெருமான் அவருக்கு எழுதிவைத்து பூமிவிட்டு மறைந்த பின், அவர் தம் இல்லறம் துறந்து, ஆடம்பரம் விலக்கி, துறவி கோலம் பூண்டு சிவத்தொண்டாற்றி நமக்கு பாடி வைத்துப் போன இலக்கியப் பாடல்கள் நிறைய.

இப்படி பலச் சித்தர்கள் நம் பூமியில் பிறந்து நம்மை அறவழியில் நடக்க எளியத் தமிழில் நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளனர். அவர்களின் ஆன்மீக வழிகாட்டல்களை, நாம் விட்டு விலகி நிற்பது கூடாது. நம் அடுத்தச் சந்ததிகளுக்கு அவற்றை நாம் அறியாமல் போகச் செய்வது பெரும் பாவம்.

சமகாலத்தில் கொடூரங்கள் அதிகரிக்க அதிகரிக்க நாம், நம் தமிழ் முன்னோர் வழிகாட்டிப் போன மனித நேயம் நிறைந்த ஆன்மீகத்தை, சைவ இலக்கியங்களை, சித்தாந்தங்களை கற்க வேண்டும். அவற்றை கடைப்பிடிக்க வேண்டும். நம் சமூகத்திற்கும், சந்ததிக்கும் அவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். சித்தர்கள் பாடல்கள் எளிமையானவை. இலகுவாக புரியும் மொழியில் எழுதப்பட்டவை. நம்மை சிந்தித்து செயல்படத் தூண்டுபவை.

உடலில் காவி கட்டிக் கொண்டு, நெற்றியில் குங்குமமிட்டுக் கொண்டு, சாமிப் பெயரைச் சொல்லி சமூகத்தில் கலவரம் தூண்டுவதல்ல இறையாண்மை, ஆன்மீகம் என்பது. இதை நாம் புரிதல் வேண்டும். பிறருக்கும் உணர்த்துதல் வேண்டும். நாம் எவரும் இப்பூமியில் நிரந்தரமாக வாழப்போவதில்லை. இப்பூமிவிட்டு போகும் போது எதையும், நாம் எவரும் எடுத்துப் போவதுதில்லை. அதனால் அளவுக்கு மீறிய பேராசைகளை ஒழிப்போமாக.

இதோ பட்டினத்தார் கூறுகிறார்,

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்

இப்பூமியில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் இறக்கும். விலங்குகள், பறவைகள், மனிதர் இப்படி யாவும், யாவரும்.  காலை தோன்றிய ஆதவன் மாலையில் காண்பதில்லை.  அமாவாசையில் காணாத நிலா பௌர்ணமியில் முழுமையாகத் தோன்றுகிறாள். முழுமையாகத் தோன்றிடும் நிலவு தேய்பிறையில் பிறையாகிறாள்.  நம் உணர்வுகளை நாம் மறக்கிறோம். கோபம் மறந்து கொஞ்ச நேரத்தில் மன்னிப்பு கேட்பதுபோல். என்றோ செய்த உதவியை இன்றும் நினைக்கிறோம். மறதியும், நினைவும் மனிதர்க்குரிய குணம்.
ஒன்று சேரும் நாம், பின் பிரியவும் செய்கிறோம். தாய்  தந்தை சேர்ந்து பெற்றப் பிள்ளை, வளர்ந்து பெற்றோரை பிரிகிறது.

மாறுவதே வாழ்க்கை. இப்படி நித்தியமில்லாமல் மாறும் வாழ்க்கையை நாம் அறவழியில் செலவு செய்யாமல், வாழ்க்கைத் தத்துவங்கள் புரியாமல் வாழ்தல் நலம் பயக்காது.

ஆன்மீகம் என்பதற்கு மதம் என்றப் பெயரைச் சூட்டி, தம் அதிகாரப் பசிக்கும், அழிவு வெறிக்கும் பயன்படுத்துபவர் வாசற்கல்லாவாரே ஒழிய, ஒரு போதும் ஈசனுக்கு உகந்தக் கல்லாகமாட்டார். சித்தர் வழிச் சிந்திப்போம்..சிந்தையில் திண்மை நிறைப்போம்…

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

From around the web