சொந்த உழைப்பால் முன்னேறி, தவறான வழிகாட்டுதலால் கொலைக் குற்றவாளியான ஓட்டல் சரவணபவன் ‘அண்ணாச்சி’!

சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் நிறுவனர் ‘அண்ணாச்சி’ ராஜகோபால் கவலைக்கிடமான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, ஜுலை 7ம் தேதிக்குள் சரணடையுமாறு கெடு விதித்தது. உடல்நலக்குறைவு என்ற காரணத்தைக் கூறி சரணடைவதை தள்ளிப்போடுமாறு மனு செய்தார். அதை மறுத்த உச்ச நீதிமன்றம் உடனடியாக சரணடைய உத்தரவு பிறப்பித்தது. அதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
 

சென்னை: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் நிறுவனர் ‘அண்ணாச்சி’ ராஜகோபால் கவலைக்கிடமான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து, ஜுலை 7ம் தேதிக்குள் சரணடையுமாறு கெடு விதித்தது. உடல்நலக்குறைவு என்ற காரணத்தைக் கூறி சரணடைவதை தள்ளிப்போடுமாறு மனு செய்தார். அதை மறுத்த உச்ச நீதிமன்றம் உடனடியாக சரணடைய உத்தரவு பிறப்பித்தது.

அதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால், ஆம்புலன்ஸில் வந்து சென்னை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வருவதால், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் உத்தரவிடப் பட்டது. அங்கு அனுமதிக்கப்பட்ட ராஜகோபாலின் உடல்நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது.

வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ராஜகோபாலின் மகன்கள், ஓட்டல் ஊழியர்கள் அவரைப் பார்த்து வருகிறார்கள். சென்னை கே.கே நகரில் மளிகைக் கடை நடத்தி வந்த ராஜகோபால், மளிகைக் கடை வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதால் அதை மூடிவிட்டு, கையிருப்பாக இருந்த மளிகைப் பொருட்களைக் கொண்டு கே.கே.நகரில் ஓட்டல் சரவணபவன் என்ற பெயரில் முதல் உணவகத்தை ஆரம்பித்தார்.

சென்னையில் உள்ள சைவ உணவகங்களில் முதலிடத்தைப் பிடித்தவர், கிளைகளை உருவாக்கி ‘சென்ட்ரல் கிச்சன்’ என்ற திட்டத்தை முதன் முதலில் அறிமுகப் படுத்தினார். கே.கே நகர் ஓட்டலிலிருந்தே சாம்பார், கூட்டு, பொரியல், இட்லி மாவு, வடை மாவு என அன்றாடம் கிளை ஓட்டல்களுக்குச் சென்றது. எல்லா கிளைகளிலும் ஒரே சுவை இருக்க வேண்டும் என்று எண்ணி அவர் செய்த ஏற்பாடு அது. தினசரி ஒவ்வொரு உணவையும் தானே ருசி பார்த்து தரத்தை உறுதி செய்தவர்.

பின்னர், சென்னைக்கு வெளியே காஞ்சிபுரம் வெளிநாடுகள் என மிகப்பெரிய உணவக சாம்ராஜ்யமாக விரிவுபடுத்தினார். ஊழியர்களுக்கு தங்குமிடம், சம்பளத்துடன் பிள்ளைகளுக்கு கல்வி உதவியும் செய்து வருகிறார். இன்று வரையிலும் யூனியன் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அங்கே பணிபுரிந்து வருவது குறிப்பிடத் தக்கது.

கிருபானந்த வாரியாரின் சீடராக வலம் வந்தவர், கோவில்களுக்கு பல திருப்பணிகளையும் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில்  ‘வன திருப்பதி’ என்ற பெரிய ஆலயத்தையும் உருவாக்கியுள்ளார். பிற மாவட்டங்களிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வன திருப்பதிக்கும் சென்று வருகிறார்கள்.

சொந்த உழைப்பால் முன்னேறினாலும், ஜோதிடர்களை முழுமையாக நம்பத் தொடங்கினார். ஜோதிடர்களின் ஆலோசனைப் படி இரண்டாம் திருமணம் செய்தவர், மூன்றாவதாக ஜீவஜோதியை மணக்க முயற்சி செய்தார். 

அதற்கு தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார்.சாந்தகுமார் கொலை வழக்கு தொடர்பான செய்திகள், அப்போது பத்திரிக்கைகளில் பரபரப்பாக வெளியாகியது.

சொந்த உழைப்பால் முன்னேறிய ‘அண்ணாச்சி’ ராஜகோபால் ஜோதிடர்களை முழுமையாக நம்பியதால் கொலைக் குற்றவாளியாகிப் போனார் என்று கூட சொல்லலாம்.

-வணக்கம் இந்தியா

From around the web