ரஜினியின் கூட்டணி மாஸ்டர் ப்ளான்.. கமலுக்கு இடம் உண்டா?

சென்னை: தனியாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறைகூவல் விடுத்த ரஜினியின் கூட்டணி ப்ளான் பற்றி தகவல்கள் கசிந்துள்ளது. தனித்துப் போட்டி என்று சொன்னவர் கூட்டணிக்கு தயாராகி விட்டாரா?. முதலில் ஒரு ப்ளாஷ் பேக்: ரஜினி மக்கள் மன்றத்தை அறிவித்து வேலூர் மாவட்டச் செயலாளரையும் மாவட்ட நிர்வாகிகளையும் முதலில் நியமித்தார். தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி என மளமளவென்று தமிழ்நாடு முழுவதற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். ஒன்றியம், நகரம், கிராமம், பூத் கமிட்டி என நியமனங்கள் தொடர்ந்தது. நாலாபக்கமும்
 

ரஜினியின் கூட்டணி மாஸ்டர் ப்ளான்.. கமலுக்கு இடம் உண்டா?சென்னை: தனியாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறைகூவல் விடுத்த ரஜினியின் கூட்டணி ப்ளான் பற்றி தகவல்கள் கசிந்துள்ளது. தனித்துப் போட்டி என்று சொன்னவர் கூட்டணிக்கு தயாராகி விட்டாரா?. 

முதலில் ஒரு ப்ளாஷ் பேக்: ரஜினி மக்கள் மன்றத்தை அறிவித்து வேலூர் மாவட்டச் செயலாளரையும் மாவட்ட நிர்வாகிகளையும் முதலில் நியமித்தார். தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி என மளமளவென்று தமிழ்நாடு முழுவதற்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். ஒன்றியம், நகரம், கிராமம், பூத் கமிட்டி என நியமனங்கள் தொடர்ந்தது.

நாலாபக்கமும் பாசிட்டிவான தகவல்கள் வந்து கொண்டிருந்தது. பூத் கமிட்டி பற்றி பெருமையாகப் பேசப்பட்டது. 90 களிலேயே ரஜினி ரசிகராக வெளிப்படையாக அறியப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சத்தமில்லாமல் ஒரு வேலையைச் செய்தார். குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு நேரிடையாக விசிட் செய்தவர், கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட தகவல்களுடன் சென்னை திரும்பியதும் சந்தித்தது தமிழருவி மணியனைத் தான்.

“வெளியே வரும் தகவல்களுக்கும், மாவட்ட அளவில் நடைபெறும் சம்பவங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இப்போதே அமைச்சர் கனவுகளுடன் திராவிடக் கட்சிகளுக்கு கொஞ்சமும் சளைக்காமல் கோஷ்டி சேர்க்கிறார்கள். உண்மையான ரசிகர்கள் புறக்கணிக்கப்பட்டு, தங்களுக்கு சாதகமானவர்களை நியமிக்கிறார்கள். அதிகார மையம் உருவாகிறது. திமுகவுடன் தொடர்புடையவர்களும் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள்.  ஒருவேளை தங்கள் பலத்தைக் காட்டி பேரம் பேசி, கட்சி மாறினால் அந்த மாவட்டம் மொத்தமும் ஓட்டை விழும். 

 
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் செயலாளர்களை அமைத்தாலே போதும். மாவட்ட அளவில் நிர்வாகிகள் இல்லாமல், அதிகார மையங்கள் உருவாகுவதை தடுத்து மாற்று அரசியலுக்கும் இது உதவியாக இருக்கும்”, என்று தமிழருவி மணியனிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இருவருக்கும் தமாகா காலம் முதலாகவே நல்ல உறவு உண்டு. 
 
சற்று அதிர்ச்சி அடைந்தாலும்,  “பத்திரிக்கையாளர் என்பதால் தயக்கமில்லாமல் உண்மையைப் போட்டு உடைக்கிறீர்கள்” என்று சொன்ன தமிழருவி மணியன், ரஜினியிடமும் அழைத்துச் சென்றுள்ளார். இருவரிடமும் தகவல்களைக் கேட்டுக் கொண்ட ரஜினிகாந்த் தொகுதிச் செயலாளர் திட்டம் நல்லா இருக்கு, கட்சி ஆரம்பிக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லியுள்ளார்.

ராஜு மகாலிங்கம் ,டாக்டர்.இளவரசன், தூத்துக்குடி ஸ்டாலின் என அடுத்தடுத்து வந்தவர்கள் எல்லோருமே ஒரு அதிகார மையமாக உருவெடுத்ததும், அவர்களை   ரஜினிகாந்த் ஓரங்கட்டி வைத்துள்ளதும் ஊரறிந்த ஒன்றாகும். படையப்பாவில் “ஒரு தடவை தவறிடுச்சு.. உஷாராகிட்டேன்” என்று சொன்னது மாதிரி மிகத் தெளிவான முடிவெடுக்கிறாராம் ரஜினிகாந்த்.

தமிழருவி மணியனிடம் அந்தப் பத்திரிக்கையாளர் சொன்ன திட்டத்தைப் பற்றி விவாதித்துள்ளாராம். அதிகார மையம் உருவாகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். உண்மையாகவே மக்களுக்குப் பணியாற்றும் எண்ணம் உள்ளவர்களை கண்டெடுத்தாலே தன்னுடைய லட்சியம் பாதி நிறைவேறி விடும் என்று நம்புகிறாராம். மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள மக்கள் பணியாற்றுபவர்களை தொகுதிவாரியாக அடையாளம் காணும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.  234 தொகுதிகளிலும் 1 செயலாளர், 2 இணைச் செயலாளர்கள், அந்த தொகுதிக்குட்பட்ட நகர, ஒன்றிய, கிராம அளவிலான நிர்வாகிகள் என்பது யோசனையாம்.

எம்.ஜி.ஆர் மன்றம், ஜெயலலிதா பேரவை போல் ரஜினி மக்கள் மன்றம் துணை அமைப்பாகச் செயல்படுமாம். கூட்டணி என்பதில் தான் ரஜினிகாந்தின் ராஜ தந்திரத் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது. 234 தொகுதிகளிலும் ஒரே சின்னம் தான் என்பதில் மாற்று கிடையாதாம். அப்படியென்றால் பெரிய கட்சிகள் வர வாய்ப்பில்லையே.

கட்சிகளைச் சேர்க்கப்போவதில்லை. ஆனால் அந்தந்தக் கட்சிகளில், ஊழல் வழக்குகள் இல்லாமல், அப்பழுக்கற்ற செயல்வீரர்களாக இருப்பவர்களை கட்சியில் சேர்த்துக் கொள்வது தான் திட்டம். அவர்களுடைய செயல்திறனைப் பொறுத்து சட்டசபை அல்லது பாராளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படும். ஒரு சிலருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரப்படும். இப்படி வரும் அனுபவமிக்க அரசியல் தலைவர்கள், மண்டல நிர்வாகிகளாக நியமிக்கப் படுவார்களாம். இவர்களுடைய வழிகாட்டுதல்கள் படி தொகுதி நிர்வாகிகளின் தேர்தல் பணி முடுக்கி விடப்படுமாம். அதிமுகவிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன், சைதை துரைசாமி, காங்கிரஸிலிருந்து கராத்தே தியாகராஜன், திமுகவிலிருந்து நீக்கப்பட்டாலும் திமுகக்காரராகவே வலம் வரும் மு.க. அழகிரி, திமுகவில் புதிதாகச் சேர்ந்துள்ள தங்கத் தமிழ்ச் செல்வன், டிடிவி தினகரனின் வலது கரமாக விளங்கும் வெற்றிவேல் என ரஜினி ஆதரவாளர்கள் பட்டியல் மிகவும் நீளமாம். கரூர் செந்தில் பாலாஜியும் முதலில் தூது விட்டது ரஜினிக்குத் தானாம். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் மழுப்பலான பதிலே கிடைத்ததாம். அதன் பிறகு தான் திமுகவுக்கு போனதாகக் கூறப்படுகிறது. 

யாரும் எதிர்பார்க்க முடியாத தலைவர்கள் பலரும் லிஸ்டில் இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. பாஜகவிலிருந்து மட்டும் யாரையும் சேர்க்கும் திட்டம் இல்லையாம். ரஜினிக்கு அடுத்த இடத்தில் தமிழருவி மணியனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படுவதிலும் மாறுதல் இல்லையாம். புதிதாகச் சேரும் தலைவர்களுக்கு, ஈகோ இல்லாமல் மற்றவர்களுடன் அரவணைத்துச் செல்லும் பக்குவம் இருக்கிறதா என்பதும் ஒரு முக்கிய தகுதியாக இருக்குமாம்.

இப்படி மண்டலம் வாரியாக எதிர் கட்சிகளிலிருந்து முன்னணித் தலைவர்களை அவர்களுடைய ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைப்பது தான் ரஜினியின் கூட்டணித் திட்டமாம். தேர்தல் நேரத்தில் எதிரணியினரை திணறவைப்பதுடன், மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பும் ரஜினி மீது திரும்பும் வகையில் மாஸ்டர் ப்ளான் தயாராகிறதாம். ரஜினியின் இந்தத் திட்டத்தில், மீண்டும் மீண்டும் ரஜினியுடன் கூட்டணிக்கு முயன்று வரும் கமல் ஹாசனுக்கு இடம் இருக்கிறதா?.

நான்கு சதவீதம் வாக்குகள் வாங்கினாலும், ரஜினி களம் இறங்கும் போது காணாமல் போய்விடுவோம் என்பதை கமல்ஹாசன் நன்றாகவே உணர்ந்துள்ளாராம். அவர் எதிர்ப்பார்த்த அரசியல் கைகூடவில்லை என்பதால், தப்பித்து கரையேறுவது எப்படி என்பதில் அவருடைய கவனம் திரும்பியுள்ளதாகத் தெரிகிறது. மற்ற கட்சித் தலைவர்கள் போல் ரஜினி கட்சியில் சேர்ந்து, கட்சியை இணைத்தால் டெல்லிக்கு செல்ல கமல்ஹாசனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். சட்டமன்ற வெற்றிக்குப் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலிலே கமல் ஹாசனை எம்.பி. ஆக அனுப்பி வைக்க ரஜினிகாந்துக்கு தயக்கம் இருக்காது என்கிறார்கள். தன்னுடைய நண்பரை முக்கிய இடத்தில் வைத்துப் பார்ப்பதில் ரஜினிக்கும் மகிழ்ச்சி இருக்கும். தமிழ்நாட்டில் ரஜினி, டெல்லியில் கமல் என்ற அணுகுமுறையில் நடைமுறைச் சிக்கல்களும் இருக்காது.

புதிய அணுகுமுறையில், மக்கள் மத்தியில் உள்ள தன்னுடைய தனிப்பட்ட செல்வாக்குடன்,  அரசியல் அனுபவமிக்கவர்களையும், நேரிடையாக மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவர்களையும்  ஒருங்கிணைத்து வெற்றி வாகை சூடுவதே ரஜினிகாந்தின் மாஸ்டர் ப்ளான் என்கிறார்கள்.

– ஆர்டிஎக்ஸ்

From around the web