வழிகாட்டும் ரஜினி மக்கள் மன்றம்!

சென்னை: ஒரு நடிகராக தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டதும், தனக்கு கொட்டிக் கொடுத்த மக்களுக்கு தன் வருமானத்தில் ஒரு பகுதியை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தார் ரஜினிகாந்த். கல்வி உதவி, ஏழைகளுக்கு பண உதவி, திருமண உதவி, மருத்துவ உதவி என எந்த விளம்பரமும் உள்நோக்கமும் இல்லாமல் இப்போதுவரை அந்த உதவிகளை அவர் செய்து வருகிறார். உதவித் தொகையை தரும்போதே, வெளியில் சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனையோடுதான் ரஜினி உதவிக் கொண்டிருக்கிறார். அவரது வழியில்தான்
 

வழிகாட்டும் ரஜினி மக்கள் மன்றம்!சென்னை: ஒரு நடிகராக தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டதும், தனக்கு கொட்டிக் கொடுத்த மக்களுக்கு தன் வருமானத்தில் ஒரு பகுதியை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தார் ரஜினிகாந்த். கல்வி உதவி, ஏழைகளுக்கு பண உதவி, திருமண உதவி, மருத்துவ உதவி என எந்த விளம்பரமும் உள்நோக்கமும் இல்லாமல் இப்போதுவரை அந்த உதவிகளை அவர் செய்து வருகிறார். உதவித் தொகையை தரும்போதே, வெளியில் சொல்ல வேண்டாம் என்ற நிபந்தனையோடுதான் ரஜினி உதவிக் கொண்டிருக்கிறார்.

அவரது வழியில்தான் அவர் தொண்டர்களும் உதவிக் கொண்டுள்ளனர். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவிப்பதற்கு முன்பே, அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்றெல்லாம் முழுமையாகத் தெரியாமலே, மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றி வந்தவர்கள்தான் ரஜினி ரசிகர்கள்.

2017 டிசம்பர் 31-ம் தேதி அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிட்டதிலிருந்து இந்த உதவிகளை, நலத்திட்ட பணிகளை பெருமளவில் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

அரசுப் பள்ளிகளைச் சீரமைத்தல், பொதுப் பயன்பாட்டில் உள்ள பூங்காக்கள், நடைமேடைகளைச் சீரமைத்தல், ஏராளமான கல்வி உதவிகளைச் செய்தல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் என அவர்களின் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கிறது.

இதில் உச்சம் தொட்டது, கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு ஆயிரக்கணக்கில் திரண்டு சென்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உதவிகளை, அதுவும் உடனடியாகச் செய்ததுதான். அரசு கூட நிவாரணப் பணிகளில் தாமதம் செய்து கொண்டிருக்க, ரஜினிகாந்த் உத்தரவிட்ட அடுத்த சில மணி நேரங்களில் டெல்டா மாவட்டங்கள் முழுக்க ரஜினி மக்கள் மன்றத்தினர் நிறைந்து நின்று உதவிக் கரம் நீட்டினர். இன்றுவரை டெல்டா மாவட்ட மக்கள் அதை நன்றியோடு நினைவு கூறுகிறார்கள்.

இப்போது கடும் கோடை, சுட்டெரிக்கும் வெயில், தாங்க முடியாத தண்ணீர் பஞ்சம். தலைநகர் சென்னையில் தொடங்கி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் குடிக்கும் நீருக்கே வழியில்லாமல் மக்கள் காலிக் குடங்களுடன் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் தாகம் தணிக்கும் வேலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து களமிறங்கி உதவிக் கொண்டிருப்பது சகல வசதிகள், அதிகாரங்களை வைத்துள்ள அரசு எந்திரமல்ல. ரஜினி மக்கள் மன்றத்தினர்தான். மக்களின் அத்தியாவசிய தேவையான தண்ணீர் பிரச்சினையை முடிந்த வரை தீருங்கள் என ரஜினிகாந்த் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து மாவட்டந்தோறும் லாரிகளில் தினமும் 5 முதல் 10 லட்சம் லிட்டர் குடிநீரை இன்றுவரை தடையின்றி கொடுத்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் தொடங்கிய இந்த குடிநீர் வழங்கும் பணி, இன்று சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தனைக்கும் மீடியா வெளிச்சமோ, செய்தித்தாள்களில் விளம்பரமோ எதுவும் இல்லை. கூடவே மாவட்டந்தோறும் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளையும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தப் பணி முதலில் தொடங்கப்பட்டுள்ளது.

வழிகாட்டும் ரஜினி மக்கள் மன்றம்!

இப்போது தங்கள் களப்பணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இருக்கிற நீர்நிலைகளைச் சுத்தம் செய்தல், தூர் வாருதல் மற்றும் பாதுகாப்பதுதான் அந்த பணி. அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களைத் துணைக்கழைத்துக் கொண்டு, தாங்களாகவே களமிறங்கியுள்ளனர்.

சென்னை அருகே உள்ள நங்கநல்லூர் ஏரியை சுத்தம் செய்துள்ள இவர்கள், அடுத்து சிட்லபாக்கத்தில் குப்பையாகக் கிடக்கும் ஏரியைச் சுத்தம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு இந்த வேலையைத் தொடங்க உள்ளனர். இன்னும் பல ஏரிகளை அடையாளம் கண்டு. சுத்தப்படுத்தும் பணியைத் தொடரவிருப்பதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.

“ஏதோ பாவம்… அவங்களால முடிஞ்சதை கைகாசை செலவழிச்சு செய்யறாங்க. இருக்கிற ஏரிகளை நாம தூர் வாரலாம், சுத்தம் பண்ணலாம். ஆனா ஆக்கிரமிப்பிலுள்ள ஏரிகள், கால்வாய்கள், ஆறுகளை மீட்க வேண்டியது அரசாங்க வேலை இல்லையா. அதிகாரத்திலுள்ளவர்கள் இப்போதாவது அதைச் செய்யலாமே,” என்பது பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.

ஆட்சியில் இருக்கிறோமா இல்லையா என்பதல்ல முக்கியம். மக்கள் பணிக்கென வந்த பிறகு தாமதிக்காமல் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ரஜினி மக்கள் மன்றத்தினரைப் பார்த்து, பெரிய கட்சிகளும் இலவச குடிநீர் விநியோகம், தூர் வாருதல் என மெல்ல இறங்க ஆரம்பித்துள்ளனர்.

 

From around the web