சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ – வியேக்கஸ் எஸ்பெரன்சா !

கடலும் மலையும் – தீவுப் பயணம் 17 அப்பாவும் பொண்ணும் கடலில் குதித்து விழுந்து, பயோ பே நுண்ணுயிர்களால் ஒளிர்ந்து, காயக்கில் கரை வந்து சேர்ந்தோம். எலெக்ட்ரிக் போட்டில் சென்று வந்த அம்மாவும் பையனும் அங்கே காத்திருந்தார்கள். ஒரே வேனில் அனைவரும் அங்கிருந்து கிளம்பி இருட்டில் அந்தக் காட்டுப்பாதையில் பயணித்து எஸ்பெரன்சாவுக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து அழைத்தால், ரிசார்ட் வேன் வந்து அழைத்துச் செல்லும். செம்ம பசி.. முதல்ல சாப்பிட்டுடலாம்னு நோட்டம் விட்டா வரிசையா ரெஸ்டாரண்டுகள்
 

கடலும் மலையும் – தீவுப் பயணம் 17

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமி போர்ட்டோ ரிக்கோ –  வியேக்கஸ் எஸ்பெரன்சா !

ப்பாவும் பொண்ணும் கடலில் குதித்து விழுந்து, பயோ பே நுண்ணுயிர்களால் ஒளிர்ந்து,  காயக்கில் கரை வந்து சேர்ந்தோம். எலெக்ட்ரிக் போட்டில் சென்று வந்த அம்மாவும் பையனும் அங்கே காத்திருந்தார்கள். ஒரே வேனில் அனைவரும் அங்கிருந்து கிளம்பி இருட்டில் அந்தக் காட்டுப்பாதையில் பயணித்து எஸ்பெரன்சாவுக்கு வந்து சேர்ந்தோம்.
 
அங்கிருந்து அழைத்தால், ரிசார்ட் வேன் வந்து அழைத்துச் செல்லும். செம்ம பசி.. முதல்ல சாப்பிட்டுடலாம்னு நோட்டம் விட்டா வரிசையா ரெஸ்டாரண்டுகள் இருந்தது. எல்லாத்திலேயும் நல்ல கூட்டம்.  எங்கே போறதுன்னு தெரியல்ல. வெளியே பார்ப்பதற்கு நல்லாத் தெரிந்த ஒரு ரெஸ்டாரெண்டில் நுழைந்தோம். வேற எப்படி தேர்ந்தெடுப்பதுன்னு தெரியல்ல.
 
சிக்கன், மீன், இரால் ன்னு கண்ணில் பட்டதை ஆர்டர் செய்து சாப்பிட்டோம். கொஞ்சம் லோக்கல் ஃப்ளேவருடன் நல்லா இருந்தது. சாப்பிட்டு முடிக்கும் முன் ரிசார்ட்டுக்கு போன் செய்தோம். சாப்பிட்டு முடித்து எதிரே பீச் பக்கம் கொஞ்சம் வேடிக்கை பார்த்துட்டு இருக்கவும் வேன் வந்தது. ரூம் போய் அசந்து தூங்கினோம்.
 
அடுத்த நாள் காலையிலேயே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சிட்டு, கிளம்பி எஸ்பெரென்சா வந்து விட்டோம். ரூமை காலி செய்து, பெட்டிகளை ரிசப்ஷனில் கொடுத்து விட்டு வந்தோம். எஸ்பெரன்சா பீச்சும், பக்கத்தில் சன் பே பீச்சும் பார்த்துட்டு, அங்கேயே லஞ்ச் முடிச்சிட்டு மாலை 4 மணி அளவில் ஃபெர்ரிக்கு போய்விடுவதாகத் திட்டம்.
 
எஸ்பெரன்சாவில் காயக், ஸ்னோர்க்ளிங் என ஏராளமான அட்வென்சர்ஸ் இருக்கு. அதற்கு எங்களுக்கு நேரம் போதாது என்பதால் அந்தப்பக்கம் போகல்ல. ஜெட்ஸ்கி எனப்படும் தண்ணீர் ஸ்கூட்டரும் வாடகைக்கு கிடைக்கிறது. அதைப் பார்த்ததும் பொண்ணுக்கு ஆசை. அப்பா போலாம்ப்பான்னு பொண்ணு சொல்லும் போது மறுக்கவா முடியும்.
 
பொண்ணு கூட துணைக்கு நான் மட்டும் போவதாக முடிவு செய்து வாடகைக்கு எடுத்து கடலுக்குள் கிளம்பினோம். குட்டியூண்டு போட் மாதிரி சீறிப்பாய்ந்து போனதில் பயணித்தது தனி த்ரில் தான். ஒரு பெரிய ரவுண்டு போய்ட்டு வந்துட்டோம்.
 
அக்காவைப் பார்த்து தம்பிக்கும் ஆசை, நானும் வருவேன்னு அடம்பிடிச்சான். அக்கா தம்பியை மட்டும் கடலுக்குள் அனுப்ப பயம். இரண்டு பேர் மட்டுமே இருக்கக்கூடிய அந்த ஜெட்ஸ்கியில் , தம்பியை மத்தியில் உக்காரவைத்து கிளம்பினோம்.  பொண்ணும் நல்லாவே ஓட்டிச்சென்றாள். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று, திரும்ப முயன்ற போது தான் அது நடந்தது.
 
அலை ஒன்று வேகமாக வரவும், ஜெட்ஸ்கியை பொண்ணு திருப்பவும் நிலை தாளாமல் கவிழ்ந்து விட்டது. நாங்கள் மூவரும் தூக்கி எறியப்பட்டோம். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்குள், தண்ணீருக்குள் கீழே போய் மேலே வந்தேன். சற்று தொலைவில் பொண்ணு மிதந்து கொண்டிருந்தாள். ஐ யம் ஓகே டாடி. தம்பி எங்கேன்னு கேட்டாள்.
 
சுத்தி பார்த்தால் சின்னவனை காணவில்லை. ஒரு நிமிடம் பயந்து விட்டேன். கவிழ்ந்து கிடக்கும் ஜெட்ஸ்கிக்கு அடியில் சிக்கிக் கொண்டு விட்டானோ என்று பயம்.பக்கத்திலேயே, இரண்டாவது தடவையும் கீழே முங்கி மேலெ வந்து தத்தளித்துக் கொண்டிருந்தான்.  எட்டிப்போய் கையைப் பிடித்துக் கொண்டேன்.
 
சில அடிகள் தள்ளி ஜெட்ஸ்கி தலைகீழாக மிதந்து கொண்டிருக்கிறது. பையனை இழுத்துக்கொண்டே நீந்தி ஜெட்ஸ்கியை அடைந்தேன். அதைப் பிடித்துக் கொண்டான் பையன். பொண்ணும் மெல்ல நீந்தி ஜெட்ஸ்கி பக்கம் வந்தாள். மூவரும் அதைப் பிடித்துக் கொண்டே மிதந்தோம். லைஃப் ஜாக்கெட் போட்டிருந்ததால் மிதப்பது எளிதாக இருந்தது. முந்தைய நாள் இரவு கடலில் நானும் பொண்ணும் குதித்து விளையாடியதால் கொஞ்சம் பயம் தெளிந்து விட்டது. பையனும் ஓகே ஆகிவிட்டான்.
 
ஜெட்ஸ்கியை நாமளே திருப்பி மீண்டும் ஏற முயற்சிப்போம் என முயன்றோம். திருப்பி விட்டோம். சாவி கயிற்றில் கட்டப்பட்டிருந்ததால் அதை போட்டு பொண்ணு ஸ்டார்ட் செய்தும் விட்டாள். தம்பியை ஏற்றிவிட்டு நான் ஏற முயன்ற போது வழுக்கி விழுந்தோம். தண்ணீருக்குள் ஜெட்ஸ்கியில் மூவரும் ஏற முடியவில்லை.
 
நாங்கள் தத்தளித்ததைப் பார்த்த ஜெட்ஸ்கி கம்பெனிக்காரர்கள், அங்கே சென்றுகொண்டிருந்த படகுகளுக்கு தகவல் சொல்லியிருப்பார்கள் போலிருக்கு. ஒரு படகு அருகில் வந்தது. பொண்ணையும் பையனையும் ஏற்றிக் கொண்டார்கள். கூடவே நான் ஜெட்ஸ்கியை ஓட்டி கரை சேர்ந்தோம்.
 
அங்கே  கண்ணீர் ஓடிக்கொண்டிருந்த நிலையில் இருந்த, மனைவி எங்களைப் பார்த்ததும் சுற்றி முற்றி யார் இருக்கிறார்கள் என்ற நினைவு கூட இல்லாமல் என்னைத் திட்ட ஆரம்பித்து விட்டார். அவருடைய எமோஷன்ஸ் பத்தி சொன்னா சோகமாகிவிடும். 
 
 “சரி, சரி அதான் நீ கும்பிட்ட முருகன் தான், எங்களை கரை சேத்துட்டாருல்லே. கிளம்புவோம், சாப்பிடப் போலாம்ன்னு,” சமாதானம் சொல்லி இடத்தைக் காலி பண்ணினோம். சன் பே பீச் போகும் திட்டத்தை கேன்சல் செய்து, அருகில் இருந்த ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டு விட்டு, ரிசார்ட் சென்று பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஃபெர்ரி நிற்கும் இடம் சென்றோம். வழியில் சாலையில் குறுக்கு மறுக்காக ஓடிக்கொண்டிருந்த குதிரைகள் கொஞ்சம் கலகலப்பூட்டின.
 
ஃபெர்ரி இடத்திற்கு வந்ததும், இரண்டு நாட்கள் நினைவும் நிழலாடியது. எதையோ விட்டுச் செல்வது போன்ற உணர்வு. மனைவியும் கொஞ்சம் சகஜமாகி புன்னகைத்தார். மீண்டும் ஃபெர்ரியில் ஃபஹார்டோ சென்றோம். அங்கே நண்பர் காத்திருந்தார். காரில் வீடு செல்லும் வழியிலேயே இரவு உணவை முடித்து விட்டு தங்கியிருந்த கால்ஃப் ரிசார்ட் வந்தடைந்தோம்.
 
படுக்கையில் மனைவி பக்கம் திரும்பி, “ஆர் யூ ஒகே” என்று கேட்க,  வியேக்கஸ் ட்ரிப் நல்லா இருந்துச்சு, கடைசியிலே தான் ரொம்ப டென்ஷன் கொடுத்திட்டீங்க என்றார். இன்னும் மூணு நாளு தான். நாம அட்லாண்டா கிளம்பனும்டா ன்னு வீட்டை ஞாபகப்படுத்தினேன். அப்படியே பல நினைவுகளுடன் தூங்கிப்போனேன்.
 
நாங்க பாத்த போர்ட்டோ ரிக்கோ இன்னும் கொஞ்சம் இருக்கு.தொடர்கிறோம்.
 
– அட்லாண்டா கண்ணன்
 
முந்தைய வாரம்

From around the web