தமிழும் திராவிடமும் ஒரே சொல் – தேவநேயப் பாவாணரை சுட்டிக்காட்டும் ப.திருமாவேலன்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் வட்டாரப் பகுதியில் இரண்டாவது பன்னாட்டு பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ்நாட்டிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஊடகவியலாளர் ப.திருமாவேலன் உரையாற்றிய போது, தமிழும் திராவிடமும் ஒரே சொல் என்று தேவநேயப் பாவாணர் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழ் தேசிய இயக்கம் 1900 களிலேயே தொடங்கப்பட்டு விட்டது. அதன் பெயர் திராவிட இயக்கம் என்பது தான்
 

தமிழும் திராவிடமும் ஒரே சொல் – தேவநேயப் பாவாணரை சுட்டிக்காட்டும் ப.திருமாவேலன்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் வட்டாரப் பகுதியில் இரண்டாவது பன்னாட்டு பெரியார் மனிதநேய சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ்நாட்டிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஊடகவியலாளர் ப.திருமாவேலன் உரையாற்றிய போது, தமிழும் திராவிடமும் ஒரே சொல் என்று தேவநேயப் பாவாணர் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழ் தேசிய இயக்கம் 1900 களிலேயே தொடங்கப்பட்டு விட்டது. அதன் பெயர் திராவிட இயக்கம் என்பது தான் என்றும் குறிப்பிட்டார். ப.திருமாவேலனின் உரை வருமாறு:

“தமிழ்நாட்டில் சிந்தனையற்ற மனிதர்களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என்கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க்கைக்குள் இருக்கிறது.

தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொண்டிருக்கின்ற பழைய ராஜராஜ சோழன்கள், பழைய பலவேட்டு அறிஞர்கள், தங்களின் இழந்த ஜமீன்களை மீண்டும் மீட்பதற்காக இற்றுப்போன தங்களுடைய ஜரிகைக் குல்லாக்களோடு எத்தனை நாடகங்களைப் போட்டாலும், தமிழ்த் தேசியத்தினுடைய இயக்கம் என்பதை மீட்டெடுக்க முடியாது. ஏனென்றால், ஏற்கெனவே தமிழ்நாட்டில், 1900-த்தின் தொடக்கக் காலத்தில் தமிழ்த் தேசிய இயக்கம் என்பது தொடங்கப்பட்டு விட்டது. அதற்குத் திராவிட இயக்கம் என்பதுதான் பெயர்.

பெரியாருடைய எழுத்துகளை, பெரியாருடைய பேச்சுக்களை, பெரியார் நடத்திய பத்திரிகைகளை, பெரியாருடைய கட்டுரைகளை உண்மையில் கண் இருந்தவன் படித்திருப்பானேயானால், அவனுக்குத் தெரியும், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருள் தருகின்ற இரு வேறு வார்த்தைகள் என்பதுதான்.

தமிழும் திராவிடமும் ஒரே பொருள்

தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரே பொருளில் அவரால் சொல்லப்பட்டது. அவரால் சொல்லப்பட்டது என்றால், தந்தை பெரியார் சொல்வதற்காக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்வார்களேயானால், தமிழ்நாட்டு வரலாற்றில் மிகப்பெரிய அறிஞன் என்று நாம் இன்றளவும் கொண்டாடக்கூடிய, இன்னும் நூறாண்டுகள் ஆனாலும், இப்படி ஒரு தமிழறிஞன் பிறந்து வர முடியாது என்கின்ற பெருமை ஒரு தமிழறிஞருக்கு இருக்குமானால், அது மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் தான். பாவாணாருடைய கருத்தும் அதுதான், தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒரு பொருள் தரக்கூடிய இரு வேறு சொற்கள் என்பதுதான்.

பெரியாரைப் படிக்காதவர்கள், நீங்கள் பெரியாரைக் கூட படிக்கவேண்டாம்; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணருடைய ‘திராவிடத்தாய்’ என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்’ என்ற நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள்.

பாவாணர் சொல்வது என்னவென்றால், ‘‘இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்’ என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே.” இதை ஒப்பியன் மொழி நூல் என்ற நூலில், 15ம் பக்கத்தில் எழுதியவர் தந்தை பெரியார் அல்ல, பாவாணர்தான் எழுதியிருக்கிறார்.

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தமிழ்த் தொண்டாற்றிய 27 பேரின் பட்டியலை சொல்லும்போது, தொல்காப்பியர், திருவள்ளுவரில் தொடங்கி, 11வது இடத்தில் தந்தை பெரியாரைக் குறிப்பிடுகிறார். 

திராவிடம்  ஒரு அரசியல் சொல்

ஆரியம் என்பதற்கு, எது எதிர் என்றால், திராவிடம்! எனவே, பெரியார் ‘திராவிடம்’ என்கின்ற சொல்லை இனச் சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும். ‘திராவிட இனம்’ என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்.

திராவிடம் என்கின்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கின்ற காலகட்டத்தில் அவர் சொன்னது, ‘‘ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகிறேன்.‘திராவிடர் கழகம்’ என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத்திருப்பேன்” என்றார் பெரியார்.

மறைமலையடிகளைவிட, இன்று தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் தமிழ் அறிஞர்களா? தமிழ் உணர்ச்சி உள்ளவர்களா? அவரை விட இவர்கள் தமிழ்ப் பற்றாளர்களா?. மார்க்ஸுக்கு ஒரு லெனின் கிடைத்ததைப்போல, வள்ளுவருக்குக் கிடைத்தவர்தான் தந்தை பெரியார் என்று சொன்னவர் மறைமலை அடிகளார்.

1955ல் பெரியார் எழுதுகிறார்: தமிழ், தமிழ்நாடு என்று பெயர்கூட இந்த நாட்டிற்கு இருக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுவிடுமானால், என்னுடைய வாழ்வு எதற்காக இருக்கவேண்டும்? என்று எழுதிய தந்தை பெரியாரைவிட தமிழ்த் தேசியவாதி இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?. திராவிடர் கழகத்திற்குத் திருக்குறள்தான் வழிகாட்டி, வேறு நூல் இல்லை” என்று 1948ல் சொன்னவர் தந்தை பெரியார்.

மூன்று கொள்கைகள்

“திராவிடர் கழகம் எனது தலைமைக்கு வந்த பிறகு, மூன்று முக்கிய கொள்கைகளைச் சொல்லி வருகிறேன்.

1.மனிதன் இழிவு நீங்க வேண்டும்.

2. எனது தமிழ்நாடு தனியாக ஆகவேண்டும்.

3. அதுவரை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும்.

இந்த மூன்று கொள்கைகள் வெற்றியடைய வேண்டும் என்பதே” என்று 1951ல் சொன்ன தந்தை பெரியாரே, தமிழ்த் தேசியத்தினுடைய மூலவர்.

‘‘நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக்கொள்ளாமல், வேறு பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், ‘சூத்திரர் கழகம்’ என்றுதானே வைத்துக் கொள்ளவேண்டும்” என்று 1959ல் சொன்னவர் அவரே!

தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத்தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று சொல்லி, தனித்தமிழ் இயக்கத்தினுடைய சிந்தனையை தனது சிந்தனையாக சொன்னவர்தான் தலைவர் தந்தை பெரியார்.

தமிழ்த் தேசியத்தினுடைய ஆட்களின் பரப்புரையில், ஒருவேளை பெரியார், தமிழுக்கு எதிராக இருந்தாரோ, தமிழினத்திற்கு எதிராக இருந்தாரோ என்று நம்மவர்களுக்கே ஒரு மயக்கம் ஏற்பட்டுவிட்டது.

பெரியாரிடம் தமிழ்த் தேசியக் கூறுகள் எத்தனை இருக்கின்றன என்பதை நான் பட்டியலிட்டபோது, தமிழர் இனப்பெருமை, தமிழ்நாட்டுப் பெருமை, தமிழர் கடந்தகாலப் பெருமை, தமிழ்ப்பெருமை, தமிழுக்கு முதன்மை, நாட்டின் பெயர் தமிழ்நாடு உட்பட  கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிந்தனைகளை காண முடிந்தது.

இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்களை நீங்கள் நன்றாக அடையாளம் காணுங்கள். பெரியாரை தமிழரல்ல என்று சொல்பவர்களும், தமிழ் தேசியத்துக்கு விரோதி என்று சொல்பவர்களும் தான் தமிழுக்கு விரோதி, தமிழருக்கு விரோதி தமிழ்நாட்டுக்கு விரோதி.”

இவ்வாறு ஊடகவியலாளர் ப.திருமாவேலன் பேசினார்.
 
-வணக்கம் இந்தியா

From around the web