அரசு அங்கீகாரம் பெற்ற கொலைக்கூடம்!

‘பண பலம், அதிகார பலம் மிக்கவர்களுக்கு மட்டுமே அரசும் காவல் துறையும் துணை நிற்கும்… அப்பாவிகள், ஒன்றுமில்லாத ஏழைகளாக இருந்தால் கிஞ்சித்தும் போலீசின் உதவி கிடைக்காது’ என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது, ராம்குமாரின் சந்தேக மரணம் மூலம். சுவாதி கொலையின் பின்னணி, உண்மையில் நடந்தது என்ன? போன்ற விவரங்களே இன்னும் உறுதியாகவில்லை. போலீசாரால் இந்த வழக்கில் இம்மி அளவுக்குக் கூட முன்னேற முடியவில்லை. கொலையாளி என கைது செய்யப்பட்ட ராம்குமார், உண்மையில் கொலையாளிதானா என்ற கேள்வி கடந்த
 

‘பண பலம், அதிகார பலம் மிக்கவர்களுக்கு மட்டுமே அரசும் காவல் துறையும் துணை நிற்கும்… அப்பாவிகள், ஒன்றுமில்லாத ஏழைகளாக இருந்தால் கிஞ்சித்தும் போலீசின் உதவி கிடைக்காது’ என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது, ராம்குமாரின் சந்தேக மரணம் மூலம்.

சுவாதி கொலையின் பின்னணி, உண்மையில் நடந்தது என்ன? போன்ற விவரங்களே இன்னும் உறுதியாகவில்லை. போலீசாரால் இந்த வழக்கில் இம்மி அளவுக்குக் கூட முன்னேற முடியவில்லை. கொலையாளி என கைது செய்யப்பட்ட ராம்குமார், உண்மையில் கொலையாளிதானா என்ற கேள்வி கடந்த மூன்று மாதங்களாக உலா வருகிறது. இந்தக் கேள்விக்கு உறுதியான பதிலை போலீஸ் உள்பட யாராலும் அளிக்க முடியவில்லை. இரு தினங்களுக்கு முன்பு கூட ‘சுவாதியைக் கொன்றது பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களுக்கும் ராம்குமாருக்கும் தொடர்பே இல்லை’ என்று செய்திகள் வெளியாகின.

இந்தச் சூழலில், ராம்குமார் மின்சாரக் கம்பியைக் கடித்து, உடலெங்கும் மின்சாரத்தைப் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளது காவல்துறை. இது மிகவும் அபத்தமானது. அடுத்த ஒரு வாரத்துக்குள் பிணையில் விடுதலையாகும் வாய்ப்புள்ள, அந்த நாளுக்காக ஆர்வத்துடன் காத்திருந்த 24 வயது இளைஞன், மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

ராம்குமாரின் மரணம் குறித்த அரசு சான்றிதழும், அது தற்கொலையா கொலையா என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

ராம்குமார் மரணம் மட்டுமல்ல, டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை உள்பட பல மர்ம மரணங்களுக்கு இதுவரை நியாயமே கிடைத்ததில்லை. இதுபோன்ற சந்தேக மரணங்களில் உண்மை வெளிவராமலிருக்க தமிழக போலீஸ் படாதபாடுபடுவதைப் பார்க்க முடிகிறது.

தமிழக காவல் துறையை ஸ்காட்லாந்து யார்டுக்கு ஒப்பிட்டு உலக மகா போலீஸ் என்றெல்லாம் ஜம்பமடித்துக் கொள்வது வழக்கம். உண்மையில் உலகிலேயே மிகத் திறமை குறைந்த போலீசாக இருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் இம்மியளவுக்காவது நேர்மையும் மனிதாபிமானமும் கொண்ட அமைப்பாக தமிழ்நாடு போலீஸ் இருக்க வேண்டும். இல்லையேல் அரசு அங்கீகாரம் பெற்ற கொலைக்கூடமாகவே அது பார்க்கப்படும்!

-முதன்மை ஆசிரியர்

From around the web