கல்வியில், கற்பிப்பதில்  பாரபட்சம் என்பது கொடிய தீண்டாமை!

மெளலானா அபுல்கலாம் ஆசாத் அடித்தளமிட்ட ஐ.ஐ.டி யில் பாத்திமாகளின் மர்ம மரணங்கள் சனாதன கொள்கையின் அறுவடையாக தான் பார்க்க தோன்றுகிறது. மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, சகோதரத்துவத்தின் கொள்கை பாதுகாப்பில் அமைதி பூங்காவாக திகழும் அன்னை தமிழகத்தில், மர்ம தேசமாக ஐஐடி மட்டும் உள்ளதே ஏன்? தமிழ்த்தாய் வாழ்த்தை துரத்தியடித்து வந்தே மாதரத்தை உயர்த்தி பிடிக்கும் கூட்டத்தாரின் கையில் , இந்த உன்னத கல்வி நிறுவனம் சிக்கி தவிப்பது தெளிவாக தெரிகிறது. யாரோ சிலர் செய்யும் தவறுகளால் உலகம்
 

கல்வியில், கற்பிப்பதில்  பாரபட்சம் என்பது கொடிய தீண்டாமை!மெளலானா அபுல்கலாம் ஆசாத் அடித்தளமிட்ட ஐ.ஐ.டி யில் பாத்திமாகளின் மர்ம மரணங்கள் சனாதன கொள்கையின் அறுவடையாக தான் பார்க்க தோன்றுகிறது. மத மாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, சகோதரத்துவத்தின் கொள்கை பாதுகாப்பில் அமைதி பூங்காவாக திகழும் அன்னை தமிழகத்தில், மர்ம தேசமாக ஐஐடி மட்டும் உள்ளதே ஏன்?

தமிழ்த்தாய் வாழ்த்தை துரத்தியடித்து வந்தே மாதரத்தை உயர்த்தி பிடிக்கும் கூட்டத்தாரின் கையில் , இந்த உன்னத கல்வி நிறுவனம் சிக்கி தவிப்பது தெளிவாக தெரிகிறது. யாரோ சிலர் செய்யும் தவறுகளால் உலகம் போற்றும் ஒப்பற்ற  கல்வி நிறுவனம், இன்று கொலைப்  பழி சுமந்து  கறை படிந்து  நிற்கிறது. யாரோ ஒரு குறிப்பிட்ட சிலர் செய்யும் தவறுக்காக ஐஐடி நிறுவனம் தீண்டாமையின் பெயரில் களங்கப்படுவதை,  உலக கல்வி நிலையங்கள் கவலையோடு பார்க்கின்றன.

மனிதநேயத்தையும் சமூக அறிவியலையும் பயிற்றுவிக்கும் துறையை சேர்ந்த மாணவி ஒருவர், தன் துறை சார்ந்த பேராசிரியர் ஒருவரை குற்றம் சுமத்தி, தற்கொலை செய்து கொள்கிறார் என்றால், அங்கே கற்று தரப்படும் சமூக அறிவியல் என்ன என்பது பெரிய கேள்வி குறி. இதுவரையிலும் அந்த பேராசிரியரின் மீது எந்த வித விசாரணையோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்பது மேலும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

குறிப்பாக ஆதிக்க சமூகத்தின் சில பேராசிரியர்களின் சகிப்புத்தன்மை நெறிபிறழ்ந்து, மாணவர்களை துவேஷ நோக்கில் துன்புறுவத்துவதாக பரவலான குற்றசாட்டுகள் உண்டு. மாணவர்கள் உளவியல் ரீதியாக மன அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்கு உந்தப்படுகிறார்கள். இதுவே சமீப மரணங்களுக்கு காரணம். தொடர்ச்சியாக இது போன்ற மர்ம மரணங்கள் நிகழ்வதை, தனிப்பட்ட காரணங்கள் என்று ஒதுக்கி தள்ளாமல், இதன் பின்னால்  இருக்கும் சமூக அரசியலை ஆராய முற்படவேண்டும்.

சமதர்மம் போதிக்க வேண்டிய சமூக அறிவியலில், சனாதன தர்ம அரசியல் புகுத்தப் படுவதால், சூத்திரர்கள் அங்கே சிதைக்கப்படுவதாக  சந்தேகம் எழுகிறது.   எந்தவித சாதி மத அரசியலுக்கும் ஆட்படாத ஒரு கல்வி நிறுவனம் என்பதை ஐஐடி நிர்வாகம்  நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட சாராரின் சாதி மத கோட்பாட்டில் இயங்கும் வேத சாலையாக மாற்றப்படாமல், அனைவரும் கல்வி கற்கும் உலக தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் என மெய்ப்பிக்க படவேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் வேண்டுகோள்.

கல்வியில், கற்பிப்பதில்  பாரபட்சம் என்பது கொடிய தீண்டாமை. அடுத்த தலைமுறை சந்திக்கும் மிக பெரிய சவாலாக இது இருக்கும். வேலியே பயிரை மேய்ந்த கதையாக சில “குருக்கள்” உயிர்கொல்லியாக உருவெடுப்பதை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நம் சமூகம் இருக்கின்றது.

“எழுமையும் ஏமாப் புடைத்து ” என்ற வள்ளுவனின் கூற்றுப்படி, எங்கே கல்வியின் மூலம் ஏழு தலைமுறையினர் விழிப்புணர்வு பெற்று விடுவார்களோ என்ற அச்சத்தில், தடுப்பு சுவர்கள் எழுப்பும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன.

ஏற்ற தாழ்வுகள் நிறைந்த இந்த சமூகத்தில்,ஒரு பெண்ணாக,  பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து ஐஐடி போன்ற உயர் கல்வி கூட்டத்திற்குள் நுழைவது எத்தனை சவால்கள் நிறைந்தது.  தன்னை மாய்த்து கொள்வதற்காக இத்தனை சோதனைகளை யாரும் சந்திப்பார்களா?   உயர்தரமான கல்வி கற்று பட்டதாரிகளாக வரவேண்டும் என அனுப்பப்படும் தங்களின் பிள்ளைகள், பிணமாக திரும்புவதை எந்த பெற்றோரால் தான் தாங்கி கொள்ள முடியும்?.

இரட்டை குவளைகள் ஒழிக்கப் பட்டுவிட்டதால் மட்டும் தீண்டாமை இங்கே ஒழிக்கப்பட்டு விட்டதாக அர்த்தம் இல்லை. உயர் சாதிகளின் ஆதிக்கம்  நிறைந்த அனைத்து துறைகளிலும் தீண்டாமை ஆழமாக வேரூன்றி உள்ளது மறுப்பதற்கில்லை. ஒரு குறிப்பிட்ட சாராரை தவிர்த்து வேறு யாரும் ஐஐடி போன்ற உயர் கல்வி நிலையங்களை கனவிலும் நினைத்து பார்க்க கூடாது என்ற அச்ச உணர்வை விதைக்க துணியும் செயல்கள் இங்கே அரங்கேறுகின்றன.

தற்கொலை என்பது எந்த பிரச்சனைக்கும் தீர்வு இல்லை. தீய சக்திகளை எதிர்த்து வென்று சாதிக்க வேண்டும். மீண்டும் ஒரு பாத்திமாவையோ , அனிதாவையோ, ரோஹித் வெமுலாவையோ இழக்காமல் இருக்க சபதம் ஏற்போம். இந்த சமூகம் அனைத்தையும் மிக எளிமையாக கடந்து செல்கிறதே என ஆதங்கமாக இருக்கின்றது.

 – அபு கான், கலிஃபோர்னியா, யு.எஸ்.ஏ.

From around the web