Mr லோக்கல் – விமர்சனம்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் / ஆர்தர் ஏ வில்சன் இசை: ஹிப்ஹாப் தமிழா தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் இயக்கம்: ராஜேஷ் எம் இந்தப் படத்தை மன்னன் படத்தின் ரீமேக் என்றெல்லாம் ரிலீசுக்கு முன் படக்குழுவினர் சொல்லிக் கொண்டிருந்தனர். எனவே சற்று பயந்து கொண்டுதான் படம் பார்த்தோம். நல்லவேளை மன்னன் என்ற ‘க்ளாஸிக் என்டர்டெயினர்’ தப்பித்தது. அந்தப் படத்துக்கும் Mr லோக்கலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ராஜேஷின்
 

Mr லோக்கல் – விமர்சனம்
டிகர்கள்: சிவகார்த்திகேயன், நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் / ஆர்தர் ஏ வில்சன்
இசை: ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
இயக்கம்: ராஜேஷ் எம்

இந்தப் படத்தை மன்னன் படத்தின் ரீமேக் என்றெல்லாம் ரிலீசுக்கு முன் படக்குழுவினர் சொல்லிக் கொண்டிருந்தனர். எனவே சற்று பயந்து கொண்டுதான் படம் பார்த்தோம். நல்லவேளை மன்னன் என்ற ‘க்ளாஸிக் என்டர்டெயினர்’ தப்பித்தது. அந்தப் படத்துக்கும் Mr லோக்கலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ராஜேஷின் முதல் படமான சிவா மனசுல சக்தி, அடுத்து வந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களின் சுவாரஸ்யமற்ற வடிவம்தான் இந்த லோக்கல்.

ஒரு கார் ஷோரூமில் வேலைப் பார்க்கும் சிவகார்த்திகேயன், ஒரு விபத்தில் நயன்தாராவைச் சந்திக்கிறார். பார்த்ததும் சிவா மனசுக்குள் காதல். ஆனால் வெளியில் மோதுகிறார். டிவி சீரியல் கம்பெனி ஓனரான நயன்தாராவோ சிவகார்த்திகேயனை அப்படி வெறுக்கிறார். கேவலப்படுத்துகிறார். ஒரு கட்டத்தில் தன் காதலை நயனிடம் வெளிப்படுத்துகிறார் சிவகார்த்திகேயன். அப்போது இன்னும் மோசமாக கேவலப்படுத்துகிறார். பின்னர் தானும் காதலிப்பது போல நடித்து வெளிநாட்டுக்குக் கூட்டிப் போய் சிவகார்த்திகேயனை சிறையில் தள்ளுகிறார். இத்தனைக்குப் பிறகும் இருவரும் எப்படி இணைந்தார்கள் என்பது இரண்டரை மணி நேரக் கதை.

சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்துவிட்டது என்பதற்காக கதை என்ற பெயரில் ஒப்பேற்றியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். கதையை விடுங்கள்… காட்சிகளாவது நகைச்சுவையாக, சுவாரஸ்யமாக இருக்கின்றனவா என்றால்…. ம்ஹூம்!

சிவகார்த்திகேயன் – நயன்தாரா மோதல் அல்லது காதல் காட்சிகளில் எந்த ஈர்ப்பும் இல்லை. எல்லாமே முன்பே தெரிந்த மாதிரிதான் நகர்கின்றன.

யோகிபாபு – ரோபோ சங்கர் – சதீஷ் காட்சிகளில் சற்றே கிச்சு கிச்சு. ஆனால் அவர்களை இன்னும் சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம். இடைவேளைக்குப் பிறகு இவர்கள் பெரும்பாலும் ஆப்சென்ட் ஆகிவிடவதால், திரும்பத் திரும்ப சிவகார்த்திகேயன் – நயன்தாராவையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

ஒரு மாஸ் ஹீரோவாக என்னென்ன செய்ய முடியுமோ – அறிமுகப் பாடலில் அடித்தட்டு மக்களுடன் ஆடுவது, அதிரடி சண்டை, கொஞ்சம் காமெடி, இரண்டு டூயட்- அவற்றையெல்லாம் கச்சிதமாகச் செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இரண்டு மூன்று காட்சிகளில் ரஜினியின் அரசியல் பேச்சுகளை மற்றவர்களை விட்டு கிண்டலடிக்க வைத்து இவர் கமுக்கமாக நகர்கிறார். தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் வேலை… போதாக்குறைக்கு ‘தல’ புராணம் வேறு… யு டூ சிவா?

நயன்தாராவை அழகி என்பதா… ஆன்டி என்பதா… மற்றபடி, இந்த வேடமெல்லாம் அவருக்கு ஒன்றுமே இல்லை. க்ளைமாக்சில் தனது கம்பெனி டர்ன் ஓவர் என ரூ 10 கோடி என டமாலென குப்புற விழ, தியேட்டரே குபீராகிறது. அதுவரை நயன்தாரா பாத்திரம் காட்டி வந்த கெத்தும் திமிரும் டமாரமென வெடித்து பஞ்சராகிவிடுகிறது.

ஊர்வசி, சரண்யா செய்த அந்த அப்பாவி அம்மா வேடம் இந்த முறை ராதிகாவுக்கு. அவரும் குறை வைக்கவில்லை. ஆனால் அந்த தங்கை பாத்திரம் கடுப்பேற்றுகிறது.

ஹிப் ஹாப் தமிழா இசையில் சொல்ல ஒன்றுமில்லை. போகிற போக்கைப் பார்த்தால், ‘பாடல்கள் இல்லாத படம்… தொந்தரவே இல்லாமல் பார்த்து மகிழுங்கள்’ என்ற அறிவிப்போடு தமிழ்ப் படங்கள் வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

தினேஷ் கார்த்திக்கின் ஒளிப்பதிவு கூடுதலாக இந்தப் படத்துக்கு எந்த சிறப்பையும் சேர்த்துவிடவில்லை.

இயக்குநர் ராஜேஷ் படங்களில் யாரும் கதையைத் தேடுவதில்லை… விரசமில்லாத நகைச்சுவைதான் அவர் பலம். ஆனால் அந்த நகைச்சுவையை இந்த லோக்கலில் முற்றாகத் தொலைத்துவிட்டிருப்பதுதான் பரிதாபம்!

மதிப்பீடு: 2.0/5.0

 

From around the web