யார் இந்த மார்ட்டின் லூதர் கிங்? அவருக்காக ஏன் அமெரிக்க அரசு விடுமுறை?

ஆண்டுதோறும் அமெரிக்க நாட்டில் ஜனவரி மாதம் மூன்றாவது திங்கட்கிழமை மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) தினம், விடுமுறையுடன் கொண்டாடப்படுகிறது. நாட்டின் அதிபராக இருந்திராத ஒருவருக்கு, இப்படி தேசிய விடுமுறையுடன் அவரின் நினைவாக ஒரு நாளை அமெரிக்கா நியமித்திருப்பது, மார்ட்டின் லூதர் கிங் க்கு மட்டும் தான். ஏன் என்று வியக்கிறீர்களா? மார்ட்டின் லூதர் கிங் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மாபெரும் சமூகத் தலைவரல்ல, ஒரு சகாப்தம். தன் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளுக்காக ஆற்றிய கடுமையான
 

யார் இந்த மார்ட்டின் லூதர் கிங்? அவருக்காக ஏன் அமெரிக்க அரசு விடுமுறை?ண்டுதோறும் அமெரிக்க நாட்டில் ஜனவரி மாதம் மூன்றாவது திங்கட்கிழமை மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) தினம், விடுமுறையுடன் கொண்டாடப்படுகிறது. நாட்டின் அதிபராக இருந்திராத ஒருவருக்கு, இப்படி தேசிய விடுமுறையுடன் அவரின் நினைவாக ஒரு நாளை அமெரிக்கா நியமித்திருப்பது, மார்ட்டின் லூதர் கிங் க்கு மட்டும் தான். ஏன் என்று வியக்கிறீர்களா? மார்ட்டின் லூதர் கிங் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மாபெரும் சமூகத் தலைவரல்ல, ஒரு சகாப்தம்.

தன் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளுக்காக ஆற்றிய கடுமையான தொண்டால், ஓயாத அஹிம்சை வழிப் போராட்டத்தால், வரலாற்றை மாற்றி தனது 35 ஆம் வயதில் நோபல் பரிசு பெற்றவர் மட்டுமல்ல, தன் உயிரையே தன் இன மக்களின் உரிமைகளுக்காக தியாகம் செய்தவர்.

மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்), ஜனவரி மாதம் 15 ஆம் நாள் 1929 ஆம் ஆண்டு, வட அமெரிக்க நாட்டில், ஜார்ஜியா மாநிலத்தில், அட்லாண்டா எனும் நகரில் பிறந்தார். ஆப்ரிக்க இனத்தைச் சேர்ந்த இவரின் தாயார் ஆல்பெர்ட்டா கிரிஸ்டீன் வில்லியம்ஸ் ஆசிரியையாக பணி செய்தவர். பின்னர் திருமணமான பெண்கள் ஆசிரியப்பணி செய்ய அனுமதிக்கப்படாததால் அதை விடுத்து அவர் கணவர் போதித்த தேவாலயத்தில் முக்கியப் பணிகள் செய்தார். இவரின் தந்தையார் மார்ட்டின் லூதர் கிங் (சீனியர்), ஒரு கிறுஸ்தவப் போதகர். மார்ட்டின் லூதர் கிங் ன் இயற்பெயர் மைக்கேல் லூதர் கிங் ஜூனியர். பின்னர் மைக்கேல் என்பதை மாற்றி தன் தந்தையின் பெயரான மார்ட்டின் என்பதை வைத்துக் கொண்டார். தந்தையின் பெயரும் ஒன்று என்பதால் இரண்டாவது தலைமுறையினர் ”ஜூனியர்” என்று குறிப்பிடுவது வழக்கம்

கிறுஸ்தவப் போதகர் குடும்பத்தில் பிறந்த மார்ட்டின் லூதர் கிங் தானும் போதகராக வேண்டுமென பயிற்சி எடுத்தார். 15 வயதில் கருப்பு இன பிள்ளைகளுக்கான பள்ளியில், பள்ளிப் படிப்பை முடித்து, பின் தன் தந்தையும், தாத்தாவும் படித்த மோர்ஹௌஸ் எனும் நீக்ரோ கல்லுரியில் கிறுஸ்துவத்தில் தானும் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் பென்சில்வேனியாவில், பெரும்பாலும் வெள்ளை மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் சேர்ந்து தன் அறிவாற்றலால் மாணவர் தலைவராகவும் ஆனார். அங்கு முதுகலை முடித்தப்பின் 1955 ஆம் ஆண்டு பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றார். பாஸ்டனில் இருக்கும் பொழுது, கொரேட்டா ஸ்காட் எனும் பெண்ணைச் சந்தித்து மணம் செய்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் பிறந்தனர்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளிலும் அதற்கு முன்னரும் அமெரிக்க கருப்பு இன மக்கள் பல் வேறு வழிகளில் வேற்றுமைப் படுத்தப்பட்டனர். வெள்ளை முதலாளிகளுக்கு விற்கப்படும் அடிமைகளாகவும் வாழ்ந்தனர். கருப்பு இனத்தவர் அவர்களுக்கான தனி தேவாலயங்களில் பிராத்திக்க வேண்டும். தனிப் பள்ளிகளில் கற்க வேண்டும். வெள்ளையர் உண்ணும் உணவகங்களில் சாப்பிடக்கூடாது. பேருந்துகளில் பின்னால் தான் அமர வேண்டும். வெள்ளையர்களுக்கு இடம் இல்லையேல் தங்களின் இடத்தை கொடுத்துவிட்டு நிற்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. கருப்பு இன மக்கள் வெள்ளையின மக்களின் பூங்கா, கழிப்பறை, குடி தண்ணீர்க் குழாய் போன்ற எந்தப் பொது இடங்களையும் உபயோகிக்கக் கூடாது. “வைட் ஒன்லி” அதாவது “வெள்ளையர் மட்டும்” எனும் குறியீடு பொது இடங்களில் போடப்பட்டிருக்கும். இதைக் கண்டு மனம் வெம்பினார் மார்ட்டின் லூதர் கிங். தன் இனத்தவரின் விடுதலைத்தீ அவர் மனதில் கொழுந்துவிட ஆரம்பித்தது.

1955 ஆம் ஆண்டு, டிசம்பர் 1 ஆம் நாள், அலபமா மாநிலத்தில் மாண்ட்கோமரி எனும் நகரில், ரோசா பார்க்ஸ் எனும் பெண் தன் தையல் வேலையை முடித்து பேருந்தில் களைப்புடன் வீடு திரும்பும் போது, இடம் இருந்ததால் அமர்ந்துள்ளார். இடையில் சில வெள்ளைப் பயணிகள் பேருந்தில் ஏறியதால் ஓட்டுனர் கருப்பு நிற பயணிகளை எழும்படி கூறினார். பேருந்தில் இருந்த மற்ற கருப்பு நிறத்து பயணிகள் எழுந்தனர். ஆனால் ரோசா பார்க் களைப்பினால் எழ மறுத்துவிட்டார். அன்று அவரை காவல்துறை கைது செய்து, 10 டாலர் அபராதம் கட்டணமும், 4 டாலர் நீதிமன்ற கட்டணமும் செலுத்தச் சொன்னது.

அப்போது கருப்பு நிற மக்கள் 26 வயதான போதகர் மார்ட்டின் லூதர் கிங்  தலைமையில் தங்கள் உரிமைப் போராட்டத்தைத் துவக்கினர். சுமார் 40,000 கருப்பு நிற மக்கள் பேருந்துகளில் பயணம் செய்ய மறுத்தனர். இப்படித்தான் மார்ட்டின் லூதர் கிங் மனித உரிமைப் போராட்டத்தை முதன்முதலில் தன் கையிலெடுத்தார். இந்தப் போராட்டம் 381 நாட்கள் நீடித்து, பின்வந்த சமூக உரிமைப் போராட்டங்களுக்கு அடித்தளம் ஆனது. மார்ட்டின் லூதர் கிங் காந்திய வழியை கடைபிடித்து அகிம்சை போராட்டத்தை கையாண்டார். ஆனாலும் கருப்பு நிறத்தவர் மீது வன்முறைகள் நடத்தப்பட்டு, உயிர்ச் சேதங்கள் நிகழ்ந்தன. இறுதியாக டிசம்பர் 21, 1956 இல் பேருந்துகளில் அனைவரும் சமமாகப் பயணிக்கலாம் எனும் சட்டம் வந்தது. இதுவே மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் முதல் வெற்றியானது.

1960 களில் மார்ட்டின் லூதர் கிங்  தன் இனத்து மக்களின் உரிமைகளுக்காக நாடு முழுவதும் பயணித்து உரையாற்றினார். அன்புடன் அமைதி வழியில் அகிம்சை போராட்டம் எப்படி நடத்த வேண்டுமென மக்களுக்கு போதித்தார். கிட்டத்தட்ட 60 மில்லியன் மைல்கள் பயணித்து, 2500 க்கும் மேலான உரைகள் ஆற்றியுள்ளார். அநீதி எங்காவது நடந்தாலும் கூட, அது மொத்த இடங்களில் நடக்கும் நீதிக்கு சவாலானது (Injustice anywhere is a threat to justice everywhere) என்பது அவர் கருத்து.

யார் இந்த மார்ட்டின் லூதர் கிங்? அவருக்காக ஏன் அமெரிக்க அரசு விடுமுறை?

மார்ட்டின் லூதர் கிங் இன் 10 முக்கியமான போராட்டக் களங்கள்..

1. 1955 பேருந்து மறுப்பு போராட்டம் அலபமாவில்.

2. 1957 இல் தெற்கு கிறுஸ்தவ தலைமைகள் மாநாட்டை உருவாக்கி இறிதிவரை இதன் மூலம் சமூக உரிமைகளுக்கு போராடியது. (SCLC- South Christian Leadership Conference)

3. 1960 இல் வேற்றுமைகள் எதிர்த்து அலபமாவில் பிர்மிங்கம் பிரச்சாரம் துவங்கினர். தேசிய அளவில் கண்காணிக்கப்பட்ட இந்தப் பிரச்சாரத்தின் போது காவல் துறை அதிவேக தண்ணீர்ப் பாய்ச்சியும், நாய்கள் விட்டும் போராளிகளை துன்புறுத்தி, அமைதிப் போராட்டத்தை தடுக்க முயன்றது. இறுதியில் காவல்துறை அதிகாரி யூஜீன் கான்னர் வேலை இழந்து சட்டங்கள் மாற்றப்பட்டு போராட்டம் வெற்றி அடைந்தது.

4. 1963 ஆகஸ்ட் 28 ஆம் நாள் அமெரிக்க தலை நகரான வாஷிங்டனில் 25000 மக்கள் திரட்டி, வேலைகளுக்காகவும், சுதந்திரத்திற்க்காகவும் ஊர்வலம் நடத்தினார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்வு உரிமைப் போராட்டத்திற்காக நடந்தது அமெரிக்காவில் அதுவே முதலாகும். 1964 சமூக உரிமைச் சட்டம் வரக் காரணம் இதுவே ஆகும்.

5. இந்த ஊர்வலத்தில் தான் மார்ட்டின் லூதர் கிங், லிங்கன் நினைவுச்சின்னத்தின் படியிலிருந்து தன்னுடைய இன்று உலகப் புகழ் பெற்றிருக்கும் “எனக்கு ஒரு கனவு இருக்கிறது – I have a dream” எனும் உரையை நிகழ்த்தினார்.

6. 1964 ஜனவரி மாத டைம் பத்திரிக்கை மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரை “ 1963 ஆம் ஆண்டின் மனிதன்” (Man of the year) எனத் தேர்ந்தெடுத்திருந்தது. மார்ட்டின் லூதர் கிங் தான் டைம் பத்திரிக்கையால் இப்படி ஒரு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஒரு கருப்பு நிற மனிதர் ஆவார். அவர் அந்தப் புகழை நாட்டின் சமூக உரிமைப் போராட்டத்திற்கு அர்ப்பணம் செய்தார்.

7. மார்ட்டின் லூதர் கிங்-ன் தொண்டு, கருப்பு இன மக்கள் அடிப்படை மனித உரிமைகள் பெறவும், சமூகச் சம உரிமைகள் பெறவும், தொழிலாளர் உரிமைகள் பெறவும் மட்டுமல்லாமல், 1965 ஓட்டு உரிமைப் பெறவும் காரணமாயிருந்தது.

8. 1964 அக்டோபர் 14 அன்று அகிம்சை வழி உரிமைப் போராட்டங்களுக்காக, மார்ட்டின் லூதர் கிங்  நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்றவர்களிலேயே இளையவர் இவர் தான், அன்றைய நாளில்.

9. இந்தியா சென்று வந்து காந்திய வழியில் ஒத்துழையாமை அகிம்சை போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றிகள் கண்டது இவரின் மாபெரும் சாதனைகளாகும்.

10. மக்களை எளிதில் தன் பேச்சாலும், அகிம்சை செயல்களாலும் வயப்படுத்தும் திறம் கொண்ட மார்ட்டின் லூதர் கிங் , கருப்பு இனத்தாரின் தலைவருக்கான அடையாளமாக உலகத்தாரால் போற்றப்படுகிறார். இவர் 5 புத்தகங்களும், பல கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

இப்படி மக்களுக்காக தம் வாழ் நாட்களை அற்பணித்து, அரசையும் பெரும்பான்மையினரையும் எதிர்த்து, போராடிய ஒரு மகாத்மாவை சும்மா விடுவார்களா? ஆம், 1968 ஆம் ஆண்டு, மெம்ஃபிஸ் எனும் நகரில், டெனசி மாநிலத்தில், ஏப்ரல் 4 ஆம் நாள், லொரெயின் எனும் விடுதியில் பிரச்சரத்திற்காக தங்கியிருந்தபோது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் மரணம் அடையும் போது அவர் வயது 39தான். 

அன்று மார்ட்டின் லூதர் கிங் -ன் உயிர் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும், இன்றும் இனியும் என்றும் அவர் பெயர் உலக வரலாற்றில் நிலைத்து வாழும்.

-புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

https://A1TamilNews.com  

From around the web