குற்றமே தண்டனை – விமர்சனம்

தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாலும் அவர்கள் செய்த குற்றமே ஏதோ ஒருவகையில் தண்டனை தரும்.. இதுதான் குற்றமே தண்டனை படத்தின் ஒன்லைன். கண் பார்வை குறைபாடுள்ள விதார்த், தனது சிகிச்சைக்கு தேவைப்படும் லட்சக்கணக்கான பணத்திற்காக அலைகிறார்.. அந்த நேரத்தில் அவரது பக்கத்து வீட்டுப்பெண் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை விவகாரம் ஒன்றில் தெரிந்தோ தெரியாமலோ விதார்த்திடம் சிக்குகிறார் ரகுமான்.. அவரிடம் பிளாக் மெயில் செய்து தனது சிகிச்சைக்கான பணத்தை பறிக்கிறார்.. ஆனால் மேலும் பணம் தேவைப்பட,
 

தவறு செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாலும் அவர்கள் செய்த குற்றமே ஏதோ ஒருவகையில் தண்டனை தரும்.. இதுதான் குற்றமே தண்டனை படத்தின் ஒன்லைன்.

கண் பார்வை குறைபாடுள்ள விதார்த், தனது சிகிச்சைக்கு தேவைப்படும் லட்சக்கணக்கான பணத்திற்காக அலைகிறார்.. அந்த நேரத்தில் அவரது பக்கத்து வீட்டுப்பெண் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலை விவகாரம் ஒன்றில் தெரிந்தோ தெரியாமலோ விதார்த்திடம் சிக்குகிறார் ரகுமான்.. அவரிடம் பிளாக் மெயில் செய்து தனது சிகிச்சைக்கான பணத்தை பறிக்கிறார்..

ஆனால் மேலும் பணம் தேவைப்பட, ரகுமானோ தர மறுக்கிறார். இதனால் ரகுமானுக்கு எதிராக திரும்ப முடிவு செய்கிறார்.. ஆனால் இறுதியில் நடந்தது என்ன..? ஐஸ்வர்யா ராஜேஷ் யார்..? அவரை கொலை செய்தது யார்..? விதார்த்தின் பார்வை குறைபாடு சரியானதா..? யாருக்கு குற்றம் தண்டனை கொடுத்தது.. இவற்றுக்கெல்லாம் விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்..

விதார்த்துக்கு நீண்ட நாளைக்குப்பிறகு மிகவும் பக்குவமான கேரக்டர்.. நேர்த்தியாக அதை பிரதிபலித்திருக்கிறார். குறிப்பாக பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவனின் மன இயல்புகளையும் நடவடிக்கைகளையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் அவர்மீது பரிதாபம் தோன்ற செய்து, போகப்போக கோபம் கொள்ளச்செய்கிறது திரைக்கதை.

தொழிலதிபாராக ரஹ்மான்… தனது கௌரவத்தை காப்பற்றிக்கொள்ள செய்யாத குற்றத்திற்காக பிளாக் மெயிலுக்கு கட்டுப்படும்போது பரிதாபப்பட வைக்கிறார். விதார்த்திற்கு நல்வழி கூறி திசைதிருப்பும் கண்ணியமான கேரக்டரில் நாசர்.

மாடர்ன் யுவதியாக ஐஸ்வர்யா ராஜேஷ்.. திடீரென கொல்லப்பட்டாலும் பிளாஸ்பேக் காட்சிகளின் மூலம் அவ்வப்போது தலைகாட்டுகிறார். தேர்ந்த அளவான நடிப்பு.. டெலிகாலர் பணிபுரியும் பெண்ணாக பூஜா தேவார்யா. .’இறைவி’க்கும் இதற்கும் தான் எவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார் நடிப்பிலும் உருவத்திலும்..?

லாயரின் உதவியாளராக ‘ஜோக்கர்’ குருசோமசுந்தரம்.. இதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.. பாடல்களை திணித்து திரைக்கதையை சிதைக்க விரும்பாத மணிகண்டன், இளையராஜாவின் பின்னணி இசையை வைத்தே முழுப்படத்தையும் நகர்த்தி இருக்கிறார். அது சரியான முடிவு என்பது படம் பார்க்கும்போதே நம்மால் உணரமுடிகிறது.

ஒரு கொலை, அதன் பின்னணியில் ஒரு சஸ்பென்ஸ், ஒரு பிளாக் மெயில், ஒரு சமரசம் என நான்கைந்து விஷயங்களை ஒரு நூலில் கோர்த்து திரைக்கதை மாலையாக்கி இருக்கிறார் மணிகண்டன். படம் மெதுவாக நகர்வது பலவீனம்.. இன்னொரு பக்கம் குற்றமே தண்டனை என்பதற்காக இறுதிக்காட்சியில் நாம் காண்பது சரியான தண்டனையாக தெரியவில்லையே என்பது உறுத்தலை தருகிறது. கமர்ஷியல் அம்சங்கள் எதையும் கலக்காமல் ‘ரா’வாக கொடுத்ததற்காக மணிகண்டனை பாராட்டலாம். ஆனால் வெற்றிக்கும் மனதில் நிற்பதற்கும் அது மட்டும் போதாதே..?

From around the web