நீட் தேர்வுக்கு நாங்க காரணம் இல்லே… காங்கிரஸ் அழகிரி அதிரடி

நீட் தேர்வுக்கு காங்கிரஸும், தி.மு.கவுமே காரணம் என அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக சட்டப்பேரவையில் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார் . அதில் அவர் கூறியுள்ளதாவது, “தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மாணவர்கள் மீது மத்திய பா.ஜ.க அரசு நீட் தேர்வை தொடர்ந்து 2016ம் ஆண்டிலிருந்து திணித்து வருகிறது. ஆனால், சட்டப்பேரவையில் இதுகுறித்து நடைபெற்ற விவாதத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க ஆட்சிக்காலத்தில்
 

நீட் தேர்வுக்கு நாங்க காரணம் இல்லே… காங்கிரஸ் அழகிரி அதிரடிநீட் தேர்வுக்கு காங்கிரஸும், தி.மு.கவுமே காரணம் என அ.தி.மு.க அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக சட்டப்பேரவையில் பேசியதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார் .

அதில் அவர் கூறியுள்ளதாவது,  “தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி மாணவர்கள் மீது மத்திய பா.ஜ.க அரசு நீட் தேர்வை தொடர்ந்து 2016ம் ஆண்டிலிருந்து திணித்து வருகிறது. ஆனால், சட்டப்பேரவையில் இதுகுறித்து நடைபெற்ற விவாதத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்தியில் காங்கிரஸ் – தி.மு.க ஆட்சிக்காலத்தில் டிசம்பர் 2010 முதல் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் பேசியிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை, இந்தியா முழுவதும் 412 மருத்துவக் கல்லூரிகளில் 35 நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதாக கூறி 2009ம் ஆண்டில் சிம்ரன் ஜெயின் மற்றும் சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் உச்சநீதிமன்றம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு பல தேர்வுகள் நடத்துவதற்கு பதிலாக ஒரே தேர்வு நடத்துவதற்கான முயற்சிகளில் இந்திய மருத்துவ கவுன்சில் ஈடுபட வேண்டுமென்று ஆணையிட்டது. 

இதையொட்டி டிசம்பர் 2010ல் இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வு நடத்துவது குறித்து அறிவிக்கை வெளியிட்டது. இதற்கு, அன்றைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தும், அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பிப்ரவரி 2013ல் போடப்பட்டது. இதில், தி.மு.க தலைமையிலான தமிழக அரசும் வழக்கு தொடுத்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நீட் தேர்வு நடத்துவதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு எந்த உரிமையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்திய மருத்துவ கவுன்சில் அன்றைய சுகாதாரத்துறை அமைச்சக அறிவுரையை மீறி, மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் 11 ஏப்ரல், 2016ல் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி, 28 ஏப்ரல் 2016 முதல் நீட் தேர்வு நடத்துவதற்கான வழிவகை ஏற்பட்டது.

இந்த பின்னணியில் இருக்கிற உண்மை நிலையை மூடிமறைக்க அ.தி.மு.க ஆட்சியாளர்கள், ஆதாரமற்ற கருத்துகளை சட்டப்பேரவையில் கூறி, தி.மு.க – காங்கிரஸ் மீது பழிசுமத்துவது கடும் கண்டனத்திற்குரியது.

காங்கிரஸ் – தி.மு.க அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2014 வரை நீட் தேர்வு நடைமுறைப்படுத்தப்படவில்லை. பா.ஜ.க ஆட்சியில் ஆகஸ்ட் 2016ல் நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இன்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது என்று சொன்னால், அதற்கு மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க தான் காரணமே தவிர, காங்கிரஸ் கட்சியோ, தி.மு.கவோ காரணமல்ல என்பதைத் தெளிவாக கூற விரும்புகிறேன்,” என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

http://www.A1TamilNews.com

From around the web