கிடாரி விமர்சனம்

நடிகர்கள்: சசிகுமார், நிகிலா, வேல ராமமூர்த்தி, நெப்போலியன், சுஜா ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர் இசை: தர்புகா ஷிவா தயாரிப்பு : சசிகுமார் இயக்கம்: பிரசாத் முருகேசன் தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையே துரோகம், ரத்தம் கொப்பளிக்கும் வன்முறை, அடாவடி, மூர்க்கத்தனம்தான் என்பதை வலியுறுத்துவது போல வந்திருக்கும் இன்னொரு சசிகுமார் படம் கிடாரி. ஒரு மாற்றத்துக்காகவாவது, இதெல்லாம் இல்லாத, இயல்பான வாழ்க்கையை வாழும் எளிய கிராமத்து மனிதர்களின் கதையைச் சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கமே வந்துவிடுகிறது கிடாரி
 

நடிகர்கள்: சசிகுமார், நிகிலா, வேல ராமமூர்த்தி, நெப்போலியன், சுஜா

ஒளிப்பதிவு: எஸ் ஆர் கதிர்

இசை: தர்புகா ஷிவா

தயாரிப்பு : சசிகுமார்

இயக்கம்: பிரசாத் முருகேசன்

தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையே துரோகம், ரத்தம் கொப்பளிக்கும் வன்முறை, அடாவடி, மூர்க்கத்தனம்தான் என்பதை வலியுறுத்துவது போல வந்திருக்கும் இன்னொரு சசிகுமார் படம் கிடாரி.

ஒரு மாற்றத்துக்காகவாவது, இதெல்லாம் இல்லாத, இயல்பான வாழ்க்கையை வாழும் எளிய கிராமத்து மனிதர்களின் கதையைச் சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கமே வந்துவிடுகிறது கிடாரி பார்த்து முடிக்கும்போது. அப்படி ஒரு கொலவெறியுடன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் பிரசாத் முருகேசன்.

ஏற்கெனவே காதலிக்க மறுத்ததற்கெல்லாம் அருவாளைத் தூக்கி மண்டையைப் பிளந்து கொண்டிருக்கும் சூழலில் இவ்வளவு ரத்தவெறியூட்டும் கதைகள், படங்கள் தேவையா?

கதை ஒன்றும் பிரமாதமில்லை. ஊரில் பெரிய தலக்கட்டு, லோக்கல் டான் கொம்பையா பாண்டியன் எனும் வேல ராமமூர்த்தி. அவருக்கு சகலமுமாக நிற்கும் அடியாள் கிடாரி எனும் சசிகுமார். ஒரு நாள் (கதையின் ஆரம்பமே இதுதான்) கொம்பையா பாண்டியன் கழுத்தில் குத்துப்பட்டுக் கிடக்கிறார். உயிருக்குப் போராடும் அவரைக் குத்தினவன் யார்? இந்தக் கேள்வியோடு கதை தொடங்குகிறது. ஒவ்வொரு கேரக்டர் மீதும் சந்தேகம்… குத்தியவனை சசிகுமார் கண்டுபிடித்தாரா… இல்லையா? என்பதுதான் படத்தின் ஒன்லைன்.

படத்தின் முதுகெலும்பு என்றால் அது வேல ராமமூர்த்திதான். அப்பப்பா… என்ன ஒரு அபார உடல் மொழி! கையில் வேல் கம்போடு அவர் நடந்து வரும் கம்பீரம் பிரமாதம். ராஜ்கிரணுக்குப் பிறகு இப்படி கேரக்டர் ரோலில் அசரடிப்பவர் வேல ராமமூர்த்திதான்.

சசிகுமாரை ஏற்கெனவே நான்கைந்து படங்களில் இதே மாதிரி வேடங்களில் பார்த்துவிட்டோம். அதனால் பெரிய ஈர்ப்பு வரவில்லை. ‘சுப்பிரமணியபுரம் மாதிரியே இருக்கில்ல.. இல்லயில்ல.. போராளி மாதிரி இருக்கு… ம்ஹூம்.. குட்டிப்புலி’ என தியேட்டரில் கமெண்டுகள். அவை சசிகுமார் காதுகளில் விழுந்தால் சரி.

ஹீரோயின் நிகிலாவுக்கு ஒரே ஒரு காட்சியில்தான் நடிக்க வாய்ப்பு.

நெப்போலியனின் மறுவரவாக அமைந்திருக்கிறது இந்தப் படம். பத்து நிமிடங்களே வந்தாலும் கம்பீரமாக மனதில் நிற்கிறார்.

சுஜா, ஓஏகே சுந்தர் என நடித்த அத்தனைப் பேரும் பாத்திரமுணர்ந்து செய்திருக்கிறார்கள். குறிப்பாக அந்த கிளியாக நடித்திருப்பவர்!

எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவு சாத்தூர் மற்றும் சுற்றுப் புறங்களில் நாம் நடமாடுவது போன்ற உணர்வைத் தருகிறது.

தர்புகா ஷிவாவின் பாடல்களை விட, பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது.

படத்தின் கதை, அதை திரைக்கதையாக்கிய விதம் இரண்டும்தான் படத்தின் பலவீனம். கொஞ்ச நாளைக்கு துரோகம், பழிக்குப் பழி, ரத்தச் சகதி க்ளைமாக்ஸ் போன்றவற்றை தூக்கி பரணில் போட்டுவிட்டு, மனிதாபிமானத்தை உயர்த்திப் பிடிக்கும், இயல்பான மனித வாழ்க்கையைச் சொல்லும், மனசை லகுவாக்கும் நகைச்சுவைப் படங்களாக எடுங்கள். மக்களின் ஆயுசு கொஞ்சமாவது கூடட்டும்!

Review of Sasikumar’s latest release Kidaari.

From around the web