கருணாநிதி… வெறும் பெயரல்ல, இந்த நூற்றாண்டின் சகாப்தம்!

வயது 95 ஆண்டுகள்… அதில் 80 ஆண்டுகள் பொதுச் சேவை… அதில் 25 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்… 50 ஆண்டுகள் ஒரு பேரியக்கத்தின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்…. எந்தத் தேர்தலிலும் தோல்வியே பார்க்காதவர் எம்எல்ஏ… -நினைத்துப் பார்க்கக் கூட முடியாத இந்த அரிய சாதனைக்குச் சொந்தக்காரர் இன்று மண்ணுக்குள் புதைக்கப்பட்ட கலைஞர் மு கருணாநிதி. அவரது அரசியல் குறித்து பல கருத்து முரண்கள் இருக்கலாம். அவரது ஆட்சி குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். முரண்களுக்கும் விமர்சனங்களும் அப்பாற்பட்டவர்கள்
 

வயது 95 ஆண்டுகள்… அதில் 80 ஆண்டுகள் பொதுச் சேவை… அதில் 25 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வர்… 50 ஆண்டுகள் ஒரு பேரியக்கத்தின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்…. எந்தத் தேர்தலிலும் தோல்வியே பார்க்காதவர் எம்எல்ஏ… 

-நினைத்துப் பார்க்கக் கூட முடியாத இந்த அரிய சாதனைக்குச் சொந்தக்காரர் இன்று மண்ணுக்குள் புதைக்கப்பட்ட கலைஞர் மு கருணாநிதி.

அவரது அரசியல் குறித்து பல கருத்து முரண்கள் இருக்கலாம். அவரது ஆட்சி குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். முரண்களுக்கும் விமர்சனங்களும் அப்பாற்பட்டவர்கள் யார்? ஆனால் அவரது சாதனைகளை, அவரால் நிகழ்ந்த நேர்மறையான சமூக மாற்றங்களை ஒருவராலும் மறுதலிக்க முடியாது.

கல்வி, சமூக ஓட்டம், தொழில் வளர்ச்சி, விவசாயம், பொதுப் பணிகள், சாலை மேம்பாடு, தொழில்நுட்ப புரட்சி, பெண்கள் நலன்…. இப்படி பல துறைகளில் கருணாநிதி செய்த மாற்றங்கள், சாதனைகளை அத்தனை சுலபத்தில் யாராலும் புறம் தள்ள முடியாது.

சென்னை இந்தியாவின் பெரும் தொழில் நகரமாக மாற்றியதில் பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு கருணாநிதிக்கு பெரும் பங்குண்டு (அதற்காக இந்தத் துறையில் ஜெயலலிதாவின் சாதனைகளையும் குறைத்துச் சொல்லிவிட முடியாது). தொழில்துறை வளர்ச்சியில் நெல்லுக்குப் பாய்ந்த நீர் புல்லுக்குப் பாய்ந்த மாதிரி சில முறைகேடுகள் நடந்தாலும், ஒட்டுமொத்த பலன் என்று பார்க்கும்போது, தமிழகத்துக்கு நல்லதாகவே முடிந்தது. இல்லையென்றால் சென்னை இந்தியாவின் டெட்ராய்ட் என்று காலரைத் தூக்கிவிட்டிருக்க முடியாது!

மின்னணுவியல் என்ற துறை மெல்ல மெல்ல இந்தியாவில் தலைதூக்கிய நேரத்தில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அந்தத் துறையில் பெரிய வளர்ச்சியைக் காண வைத்தார். டைடல் பார்க் தொடங்கி நாங்குநேரி பார்க் வரை எத்தனையோ திட்டங்கள். கோவை இன்று எலெக்ட்ரானிக் துறையில் இத்தனை மேம்பட்டு நிற்கிறதென்றால், அதற்கு விதைபோட்டவர், வளர்த்தெடுத்தவர் கலைஞர்தான்.

சமூக மேம்பாட்டில் கலைஞரின் சாதனை அளப்பரியது. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை கருணாநிதி கொண்டுவந்தார். அவர் அறிவித்த நிலமற்றவர்களுக்கு நிலம், சமத்துவபுரம், நமக்கு நாமே போன்றவை ஆகச் சிறப்பு வாய்ந்தவை. எந்தத் திட்டமும் செயல்படும் விதத்தில்தான் வெற்றியைச் சாதிக்கிறது. நமக்கு நாமே திட்டத்தை மக்கள் நினைத்திருந்தால் செம்மையாகச் சாதித்திருக்கலாம். தன் வீட்டுக் குப்பையையே அரசாங்கம்தான் வந்து சுத்தம் செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்ட நம் மக்கள்தான் இந்தத் திட்டம் பல பகுதிகளில் சரியாக செயல்படாததற்குக் காரணம்.

ஒரு ஆணாக இருந்தாலும் பெண்கள் உரிமையை முடிந்தவரை பெற்றுத் தந்த தாய் மனசு கலைஞருக்கு. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று அவர் போட்ட ஒரு உத்தரவு, பல பெண்களுக்கு அவரவர் புகுந்த வீடுகளில் புதிய மரியாதையைப் பெற்றுத் தந்ததை கண்கூடாகப் பார்த்ததுண்டு.

கருணாநிதி… வெறும் பெயரல்ல, இந்த நூற்றாண்டின் சகாப்தம்!

கல்வித் துறையில் இன்று தமிழகம் இந்த அளவு சாதனைகளுடன், இந்தியாவின் பிற மாநிலங்கள் பொறாமையுடன் பார்க்கும் நிலைக்கு வரக் காரணமானவர்களில் கலைஞரும் ஒருவர். பெருந்தலைவர் காமராஜர் வலுவான அடித்தளம் இட்டார்… அமரர் எம்ஜிஆர் அதில் முடிந்தவரை கட்டடம் எழுப்பினார். கருணாநிதியும் ஜெயலலிதாவும் வியக்குமளவு கோபுரங்கள் அமைத்தார்கள் என்பதே சரியானது. அவர்கள் செய்ததில் உள்ள குறைகள், விமர்சனங்கள் வேறு விஷயம். சரிப்படுத்த வேண்டிய விஷயம். ஆனால் தமிழகத்துக்கு கல்வித் துறையில் மிகப் பெரிய கௌரவத்தை இந்தத் தலைவர்கள் பெற்றுத் தந்துள்ளனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. யோசித்துப் பாருங்கள்… தனியார் கல்வி நிறுவனங்களைத் தாண்டி, இத்தனை அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் உருவானது இவர்களால்தான்.

இப்படி, பதவிக் காலத்தில் கருணாநிதி செய்த சாதனைகள் ஒரு பக்கம் என்றால், ஒரு தமிழ்ப் பற்றாளராக இந்த மொழிக்கும் கலைக்கும் அளித்த பங்கு அளப்பரியது. தமிழன்னைக்கு ஒரு வலுவான கவசம் மாதிரித் திகழ்ந்தவர் கருணாநிதி. எந்த உருவிலும் தமிழுக்கும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கும் இழுக்க நேர்வதைப் பொறுத்துக் கொள்ளாத தலைவர் அவர். தன் குரல் ஒலித்த காலம் முழுவதும் அவர் தமிழுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார். அது ஏதோ சம்பிரதாயக் குரல் அல்ல, கேட்போரை அச்சப்பட வைத்த குரல்.

அரசியலில் நாகரீகத்தை வளர்த்தெடுத்த தலைவர்களில், இந்தத் தலைமுறைப் பார்த்த கடைசி தலைவர் கலைஞராகத்தான் இருப்பார். மாற்றுக் கட்சி, எதிர்க் கட்சி, எதிரிக் கட்சி, தன்னை விட்டு ஓடிப் போனவர்கள் என்று எந்த பேதமும் பார்க்காமல், நட்போடு பழகியவர் கருணாநிதிதான் (சில பழிவாங்கல்கள் நடந்திருந்தாலும்…, அவரும் மனிதர்தானே!).

தமிழ் இலக்கத்துக்கு அர் அளித்த பங்களிப்பை நவீன இலக்கியவாதிகள் ஏற்கத் தயங்கக் கூடும். அவர்களின் சின்ன மைக்ரோ உலகம் பொதுமக்களுக்கானதல்லவே! ஆனால் பொதுவெளியில், தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய மகத்தான தலைவர், மொழி அறிஞர் கருணாநிதி. ‘இமயமலைக்கு பொன்னாடை போர்த்துவது போல’ திருக்குறளுக்கு அவர் எழுதிய அந்த உரை ஒன்றுபோதும். இன்றுவரை தமிழில் இதுவே சிறந்த உரை என்பதுதான் தமிழறிந்த மக்களின் கருத்து.

திரைத்துறையில் இத்தனை நீண்ட காலம் பணியாற்றிய ஒரு கலைஞர் எனக்குத் தெரிந்து யாருமே இல்லை. கடைசியாக அவர் எழுத்தில் வெளியான பொன்னர் சங்கர் போதும், அவரது வசன ஆளுமைக்குச் சாட்சி சொல்ல.

அரசியல், சினிமா, இலக்கியம், பத்திரிகை, மொழிப் பற்று, சமூக மாற்றம், தொழில் நுட்ப வளர்ச்சி என அனைத்தி்லுமே கலைஞர் தனது முத்திரையைப் பதித்துள்ளார் அவர் வாழ்ந்த நாட்களில்.

இந்த நூற்றாண்டில், இந்தியா கண்ட ஆச்சர்யத் தலைவர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி என்றால், அது மிகைப் புகழ்ச்சி அல்ல, முழுமையான உண்மை!

– ஷங்கர் எஸ்
முதன்மை ஆசிரியர்
வணக்கம் இந்தியா

From around the web