தமிழர் பாரம்பரியமும் கலாச்சாரமும்  ‘பக்தி இலக்கியம்’  மட்டும்தானா? – கார்த்திகேய சிவசேனாபதி சுளீர்!

கோவை : சமீபகாலமாக கோவில்கள், நதிகள், தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம் என தமிழர்கள் சார்ந்த அனைத்துக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தியும், தமிழகத்தின் ஆட்சியாளர்கள் கோவில்களை பாழ்படுத்தி விட்டார்கள் போன்ற குற்றச்சாட்டுகளையும் குறிப்பிட்ட சிலர் அடுக்கி வருகிறார்கள். மாரிதாஸ் என்ற மோடி ஆதரவாளர் “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒரு நாள் நிகர வருமானம் வெறும் 50 ரூபாய். தமிழகக் கோவில்களின் ஆண்டு வருமானம் 55 கோடி ரூபாய் ” என்று பொய்யான
 
 
 
 
கோவை : சமீபகாலமாக கோவில்கள், நதிகள், தமிழர் பாரம்பரியம், கலாச்சாரம் என தமிழர்கள் சார்ந்த அனைத்துக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தியும்,  தமிழகத்தின் ஆட்சியாளர்கள் கோவில்களை பாழ்படுத்தி விட்டார்கள் போன்ற குற்றச்சாட்டுகளையும் குறிப்பிட்ட சிலர்  அடுக்கி வருகிறார்கள்.
 
மாரிதாஸ் என்ற மோடி ஆதரவாளர் “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒரு நாள் நிகர வருமானம் வெறும் 50 ரூபாய். தமிழகக் கோவில்களின் ஆண்டு வருமானம் 55 கோடி ரூபாய் ” என்று பொய்யான தகவல்களை வீடியோ மூலம் வெளியிட்டு இருந்தார். அதை ஆதாரப்பூர்வமாக முரளிதரன் காசி விஸ்வ நாதன் மறுத்து இருந்தார். 
 
 
மாரிதாஸ் , தமிழக கோவில்களுக்கு வருமானமே இல்லை என்று சொல்ல, அதற்கு முற்றிலும் முரணாக வாட்ஸ் அப்பில்,”பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களால் வரும் வருமானம் மட்டும் 150 கோடிகள். திருவள்ளூர் வீரராகவன்,சோளிங்கர்,வேலூர்-ரத் னகிரி,திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களால் வருமானம் 150 கோடிகள், மதுரை மீனாட்சி, அழகர், கூடல் கோவில், வருமானம் 150 கோடிகள்” என்று எல்லா கோவில்களுக்கும் தலா 150 கோடி வருமானம் என மொத்தம் 1800 கோடி ரூபாய்க்கு கணக்கு காட்டியுள்ளார்கள். அதையெல்லாம் தமிழக ஆட்சியாளர்கள் கொள்ளை அடித்து விட்டதாகவும் கோவில்களை மீட்க வேண்டும் என்றும் குரல் எழுப்பியுள்ளார்கள் 
 
இன்னொரு பக்கம் தாமிரபரணி ஆற்றில் 144 வருடங்களுக்கு முன்னதாக புஷ்கரம் புஷ்கரணி நடந்ததாக சங்கரமடம் சார்பில் கூறப்பட்டுள்ளது. சங்கர மட ஏட்டிலோ, அந்த காலத்தில் ஆண்ட ஆங்கிலேயரின் மாவட்ட ஆட்சிக் குறிப்பிலோ அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக குறிப்பிட வில்லை. மாறாக, அந்த வருடத்தில் தாமிரபரணியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதாக திருநெல்வேலி கெஸட் புத்தகத்தை ஆராய்ந்து விளக்கம் அளித்துள்ளார் நெல்லையைச் சார்ந்த கார்த்திக் புகழேந்தி.
 
 
இந்நிலையில், பக்தி இலக்கியம் தான் தமிழர் பாரம்பரியம் என்று சொல்லப்படுவதை மறுத்து, தீய உள்நோக்கத்துடன் அப்படிப் பரப்புகிறார்கள் என சமூக ஆர்வலர் கார்த்திகேயே சிவசேனாபதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,
 
“தமிழகத்தில் அல்லது தமிழர்களிடம் பாரம்பரியம் கலாச்சாரம் என்று பேசும் பொழுது தொல்காப்பியத்தில் ஆரம்பிக்காமல் சங்க இலக்கியத்தைப் பேசாமல் திருக்குறளைப் பற்றி தொடங்காமல், குறிப்பாக தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், இந்த மூன்றையும் பற்றி பேசாமல் 10 ஆம் நூற்றாண்டில் வந்த பக்தி இலக்கியத்தை மட்டும் பேசுபவன் தமிழ் இனத்தின் துரோகி. அதற்காகப் பக்தி இலக்கியத்தைப் பேச வேண்டாம் என்று கூற வேண்டிய அவசியமும் இல்லை.
 
தொல்காப்பியம் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல். சங்க இலக்கியம் 2400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இலக்கிய படைப்புகள். திருக்குறள் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழனின் மிகச் சிறந்த உலகமே போற்றக் கூடிய படைப்பு.
 
தொல்காப்பியத்தைப் பேச வேண்டும். சங்க இலக்கியத்தைப் பேச வேண்டும். திருக்குறளின் தொன்மையை பற்றிப் பேச வேண்டும் பக்தி இலக்கியத்தையும் பேச வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை ,ஆண்டாள் பாசுரம் பற்றியும் பேச வேண்டும் .
 
இதுவே பாரம்பரியம் இதுவே கலாச்சாரம் . அந்த முக்கியமான மூன்று நூல்களையும் மறைத்து பக்தி இலக்கியத்தைப் பற்றி மட்டும் பேசுபவர்கள் மூடர்கள் என்றே நாம் உணர்தல் வேண்டும். இதைப் புரிந்து கொண்டால் எதற்காக முக்கிய மூன்று நூல்களின் பெருமையை மறைக்கிறார்கள் என்றும் எதற்காக 10 ஆம் நூற்றாண்டில் இருந்து தமிழனின் வரலாற்றை எடுத்துப் பேசுகிறார்கள் என்றும் நமக்குப் புரிதல் ஏற்படும்.” என்று  கார்த்திகேய சிவசேனாபதி கூறியுள்ளார்.
 
அதானே, தமிழுக்கும் தமிழர்களுக்கும் அடையாளமான தொல்காப்பியம்,  யவனர்கள் தமிழகம் வந்து தங்கியிருந்து, சுங்கம் கட்டி ஏற்றுமதி செய்த பூம்புகார்பட்டினம் உட்பட தமிழர்களின் வாழ்வை எடுத்துக்காட்டும் சங்க இலக்கியம், உலகப் பொதுமறையான திருக்குறள் மற்றும் கீழடி – ஆதிச்சநல்லூர் தொன்மங்கள் இல்லாமல் தமிழ் மொழி, தமிழர் பாரம்பரியம் , கலாச்சாரம் எதுவும் கிடையாதே!
 
– வணக்கம் இந்தியா

From around the web