தெற்கிலிருந்து வீசிய கதிரொளி! கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்!!

தெற்கின் சூரியனுக்கு தாய்தந்தையர் வைத்த பெயர் தட்சிணாமூர்த்தி! பதினான்கே வயதில் அரசியல். அதன்பின், கடந்த எண்பது ஆண்டுகளாக கருணாநிதி என்ற அவரின் பெயரைச் சுற்றித்தான் தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது! யாரிந்த கருணாநிதி என்று தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது அவரது தமிழ்! அவரின் வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம் அன்றைய திரைப்படத்துறையின் இயல்பையே மாற்றியமைத்தது. அந்தப் படத்திற்கு வசனம் எழுதும்போது அவர் 28 வயது இளைஞர். அவ்வளவாக அறியப்படாதவர். இருப்பினும், வசனங்களில் தீப்பறந்தது! சமூகநீதி தெறித்தது!
 
தெற்கிலிருந்து வீசிய கதிரொளி! கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும்!!தெற்கின் சூரியனுக்கு தாய்தந்தையர் வைத்த பெயர் தட்சிணாமூர்த்தி! பதினான்கே வயதில் அரசியல். அதன்பின், கடந்த எண்பது ஆண்டுகளாக கருணாநிதி என்ற அவரின் பெயரைச் சுற்றித்தான் தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது!
 
யாரிந்த கருணாநிதி என்று தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது அவரது தமிழ்! அவரின் வசனத்தில் வெளிவந்த பராசக்தி திரைப்படம் அன்றைய திரைப்படத்துறையின் இயல்பையே மாற்றியமைத்தது. அந்தப் படத்திற்கு வசனம் எழுதும்போது அவர் 28 வயது இளைஞர். அவ்வளவாக அறியப்படாதவர். இருப்பினும், வசனங்களில் தீப்பறந்தது! சமூகநீதி தெறித்தது!  

அப்படியென்ன சமூகநீதி பேசினார் அந்த 28வயது இளைஞர்?

 
சிவாஜியின் குரல்: “ஏய், பூசாரி! முதலில் உன் ஜாதகத்தைக் கணித்துக்கொள்”
பூசாரி: “யார், அம்பாளா பேசுவது?”
சிவாஜியின் குரல்: “அம்பாள் எந்தக்காலத்திலடா பேசினாள்? முட்டாள்!”
 
பூசாரி, அம்பாள் என்ற சொற்களில் விளையாடிய நுட்பம் சமூக அடுக்கு எதிர்ப்பையும், நாத்திகத்தையும் தூக்கி நிறுத்தியது! மூடநம்பிக்கைகளைச் சுழற்றியடித்தது! அப்போதிருந்த சமூகச் சூழலில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பராசக்தி படத்துக்கு தடைவிதிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். அப்போதைய தலைமைத் தணிக்கை அதிகாரி ஸ்டாலின் சீனிவாசன் பராசக்தி படத்தை ஆய்வு செய்துவிட்டு, படத்தைத் தடைசெய்யத் தேவையில்லை என்றார்! படம் வரலாறு காணாத வெற்றிபெற்றது! அதன்பின், திராவிட அரசியல் பேசுவதே தமிழ்த் திரைப்பட உலகின் இயல்பாகிப்போனது! 
 
நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள் அன்போடு அவருக்கு சூட்டிய பெயர் கலைஞர்! அதன்பின், அதுவே நிலைத்துப்போனது! 
 
திராவிடம் பேசும் வெறும் வசனகர்த்தாவாக மட்டுமே அவர் நிற்கவில்லை!  குறளோவியம், திருக்குறளுக்கு உரை, தொல்காப்பிய உரை, வரலாற்று புதினங்கள் என்று அவரின் எழுத்து  ஒரு எல்லைக்குள் அடங்கவில்லை. சின்னஞ்சிறு வயதிலேயே கையெழுத்து ஏடு கொண்டுவந்தவர் கலைஞர். முரசொலி கலைஞரின் குழந்தை! 
 
பேச்சும் அப்படித்தான்!  “உடன் பிறப்பே!” என்ற அந்தக் கரகர குரலுக்கு மயங்காத தமிழரில்லை! புலவர்களுக்கு மட்டுமே என்று விலக்கிவைக்கப்பட்டிருந்த சங்க இலக்கியத்தை மேடைகளில் பொதுமக்களிடையேயும் பேசியவர் கலைஞர். அவரது அடுக்குமொழியில் தமிழகமே மகுடிக்கு அடங்கிய பாம்புபோல் ஆடியது! 
 
அவரது அரசியலறிவு செதுக்கப்பட்டது பெரியாரின் பாசறையில்! பெரியார், அண்ணா ஆகியோரின் பாசத்தில் நனைந்த அறிவுச்சுடர் கலைஞர்! கல்லக்குடியை டால்மியாபுரம் என்று மாற்றியது சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அவர்களின் தலைமையிலான அப்போதைய அரசு. அதை எதிர்த்து போராட்டத்தில் குதித்த கலைஞருக்கு அப்போது 29 வயதுதான்! அதுதான் அவரது முதல் அரசியல் போராட்டம்! அடுத்த நான்காண்டுகளில் இந்தி எதிர்ப்பு போராட்டம். கலைஞரின் முழக்கம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளிலும் எதிரொலித்தது! ஒவ்வொரு இளைஞனின் ரத்தத்தையும் கலைஞர் என்னும் அரசியல் புயல் சூடேற்றியது.
 
1957 -ல் குளித்தலையில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக அடியெடுத்து வைத்தவர், அதன்பின்பு எந்தத் தேர்தலிலும் தோற்றதே இல்லை! அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அவர் தமிழகத்தின் முதல்வரானபோது அவருக்கு 45 வயதுதான்! அன்றிலிருந்து இன்றுவரை கலைஞர் என்ற ஒற்றைச் சொல்தான் தமிழக அரசியலின் அச்சாணி! பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கலைஞரின்றி தமிழக அரசியல் இல்லை! அந்த ஒற்றை மனிதரின் தலைமையினால்தான் சோதனையான நேரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் நின்றது.
 
ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவிப் பொறுப்பேற்றவர், கலைஞர்! முதலமைச்சர் பதவியோ, எதிக்கட்சித் தலைவர் பதவியோ கலைஞரின் எழுத்தையும் பேச்சையும் தடுக்கவே முடியவில்லை. சட்டமன்றத்தில் அவரது கன்னிப்பேச்சைக் கேட்டு அண்ணா அகமகிழ்ந்தார். எப்பொழுதுமே தனது ஒவ்வொரு பேச்சையும் கன்னிப்பேச்சாகவே பார்த்தவர் கலைஞர். ஒவ்வொரு பேச்சுக்கும் அவர் ஈடுபாட்டுடன் குறிப்புகள் எடுத்துத்தான் பேசுவதாக பலமுறை குறிப்பிட்டிருக்கிறார். 
 
கலைஞரின் தலைமைப் பண்பு உலகறிந்தது. காலை 5:30மணிக்கு முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வருவதற்குள் விரல் நுனியில் தகவல்களை வைத்திருக்கவேண்டும் என்று தலைமை  உளவுத்துறை அதிகாரிகள் கலைஞரைப் பற்றிக் கூறுவார். கலைஞரின் நினைவாற்றல் ஈடுயிணையற்றது. அதனாலேயே, அதிகாரிகள் கலைஞரை மதித்தது மட்டுமில்லாமல், மிகவும் நேசித்தனர். 
 
கலைஞரின் ஆட்சியில்தான் அரசு அதிகாரிகளுக்கு ஊதியஉயர்வும், அரசு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும் அதிகரித்தன. போக்குவரத்துத்துறை என்ற துறையே கலைஞரால் உருவாக்கப்பட்டதுதான். சின்னச்சிறு ஊர்களுக்குக் கூட பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டு, சாலை போடப்பட்டது கலைஞரின் ஆட்சியில்தான். குக்கிராமங்களுக்கும் மின்சாரவசதி கலைஞரின் ஆட்சியில்தான் கிடைத்தது. கலைஞரின் மூச்சுக்கூட சமூகநீதி பேசும். 

முதலமைச்சராக கலைஞர் முன்னெடுத்த சில முக்கியமானவைகள்:

 
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 
கையால் இழுக்கும் ரிக்க்ஷாவை ஒழித்ததோடு, இலவசமாக சைக்கிள் ரிக்க்ஷா
இந்திய அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பு 
கல்லூரி வரை இலவசக் கல்வி 
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் 
விவசாயக்கடன் தள்ளுபடி 
சொத்தில் பெண்ணுக்கும் சம உரிமை ஏற்படுத்திய சமூகநீதி
அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு
சமத்துவபுரம் 
 
அரசியலில் அந்த சூரியனை மறைக்க முயன்ற மேகங்கள் சிதறி ஓடின! நட்சத்திரங்கள் காணாமல் போயின! அவர் மட்டும் இன்றுவரை தகத்தகாய சூரியனாகவே வாழ்கிறார்!
 
இத்தனையிருந்தும் அரசியலில் அவர் சறுக்கிய இடங்களும் ஏராளம். அழகிய நிலவில் கறை படிந்து இருப்பதுபோல கலைஞரின் மீதும் பல கடும் விமர்சனங்கள் உண்டு. குறளுக்கு உரை எழுதிய அந்த அறிஞரால் அரசியலில் அறம் தவறாமல் ஆளுமை செலுத்த முடியாமற்போனது. எனினும், “குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்” என்பது வள்ளுவன் வாக்கு. கலைஞரிடம் மிகையே மிகுந்திருக்கிறது! 
 
எழுத்துதான் கலைஞரின் உயிர்; பேச்சுதான் அவரது மூச்சு!  இயங்கிக் கொண்டேயிருந்த அந்தப் பேராற்றல் முதுமையினால் தளர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபோதும்கூட அதன் இயக்கம் நிற்கவேயில்லை! 
ஒரு மாமனிதரின் காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமையில் சமூகநீதி காப்போம்!
 
#HBDKalaingar97 #கலைஞர்கருணாநிதி
 
– உதயபாஸ்கர், கலிஃபோர்னியா, யு.எஸ்.ஏ
 

From around the web