இந்திய சுதந்திரத்திற்காக போரிட்ட இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிப்பது தான் நோக்கமா?

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கி ஜூன் 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி “இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்” எனவும் அழைக்கப்பட்டது. இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இந்தியாவின் வளங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு
 

இந்திய சுதந்திரத்திற்காக போரிட்ட இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறிப்பது தான் நோக்கமா?ந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 இல் இந்தியாவில் மீரட் என்ற நகரில் தொடங்கி ஜூன் 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன்  முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி “இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்” எனவும் அழைக்கப்பட்டது. இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர்.

இந்தியாவின் வளங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு அதிக வரிகள் விதிக்கப்பட்டன. இதனால்  இந்தியத் தொழில்கள் அழிவை நோக்கி சென்றன. இது தவிர ஆங்கிலேயர்களின்  நிலவரி மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருந்தன.

இன்றைய இந்திய அரசுக்கும் மேற்சொன்ன காரணங்கள் எதேச்சையாக பொருந்தி போகின்றன. இஸ்லாமியர்களின்  இன்றையப் போராட்டங்கள் இந்திய சுதந்திர போராட்ட வரலாறுகளை நினைவுபடுத்துகின்றன.
 
அப்படி முதல் இந்திய சுதந்திர போரிற்கு காரணமான முஸ்லிம் சமுதாயத்தை மட்டும், அவர்களின் குடியுரிமையை நிரூபிக்க கோருவது, யாருக்கும் ஏற்புடையதாக தோன்றவில்லை, ஆளும் வர்க்கத்தை தவிர.  இங்கு யாரும் புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் என்ற வரலாறே இல்லை. அவர்கள் இம்மண்ணின் ஆதாரபூர்வ குடிகளே. அப்படியிருக்க,  இந்த பூர்வகுடிகளின் குடியுரிமை கேள்விக்குள்ளாகும் போது அச்சப்படுவது நியாயமும் கூட.  

ஒருவரின் குடியுரிமை கேள்விக்குறியானால், அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும். குறிப்பாக வாக்குரிமை பறிக்கப்படும். இஸ்லாமியர்களின் பெரும்பாலான வாக்குகள்  இன்றைய ஆளும் அரசுக்கு எதிரானவை என்பது எதார்த்தமான உண்மை. இந்த சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களின் குடியுரிமையை பறித்து, எதிர்க்கட்சிகளுக்கு செல்லும் அவர்களின்  வாக்குகளை நிர்மூலமாக்குவது, ஆளும் மத்திய அரசின் திட்டமோ என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.

அவர்களின் வாதத்திற்கு வலுசேர்க்கும் விதமாக, 200 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்களை முற்றிலுமாக புறக்கணித்து, அவர்களின் ஒரு பிரதிநிதி கூட இல்லாமல் மத்திய அரசின் மந்திரி சபை இயங்குகிறது.   200 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்தை, ஒரு அரசு  முற்றிலுமாக புறந்தள்ளி செயல்படுவது சுதந்திர இந்தியாவில் புதிய வரலாறு,  ஆச்சரியமல்லவா!.  கடந்த 6 வருடமாக இந்த  அரசியல் காழ்ப்புணர்ச்சியையும் கடந்தே இஸ்லாமியர்களின் வாழ்க்கை பயணிக்கிறது.  

அண்ணல் பாபா சாஹிப் அம்பேத்கர் அவர்களால், மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்டு  இந்தியா அரசியலைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படை கோட்பாட்டிற்கு இழுக்கு ஏற்படும் வண்ணம், மதத்தின் அடிப்படையில் அரசியலைப்பு சட்டத்தை மாற்றுவது  இந்திய தேசத்தின் பன்முக தன்மையை பாழாக்கிவிடும் அல்லவா?.   மக்கள் தொகை கணக்கெடுப்பை யாரும் மறுக்க வில்லை. இந்தியாவின் பிறப்பு இறப்பு பதிவுகள் 1967ம் ஆண்டில் தான் சட்டமாக்கப்பட்டன  ஆனால் அதற்கு மூதாதையரின் ஆதாரங்கள் கேட்பது தேவையா, என்பதே  அனைவரின் கேள்வி.

கடந்த 3 மாதங்களாக நடந்து வரும் இவர்களின் அறவழிப்  போராட்டங்கள், ஜல்லிக்கட்டு போராட்டங்கள் போல கலவரங்கள் தூண்டப்பட்டு, துப்பாக்கி சூடு நடத்தி,  முடக்கப்பட்டுவிடுமோ என்ற பீதி பரவ தொடங்கி விட்டது.  போராட்டக்காரர்கள் தீவிரவாதியாக , சமூக விரோதியாக சித்தரிக்கப்பட்டு, அசம்பாவிதங்கள் நடத்தப்பட்டு பழி போடப்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.  

உண்மையாகவே, அரசுக்கு அக்கறை இருக்குமாயின், பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம்.  அவர்களின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் மத்திய அரசு இதுபோன்ற ஜனநாயக வழிமுறைகளை யோசித்து பார்த்ததாக கூட தோன்றவில்லை.

அரசியல் இயக்கமாக தேர்தலில் வெற்றி பெற யுத்திகளை வகுப்பது வேறு.  ஆனால் அரசு என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் பொதுவானதாக இருத்தல் அவசியம்.  வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியா. வெறுப்புகளை கக்கும் வார்த்தைகளை தவிர்த்து, மனிதநேயம் காப்போம். அரசுகள் வரலாம் போகலாம், மக்கள் என்றும் நிரந்தரமானவர்கள்.  

-அபு கான், கலிஃபோர்னியா, யு.எஸ்.ஏ

 
 

From around the web