பிரஷாந்த் கிஷோர் திமுகவுக்கு வரமா? சாபமா?

கடந்த சில நாட்களாக தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விவகாரம் திமுகவுக்காக அரசியல் யுத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தான். நாடாளுமன்றத்திலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, பிரஷாந்த் கிஷோர் என்னும் பிராமணரை நம்பும் அளவுக்கு மோசமாகவா உள்ளது. எதிரணியில் யாருமே இல்லாத நிலையில் ஸ்டாலினுக்கு அவர் மீதும், கட்சியினர் மீது நம்பிக்கையில்லையா? என கேட்காத விமர்சகர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஏனையோர் திமுக மீதும் ஸ்டாலின் மீதும் கரிசனம் காட்டுவது போல் போலியான அக்கறை
 

பிரஷாந்த் கிஷோர் திமுகவுக்கு வரமா? சாபமா?டந்த சில நாட்களாக தமிழகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த விவகாரம் திமுகவுக்காக அரசியல் யுத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தான்.

நாடாளுமன்றத்திலும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி, பிரஷாந்த் கிஷோர் என்னும் பிராமணரை நம்பும் அளவுக்கு மோசமாகவா உள்ளது. எதிரணியில் யாருமே இல்லாத நிலையில் ஸ்டாலினுக்கு அவர் மீதும், கட்சியினர் மீது நம்பிக்கையில்லையா? என கேட்காத விமர்சகர்கள் ஒரு சிலர் மட்டுமே. ஏனையோர் திமுக மீதும் ஸ்டாலின் மீதும் கரிசனம் காட்டுவது போல் போலியான அக்கறை போர்வை போர்த்திக் கொண்டு, அய்யயோ பிரஷாந்த் கிஷோர் திமுக பக்கம் போய்ட்டாரே என்ற ஆதங்கம் கொண்டவர்களாகவே தெரிகிறார்கள்.

அதனாலேயே பிரஷாந்த் கிஷோர் சொல்லித்தான் திமுகவுக்கு திராவிடக் கொள்கைகள் தெரிய வேண்டுமா? அமித் ஷா சொல்லித்தான், ஐக்கிய ஜனதா தள கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட பிரஷாந்த் கிஷோர் எப்படி திமுகவுக்கு விசுவாசமாக இருப்பார் என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள். ஆனால் திமுக தரப்பினரோ, தற்கால தேர்தல் முறைகளுக்கு உதவியாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் தான் பிரஷாந்த் கிஷோரின் நிறுவனத்தினர் என்று சமாதானம் சொல்கிறார்கள்.

பிரஷாந்த் கிஷோர் கமல்ஹாசனிடம் பேசிய போது யாரும் எதுவும் சொல்லவில்லை. முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்துப் பேசியதாக தகவல் வந்த போதும் எதுவும் பேசப்படவில்லை. ரஜினிகாந்தை டெல்லியில் சந்தித்தார் என்று கூறப்பட்ட போதும் விவாதம் ஆகவில்லை. ஆனால், மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நொடி முதல் அனைத்து ஊடகங்களிலும் விவாதப் பொருள் ஆகிவிட்டது.

ஸ்டாலினின் ட்வீட்டை கவனித்தால் இளைய தமிழ் புரொஃபெஷனல்ஸ் என்று ஒரு வார்த்தையை சேர்த்துள்ளார். அதாவது தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களின் உதவி என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் பிரஷாந்த் கிஷோர் மேற்பார்வையில் தமிழ் நாட்டு இளைஞர்கள் தான் களப்பணி ஆற்ற உள்ளார்கள் என்பதை ஸ்டாலின் தெளிவு படுத்தியுள்ளார்.

அட, மோடிக்காக 2014ம் ஆண்டு வேலை செய்தவர், அவருடைய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தை சார்ந்தவர், அந்த கட்சிக்காக வேலை பார்த்தவர் என்றெல்லாம் பிரஷாந்த் கிஷோரின் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். பாஜகவின் பரமவைரியான காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப் தேர்தலில் வேலை செய்து, அந்தக் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த உதவி செய்தவர் இதே பிரஷாந்த் கிஷோர் தான் என்பது தமிழக அரசியல் விமர்சகர்கள் கண்களுக்கு மட்டும் தெரிவதே இல்லை.

தற்போது முடிவுகள் வந்து கொண்டிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக களத்தில் உள்ள ஆம் ஆத்மிக்குத் தான் பிரஷாந்த் கிஷோர் பணியாற்றியுள்ளார் என்பதையும் கவனமாக மறைத்து விடுகிறார்கள் இந்த நடுநிலை விமர்சகர்கள்.

பிரஷாந்த் கிஷோர் ஒரு வணிக நிறுவனத்தின் முதலாளி. அவருடைய நிறுவனத்திற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால், அவர் தேர்ந்தெடுக்கும் கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஆராய்ந்து யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை கணித்து அந்தக் கட்சியுடன் சேர்ந்து பணியாற்றினால் தான் அவருக்கு லாபம். இல்லையென்றால் என்னதான் யுத்திகளைப் பயன்படுத்தினாலும் அது பிரஷாந்த் கிஷோருக்கும் இழப்பாகவே முடியும்.

கமல் ஹாசன், எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்த் (பேசியதாக தகவல்) என எல்லோருடனும் பேசிப் பார்த்துவிட்டு கடைசியில் திமுகவை தேர்ந்தெடுத்துள்ளார் என்றால், திமுகவுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது என்பது தான் பிரஷாந்த் கிஷோரின் கணிப்பு.

இன்னொரு பக்கம் திமுக தரப்பிலிருந்து பார்த்தால், எதிர்கட்சிகளுக்கு பிரஷாந்த் கிஷோர் சென்றால், அந்த தரப்பு வலுப்பெறும் என்பது மறுக்க முடியாத உண்மை. எதிரணியில் உள்ளவர்கள் வலிமை அடையாமல் தடுப்பதற்காகவும், பிரஷாந்த் கிஷோரை தங்கள் பக்கம் இழுத்து இருக்கலாம். அதுவும் ஒரு தேர்தல் யுத்தி தானே!

பிரஷாந்த் கிஷோரின் வெற்றி வரலாறு தெரிந்ததால், திமுகவுடன் அவர் சேர்ந்ததும், அதை குறைத்து மதிப்பிடும் வேலையில் இறங்கியுள்ளார்கள். இவர்கள் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, ஸ்டாலின் முதல்வர் ஆகிவிடக்கூடாது என்று எண்ணுபவர்கள் தான்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் உள்பட இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் பிரஷாந்த் கிஷோரின் பங்களிப்பை கவனித்தால், அவருடைய வருகை திமுகவுக்கு பலம் சேர்த்துள்ளது என்பதே உண்மை!

தமிழ்நாடு 2021ல் புதியதொரு தேர்தல் களத்தை சந்திக்க உள்ளது என்பது நிச்சயம்!

– மணி

https://www.A1TamilNews.com 

From around the web