காலா – ஆன்மீக அரசியலின் அரிச்சுவடியா?

காலா ஒரு டான் கதை. இதற்கும் ஆன்மீக அரசியலுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? படத்தில் கோட்டிட்டு காட்டப்பட்டுள்ள காரணங்களை ஆராயலாமா? பாட்ஷாவின் வெற்றியைத் தொடர்ந்து ஒவ்வொரு நடிகரும் நடித்து ஏராளமான டான் படங்கள் வந்து விட்டது. ஆனால் ஒன்றை மீறி இன்னொன்றில் சினிமாத்தனமான லாஜிக்கை மீறிய ஓட்டைகள் ஏராளம். ஓரு டான் கதையை இப்படி யதார்த்தமாக எடுக்க முடியும் என்று புதுசாக ஒரு ரூட்டைப் போட்டுக் காட்டியுள்ள இயக்குனர் பா.இரஞ்சித்துக்கு பாராட்டு. க்ளைமாக்ஸில் கொஞ்சம்
 

காலா – ஆன்மீக அரசியலின் அரிச்சுவடியா?

 

காலா ஒரு டான் கதை. இதற்கும் ஆன்மீக அரசியலுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்? படத்தில் கோட்டிட்டு காட்டப்பட்டுள்ள காரணங்களை ஆராயலாமா?

பாட்ஷாவின் வெற்றியைத் தொடர்ந்து ஒவ்வொரு நடிகரும் நடித்து ஏராளமான டான் படங்கள் வந்து விட்டது. ஆனால் ஒன்றை மீறி இன்னொன்றில் சினிமாத்தனமான லாஜிக்கை மீறிய ஓட்டைகள் ஏராளம். ஓரு டான் கதையை இப்படி யதார்த்தமாக எடுக்க முடியும் என்று புதுசாக ஒரு ரூட்டைப் போட்டுக் காட்டியுள்ள இயக்குனர் பா.இரஞ்சித்துக்கு பாராட்டு. க்ளைமாக்ஸில் கொஞ்சம் யதார்த்தை மீறிய சினிமாத்தனத்துக்கு ஒரு குட்டும் வைக்கலாம். காமிரா, இசை, செட்டிங்ஸ் என அனைத்து டெக்னிஷியன்களுக்கும் பாராட்டுகள். ஆயிரக்கணக்கான துணை நடிகர்களின் பங்களிப்பும் முக்கியமானது.

வயதுக்கேற்ற வேடத்தில் தான் நடிப்பேன் என முடிவு எடுத்தாலும் நடித்தாலும், தான் என்றும் சூப்பர் ஸ்டார் தான், அதிரடி நாயகன் தான் என்று அசத்துகிறார் ரஜினிகாந்த். மனிதருக்கு காதல் காட்சி என்னமாய் வருகிறது. நிஜ காதலியின் தாக்கம் இன்னும் இருக்கிறது போலிருக்கு. அவர் காட்டும் பொண்டாட்டி பாசம் படம் பார்க்க வரும் பெண்களை நிச்சயம் நெகிழச் செய்யும். இந்த பெருசுகளின் சேட்டை இன்னும் கொஞ்சம் இருக்கக் கூடாதா என ஏங்க வைக்கிறது.

மும்பை தாராவியை தெரிந்தவர்கள், படத்துடன் உடனடியாக ஒட்டி விடுவார்கள்.
படம் முழுவதும் அந்தப் பகுதியின் இயற்கையான வாசம் வீசுகிறது. ரஜினி படத்தில் வில்லனுக்கு முக்கியத்துவம் இருப்பது தெரிந்தது தான். காலாவில் பல கேரக்டர்களுக்கும் அத்தகைய முக்கியத்துவம் இருக்கிறது. பட ஓட்டத்துடன் ஒட்டி வருவதால் எந்தவிதமான செயற்கைத் தனமும் தெரியவில்லை. நானா படேகர் யதார்த்தமான மும்பை ‘தாதா’ அரசியல்வாதியை அச்சு அசலாக காட்டுகிறார்.

ஈஸ்வரி ராவ்-க்கு அடுத்த இன்னிங்ஸ் நிச்சயம் இருக்கும். மனுஷி காலாவின் மனைவியாக வாழ்ந்து இருக்கிறார். இளைய மகனிடம் காட்டும் நக்கல் கலந்த பாசம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் கணவரை அதட்டும் தோரணை. ரஜினி படத்தில் இப்படி ஒரு மனைவி கேரக்டர் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. அந்த செல்வம், ஒவ்வொரு அப்பாவையும் ஏங்க வைக்கும் மகன்.

இளைய மகன் லெனின், ஒவ்வொரு வீட்டின் கடைக்குட்டியை கண் முன் நிறுத்துகிறார். மராத்திப் பெண்ணாக வரும் லெனினின் காதலி, நிஜமான தாராவிப் பெண்ணாக வாழ்ந்துள்ளார். இருவருடைய காதல், மும்பையில் தமிழ் – மராத்தி இன மக்களின் நிஜ காதல்களை பிரதிபலிக்கிறது. இவர்களுக்கு மத்தியில் சமுத்திரக்கனி ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ். மச்சான், அக்கா என்று குடும்பத்தில் ஒருத்தராக வலம் வரும் ரியலிஸ்டிக் கேரக்டர். அவரை எதிர்த்துப் பேசும் மகனை மிரட்டுகிறாரே காலா!. அங்கே ஒரு தெற்கத்தி அப்பாவாக ஜொலிக்கிறார் சூப்பர் ஸ்டார். ஹுயுமா குரேஷி கேரக்டர் வித்தியாசமானது. அவருக்கும் மனைவிக்கும் இடையே அல்லாடும் காட்சிகளில் ரஜினியின் பாடு சுவாராஸ்யமானது. பேரன் பேத்திகள் சகிதம் குடும்பத்தினருடன் பேசும் ஒரு காட்சியில் மனிதர் நெஞ்சை பிசைகிறார்.

சரி கதை என்ன? ரொம்ப சிம்பிள் மாநகரங்களின் மனித சக்திகளான அடிப்படைத் தொழிலாளிகளின் வாழ்விட உரிமைப் பிரச்சனை. நிச்சயம் யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம். பிரச்சனையை சுட்டிக் காட்டியிருக்கும் படத்தில் தீர்வைச் சொன்னால் சினிமாத்தனமாகி விடும் என நினைத்து விட்டார்கள் போலிருக்கு. க்ளைமாக்ஸில் நிகழ் கால சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது.

ரஜினியின் ஆன்மீக அரசியலில் இத்தகைய அடித்தட்டு மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளுக்கான தீர்வு இருக்குமா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுகள், எம்ஜிஆர் ஆட்சியின் சைக்கிள் டபுள்ஸ் சட்ட உவமானம் போன்றவைகள், ஆன்மீக அரசியலுக்கும் படத்துக்கும் உள்ள தொடர்பை சுட்டிக் காட்டுவதாகத் தான் தெரிகிறது.

ரஜினிகாந்த் மீது வைக்கப்படும் மிக முக்கியமான அரசியல் குற்றச்சாட்டு, அவர் பாஜக வின் பினாமி என்பதாகும். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காலாவுக்கு எதிரியாக நவ இந்தியா கட்சியின் ஹரி தாதா பாத்திரப் படைப்பும், அவருடைய அடி பொடிகளும் பாஜகவை நினைவூட்டுகிறது. ஒரு காட்சியின் போஸ்டரில் ஹெச்.ராஜா கூட ஹரி தாதா வின் கட்சிக்காரர் என்பது போல் வந்து போகிறது.

உச்சகட்டமாக, க்ளைமாக்ஸில் நானா படேகரின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, பாஜக கட்சிக்காரர்கள் கண் முன்னே வருவதை தடுக்க முடியவில்லை. கழுவி ஊத்தி இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் கண் அசைவு இல்லாமல் இத்தகைய காட்சிகள் இடம் பெற வாய்ப்பே இல்லை.

காலா அரசியல் படம் இல்லை ஆனால் அரசியல் இருக்கு என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். நாம் புரிந்த வரையில் பாஜகவுக்கும் ‘தனக்கும் சம்மந்தம் இல்லை. அடித்தட்டு மக்கள் நலன் தான் தன்னுடைய ஆன்மீக ஆட்சியின் அடிநாதம்’ என்று ரஜினிகாந்த் சுட்டிக் காட்டியிருப்பதாகத் தான் தெரிகிறது.

தாராவி டான் கேரக்டர் என்றாலும் ரஜினிகாந்தின் அரசியல் பாதையை கோடிட்டு காட்டியுள்ளார் காலா.

 

From around the web