இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6 ஆயிரத்து 148 ஆக பதிவானது ஏன்..? விளக்கமளித்த ஒன்றிய அரசு

 
ICV

இந்தியாவில் ஒருநாள் கொரோனா உயிரிழப்பு 6,148 ஆக பதிவாகியுள்ளது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்கள் குறித்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு மேலும் 6,148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. நாட்டில் இதுவரை பதிவான உச்சபட்ச ஒருநாள் கொரோனா உயிரிழப்பு இதுவாகும்.

ஆனால், 6 ஆயிரத்து 148 உயிரிழப்புகளும் கடந்த 24 மணிநேரத்தில் நடந்தவை இல்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், பீகாரில் கொரோனா உயிரிழப்பு மறுகணக்கீடு செய்யப்பட்டு கூடுதலாக 3 ஆயிரத்து 951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் 6 ஆயிரத்து 148 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் கொரோனா பரவத்தொடங்கியது முதல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் முழுமையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருந்துவந்தது.

இது தொடர்பாக மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்து அதிகாரப்பூர்வ தகவலில் பதிவு செய்யப்படாமல் இருந்த எண்ணிக்கை தொடர்பாக பீகார் சுகாதாரத்துறை அமைச்சகம் மறுகணக்கீடு செய்தது. அந்த மறுகணக்கீட்டில் 3 ஆயிரத்து 951 உயிரிழப்புகள் மாநில சுகாதாரத்துறையின் கணக்கில் சேர்க்கப்படாமல் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, கணக்கில் காட்டப்படாத அந்த உயிரிழப்புகள் மறுகணக்கீட்டின் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பீகாரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500-ல் இருந்து 9 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தகவல், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உயிரிழப்புகளும் நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டது.

இதனால்  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 2 ஆயிரத்து 197 உயிரிழப்புகளுடன் பீகார் அளித்த 3 ஆயிரத்து 951 உயிரிழப்பு எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் மொத்த எண்ணிக்கையாக கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.

From around the web