பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடி அசத்திய முதல்வர்..!

 
ShivrajSinghChouhan

மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் மண்ட்லா மாவட்டம் பட்டியலின பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். அங்கு நடைபெற்ற ஜனஜாதிய கவுரவ் திவாஸ் விழாவில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவானது கடந்த 15-ம் தேதியன்று தொடங்கியது.

இந்த விழா பழங்குடியின மக்களின் தலைவரும் சுதந்திர போராட்ட வீரருமான  பீர்சா முண்டாவின் நினைவாக  கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் சவுகான் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சவுகான் கூறுகையில், “மண்ட்லா பகுதியில் மன்னர் ஹிர்தே ஷா பெயெரில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும். பழங்குடியின மக்கள் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகள் ரத்து செய்யப்படும். இங்குள்ள இளைஞர்கள் ராணுவ போட்டித் தேர்வுகளில் சாதிக்கும் வகையில் பயிற்சி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.


மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடி உயிர் நீத்த பழங்குடியின மன்னர்களான சங்கர் ஷா மற்றும் ரகுநாத் ஷா ஆகியோரின் சிலைகளை நிறுவுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

ஜபல்பூர் மண்டலத்தின் கீழ் இந்த பகுதி உள்ளது. இங்குள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. மீதமுள்ள 11 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றது.

மத்தியபிரதேச மாநிலத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பட்டியலின பழங்குடியின மக்கள் பிரிவினர் ஆகும். மாநிலத்தில் உள்ள 230 சட்டமன்ற தொகுதியில் 47 தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாக பட்டியலின பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web