ஒன்றிய இணை அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது

 
Ashish-Mishra

ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் போலீசார் கைது செய்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்ததை அடுத்து அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இரண்டு பேரை மட்டுமே உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆசிஷ் மிஸ்ரா இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடுமை காட்டியதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக ஆசிஷ் மிஸ்ராவுக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று காலை 11 மணிக்கு ஆஜரான அசிஷ் மிஸ்ராவிடம் போலீசார் இரவு 11 மணி வரை சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

சில கேள்விகளுக்கு பதில் அளிக்காததுடன், விசாரணைக்கு ஒத்துழைப்பும் அளிக்காததால் அசிஷ் மிஸ்ராவை கைது செய்துள்ளதாக டிஐஜி உபேந்திர அகர்வால் தெரிவித்தார். பின்னர் நீதிபதி முன், ஆசிஷ் மிஸ்ரா ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். 

From around the web