விமான பயணிகள் எண்ணிக்கையில் அடுத்த ஆண்டு இயல்பு நிலை திரும்பும் - ஒன்றிய அமைச்சர் நம்பிக்கை

 
Hardeep-Puri

விமான பயணிகள் எண்ணிக்கையில் அடுத்த ஆண்டு இயல்பு நிலை திரும்பும் என்று ஒன்றிய அமைச்சர் ஹர்திப் புரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 2020-ம் ஆண்டு நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு, சர்வதேச விமான போக்குவரத்து முடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று பரவி ஒன்றரை ஆண்டுகள் ஆன போதிலும் இன்னும் தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக உலக நாடுகள் விடுபடவில்லை. இதனால், இந்தியா உள்பட பல நாடுகளில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து சில குறிப்பிட்ட வழித்தடங்களில் சிற்ப்பு விமானங்களாகவே இயக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு விமான சேவையும் கொரோனாவுக்கு முந்தைய அளவில் இல்லை. கொரோனா 2-வது அலை தற்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நாட்டில் விமான போக்குவரத்து கொரோனா காலத்திற்கு முந்தைய சூழலை எட்டுவதற்கு 2023-ம் ஆண்டு வரை ஆகலாம் என்று விமான போக்குவரத்து நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் இதை மறுத்துள்ள விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, அடுத்த ஆண்டில் விமானப்போக்குவரத்து இயல்பு நிலை அதாவது கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த புரி கூறுகையில், “நிபுணர்களின் கருத்துக்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனாலும், கொரோனாவுக்கு முந்தைய கால கட்டத்தில் ஒருநாளைக்கு 4 லட்சம் பயணிகள் பயணித்தனர். கொரோனா தாக்கம் குறைந்து  உள்நாட்டு விமான சேவையை மே 25, 2020-ல் தொடங்கினோம். அப்போது 30 ஆயிரத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை கொரோனா 2-வது அலை தாக்கத்திற்கு முன்பாக 3 லட்சத்திற்கு 13 ஆயிரமாக அதிகரித்தது. ஆகவே, அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய பிறகு 2021-க்குள்ளாகவே இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

From around the web