இறந்ததாக நினைத்து 7 மணி நேரம் பிணவறை ஃப்ரீசரில் வைக்கப்பட்ட நபர் உயிருடன் இருந்தார்; உ.பி.யில் நடந்த அவலம்!

 
UP

இறந்ததாகக் கருதியவர் 7 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகேஷ்குமார். இவர் மீது கடந்த வியாழன் அன்று வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது ஸ்ரீகேஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகக் கூறினார். இதனால் அவரது உடலை பிரே பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அரவது உடலை ஃப்ரீசரில் வைக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். இதை அறிந்த உறவினர்கள் 7 மணி நேரம் கழித்து மருத்துவமனைக்கு வந்தனர்.

அப்போது பிணவறையில் அவரது உடலைக் காண்பித்து அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவர்களது உறவினர்களிடம் போலீசார் கையெழுத்து வாங்கும்போது, திடீரென ஸ்ரீகேஷ்குமார் உடல் அசைவதைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது உயிரோடு இருப்பது தெரிந்தது. பின்னர் மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் அலட்சியத்தால் இப்படி நடந்துள்ளது என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இறந்ததாகக் கருதியவர் 7 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web