தேவையில்லாமல் ரெம்டிசிவிர் ஊசி போட்டுக் கொண்டால், மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் - டெல்லி ஏய்ம்ஸ் இயக்குனர்

 
தேவையில்லாமல் ரெம்டிசிவிர் ஊசி போட்டுக் கொண்டால், மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் - டெல்லி ஏய்ம்ஸ் இயக்குனர்

லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ரெம்டிசிவிர் ஊசி தேவையில்லை என்று டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-ம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசமாகிக் கொண்டே செல்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதற்கிடையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரெம்டெசிவிர் மருந்துக்கும் பல்வேறு மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து சட்டவிரோதமாக அதிக விலையில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுகிறது.

இந்நிலையில், லேசான மற்றும் மிதமான கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கு ரெம்டிசிவிர் ஊசி தேவையில்லை என்று டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

தேவையில்லாமல் ஊசி போட்டுக் கொண்டால் அது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்குமாறும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

90 சதவீத நோயாளிகள் வீட்டிலேயே உரிய நேரத்தில் மருந்துகளை உட்கொண்டு குணமாகி விடும் என்று கூறியுள்ள டாக்டர் குலேரியா, 10 அல்லது 15 சதவீத கோவிட் நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவமனையில் அனுமதி தேவைப்படுவதாக தெரிவித்தார்.

From around the web