வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் துவங்கப்படும் - டெல்லி முதல்வர் அறிவிப்பு

 
Delhi

டெல்லியில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்னும் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. டெல்லியில் நேற்று 381 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், டெல்லியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவலை தடுக்க ஒரே ஆயுதமாக உள்ள தடுப்பூசியை செலுத்திக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றனர்.

டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 45 வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசியை ஆர்வமாக போட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்னும் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், டெல்லி மக்கள் தேர்தலின் போது தங்கள் வாக்குகளை பதிவு செய்த மையங்களுக்கு சென்று அங்கு ஏற்பாடு செய்துள்ள கொரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கூறுகையில், ‘ஜகன் வாக்கு, உகான் தடுப்பூசி’ என்ற திட்டத்தை இன்று முதல் துவங்கியுள்ளோம். இந்த திட்டத்தின் கீழ், மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் துவங்கப்படும். இன்னும் 4 வாரங்களில் டெல்லியில் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

From around the web