ஓடும் பஸ்சில் மருத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! கண்டக்டருக்கு தர்ம அடி

 
Sexual-harassment-in-bus

உடுப்பி டவுனில், பஸ்சில் பயணிக்கும்போது மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பஸ் கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி டவுனில் இருந்து தென்கனிடியூர் கிராமத்திற்கு ஒரு தனியார் டவுன் பஸ் ஓடுகிறது. அந்த பஸ்சில் ஏராளமான கல்லூரி மாணவிகள் தினமும் சென்று வருகிறார்கள். குறிப்பாக அந்த பஸ்சில் மருத்து மாணவிகள் அதிகளவில் சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வந்த உபேந்திரா என்கிற உமா சங்கர், அந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதை அதே பஸ்சில் பயணித்து வந்த மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், விடுதி கண்காணிப்பாளர்கள் கவனித்து கண்டக்டர் உமா சங்கரை கண்டித்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து தனது சில்மிஷத்தை அரங்கேற்றி வந்தார்.

Udupi-bus-conductor

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வழக்கம்போல் மாணவிகள் அந்த பஸ்சில் ஏறி பயணித்தனர். அப்போது பஸ் கண்டக்டர் உமா சங்கர் மீண்டும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் மனமுடைந்த மாணவிகள் கண்டக்டர் உமா சங்கரை கண்டித்தனர்.

அப்போது பஸ்சில் பயணித்து வந்த விடுதி கண்காணிப்பாளர் ஒருவர், உமா சங்கரை கடுமையாக கண்டித்து எச்சரித்தார். பின்னர் சக பயணிகளும் கண்டக்டர் உமா சங்கரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர் மீது உடுப்பி டவுன் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் புகாரை பெற மறுத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உமா சங்கரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் உடுப்பி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் கண்டக்டர் உமா சங்கரை உடனடியாக கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் உமா சங்கரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

From around the web