புதுச்சேரியில் நவம்பர் 2-வது வாரத்தில் பள்ளிகள் திறப்பு.? அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை

 
Namassivayam

நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரியில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதற்கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நவம்பர் 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கல்வியை பொறுத்தவரை தமிழ்நாட்டை பின்பற்றி வரும் புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சூசகமாக தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் நமச்சிவாயம் பள்ளிகள் திறப்பு தொடர்பாக கல்வித்துறை செயலாளர் அசோக்குமார், இயக்குனர் ருத்ர கவுடு ஆகியோருடன் தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தமிழ்நாட்டில் நவம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஆனால் புதுவையில் நவம்பர் 1-ந் தேதி புதுச்சேரி விடுதலை நாள் ஆகும். 2-ந் தேதி கிறிஸ்தவர்களின் புனித நாளான கல்லறை திருநாளும், 4-ந்தேதி தீபாவளி பண்டிகையும் வருகிறது.

எனவே இந்த விடுமுறை நாட்கள் முடிந்து நவம்பர் 2-வது வாரத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

From around the web