கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் படுகொலை; பி.எப்.ஐ நிர்வாகி கைது

 
RSS-person-killed

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எலப்புலி பகுதியை சேர்ந்தவர் பிரமுக் சஞ்ஜித். ஆர்.எஸ்.எஸ். தொண்டரான சஞ்சித் கடந்த 15-ம் தேதி தனது மனைவியுடன் பாலக்கோடு-திரிச்சூர் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, காரில் வந்த கும்பல் சஞ்ஜித் மற்றும் அவரது மனைவி வந்த பைக்கை வழிமறித்தது. மேலும், அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு பட்டப்பகலில் சஞ்ஜித்தை அவரது மனைவியின் கண்முன்னே கொடூரமாக வெட்டியது. இந்த கொடூர தாக்குதலில் சஞ்ஜித் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் எஸ்.டி.பி.ஐ கட்சியை சார்ந்த சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் கேரள போலீசார் தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்திலும் தீவிர விசாரணை நடத்தினர். சஞ்ஜித்தை கொலை செய்துவிட்டு கொலையாளிகள் கோவை மாவட்டத்திற்குள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

PFI

இந்நிலையில், பிரமுக் சஞ்ஜித் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முக்கிய நிர்வாகியை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிஎப்ஐ நிர்வாகி சஞ்ஜித் கொலையில் நேரடியாக தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இந்த கொலை வழக்கில் பாலக்கோடு மாவட்டத்தை சேர்ந்த சுபீர், சலாம், இஷஹப் என்ற மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

From around the web