புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி நெறிமுறைகள் வெளியீடு

 
Vinayagar

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வருகிற 10-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விநாயகர் சிலைகளை நிறுவி பூஜை செய்வது, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக தற்போது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி விழாவை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்நிலையில், புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது. விநாயகர் சிலை வைக்கப்படும் இடங்களில்கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

விநாயகர் சிலை வைப்பதற்கான இடங்களுக்கு போலீஸ் அனுமதி பெற்றிருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை கரைக்க வாகனங்களில் எடுத்து செல்லலாம், ஆனால் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்படுகிறது என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

From around the web