கொரோனா 3-வது அலை ஏற்படாதவாறு 6 மாநிலங்களும் தடுக்க வேண்டும் - பிரதமர் மோடி

 
Union-Govt

கொரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என 6 மாநில முதலவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது. ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு ஒன்றியக் குழுவை சுகாதார அமைச்சகம் அனுப்பி வைத்தது.

இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி வடகிழக்கு மாநிலமுதல்வர்களுடன் பிரதமர் மோடி அண்மையில் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில் தொற்று பரவலில் சரிவை சந்திக்காத மாநிலங்கள் மற்றும் தொற்று பரவல் அதிகரிக்கும் மாவட்டங்களைக் கொண்ட மாநில முதல்வர்களுடன் அவர் உரையாற்றினார்.

அந்த வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களுடன் இன்று காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது பிரதமர் மோடி பேசியதாவது,

கடந்த சில நாட்களாக 6 மாநிலங்களில் மட்டும் 80 சதவீதம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உருமாற்றம் அடைந்து வரும் வைரஸ்களின் அபாயம் அதிகமாக இருக்கும்.

நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக கவனம் செலுத்தப்பட வேண்டும். கொரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும்.  'டெஸ்ட்-ட்ராக்-ட்ரீட்-தடுப்பூசி' அணுகுமுறையை மையமாகக் கொண்டு நாம் முன்னேற வேண்டும்.

கொரோனாவை எதிர்த்து போராட ரூ.23 ஆயிரம் கோடி அவசரகால நிதி தொகுப்பை இந்திய அரசு அறிவித்துள்ளது.

சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்த தொகுப்பிலிருந்து வரும் நிதியை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிரப்ப வேண்டும். கிராமப்புறங்களிலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

From around the web