5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் - குடியரசுத் தலைவர் உத்தரவு

 
Ramnath Kovind

5 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

உயர்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கொலிஜீயம் ஒன்றிய அரசுக்கு கடந்த மாதம் பரிந்துரைத்தது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் பிந்தலை அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி ரஞ்சித் வி.மோரை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சி.சர்மாவை தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கவும், மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவை கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், இமாசல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.மலிமத்தை மத்திய பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜ் அஸ்வதியை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கவும், நீதிபதி பிரசாந்த்குமார் மிஷ்ராவை ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், நீதிபதி அரவிந்த்குமாரை குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்க உச்சநீதிமன்றம் கொலிஜீயம் பரிந்துரைத்தது.

மேலும் 5 மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்யவும் கொலிஜீயம் பரிந்துரை செய்தது.

ஆந்திரபிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அரூப்குமாரை சத்தீஷ்கார் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மத்தியபிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முகமது ரபிக்கை இமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகில் குரேஷியை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரஜீத் மகந்தியை திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிஸ்வந்த் சோமாதீரை சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் கொலிஜீயம் ஒன்றிய அரசுக்கு கடந்த மாதம் பரிந்துரைத்தது.

இவற்றுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மேற்கண்ட நியமனங்களை செய்து உத்தரவிட்டுள்ளார்.

From around the web