காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு... பின்னணி என்ன?

 
RahulGandhi-PrasantKishor-PriyankaGandhi

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்தும் பெற்றுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தியை தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோரும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.  

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் நவஜோத் சிங் சித்துவிற்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சித்து, அமரீந்தர் சிங்கை கடுமையாக சாடி வந்தார். இதனால், இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராகுல் காந்தி- பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அண்மையில் சரத் பவார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை பிரஷாந்த் கிஷோர் சந்தித்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரஷாந்த் கிசோர், காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டார். எனினும், அந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

From around the web