பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற வேண்டும்... கங்கனா சர்ச்சை கருத்துக்கு எதிராக வலுக்கும் கோரிக்கை..!

 
kanganaRanuat

சர்ச்சை கருத்து தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சை கருத்துகளை எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டவர்தான் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். எந்தளவிற்கு என்றால், ட்விட்டர் நிறுவனமே அவரது கணக்கை முடக்கும் அளவிற்கு சர்ச்சைக்கு பேர் போனவர். அப்படி, நாட்டின் சுதந்திரம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, தற்போது சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறார் கங்கனா ரணாவத்.

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. இந்தியாவுக்கு 2014-ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார். 1947-ம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய விடுதலை குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணாவத்தின் கருத்து வெட்கக்கேடானது எனக் கூறியுள்ள அவர், ‘மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல்’ ஆகியோரை  கங்கனா ரணாவத் அவமதித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

kanganaRanuat

பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை கங்கனா இழிவுபடுத்தி இருப்பதாகவும், அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபோன்ற விருதுகளை வழங்குவதற்கு முன், எதிர்காலத்தில் இதுபோன்ற நபர்கள் தேசத்தையும், தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்களையும் அவமதிக்காமல் இருக்க மனநல மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் ஆனந்த் சர்மா விமர்சித்துள்ளார்.

கங்கனா ரணாவத்தின் சர்ச்சை வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள வருண் காந்தி, கங்கனாவின் கருத்து தேசவிரோதச் செயல் என சாடியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில், உயிர் தியாகம் செய்தவர்களை இப்படி இழிவுபடுத்தக் கூடாது என்றும், அவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, கங்கனா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. அரசியல் கட்சியினரைத் தாண்டி, சமூகச் செயற்பாட்டாளர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கங்கனாவின் இந்தச் சர்ச்சை கருத்துக்கு தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

From around the web