கேரளாவை அச்சுருத்தும் நிபா... 12வயது சிறுவன் உயிரிழப்பு; ஒன்றிய சுகாதார குழுவினர் விரைந்தனர்

 
Nipah-Virus

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 3-ம் அலை பரவல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து நிபா வைரஸ் தாக்கம் குறித்து அறியவும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் விரைவு மருத்துவக் குழுவினர் கேரளா சென்றுள்ளனர்.

Nipah

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று கோழிக்கோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். கடந்த 4 நாட்களாக அந்த சிறுவனுக்கு தொடர்ந்து அதிகமான அளவு காய்ச்சல் இருந்தது. இதையடுத்து, அந்த சிறுவனின் உடலில் இருந்து ரத்தமாதிரிகள், எச்சில் உள்ளிட்டவை எடுத்து புனே வைரலாஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பரிசோதனையில் அந்த சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் அந்த சிறுவன் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.

நிபா வைரஸ், பழம்தின்னி வவ்வால்களில் இருந்து பரவும். நிபா வைரஸ் உறுதியானதையடுத்து, அந்த சிறுவனுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காணிக்கப்பட்டு, தேடப்பட்டு வருகின்றனர். அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

Veena-George

அந்த சிறுவனுடன் நெருக்கமாக இருந்த உறவினர்கள் யாருக்கும் இதுவரை எந்த அறிகுறியும் இல்லை. மற்ற குழந்தைகளுக்கும் அறிகுறி ஏதுமில்லை. அச்சப்படுவதற்கு தேவையில்லை. மாநில சுகாதாரத்துறையினர் தொடர்ந்து சூழலைக் கண்காணித்து வருகின்றனர். சிறப்பு அதிகாரிகளும், சிறப்புக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த சிறுவனை முதலில் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதன்பின்புதான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சையளித்து, பின்னர் மீண்டும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆதலால், சிறுவனைக் கொண்டு சென்ற மருத்துவமனை வட்டாரங்களில் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்களோ அனைவரையும் தேடி வருகிறோம். குறிப்பாக சிறுவனுடன் விளையாடிய குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.

நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கண்ணூர், மலப்புரம் மாவட்டத்தில் மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார வழிகாட்டலின்படி அந்த சிறுவனுக்கு இறுதிச்சடங்கு நடக்கும்.

அந்த சிறுவன் வசிக்கும் வீட்டைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பாதுாப்பு வளையத்தை போலீசார் அமைத்துள்ளனர்'

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் நிபா வைரஸுக்கு பலியாகியுள்ளான்.அந்த சிறுவனுடன் கடந்த 12 நாட்களாக தொடர்பில் இருந்தோர் அனைவரையும் சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர், அவர்களை தீவிரமான தனிமைப்படுத்துதலுக்கும் கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் கண்டறியப்பட்ட நிபா வைரஸால் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web