லகிம்பூர் விவகாரத்தில் மோடி ஜி நீங்கள் ஏன் அமைதியாக உள்ளீர்கள்..? கபில் சிபல் கேள்வி

 
KapilSabil-Modi

லகிம்பூர் விவகாரத்தில் நீங்கள் ஏன் அமைதியாக உள்ளீர்கள்? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

இந்நிலையில், லகிம்பூர் விவகாரத்தில் நீங்கள் ஏன் அமைதியாக உள்ளீர்கள்? என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் மோடி ஜி நீங்கள் ஏன் அமைதியாக உள்ளீர்கள்? உங்களிடம் இருந்து ஒரே ஒருவார்த்தை அனுதாபத்தை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது ஒன்றும் மிகக்கடினமானது கிடையாது. இந்த விவகாரத்தில் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் எவ்வாறு எதிர்வினையாற்றி இருப்பீர்கள்? தயவு செய்து எங்களிடம் சொல்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.

From around the web