ஆதாரம் இல்லாமல் மக்கள் கைது செய்யப்பட்டால் பின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும் - மெகபூபா முப்தி

 
Mehbooba-Mufti

ஆதாரம் இல்லாமல் மக்கள் கைது செய்யப்பட்டால் பின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும் என்று மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும், பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவத்தினர் 5 பேர் வீர மரணமடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், கடந்த சில நாட்களாக பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள், பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்கள் என நூற்றுக்கணக்கானோர் காஷ்மீர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆதாரம் இல்லாமல் மக்கள் கைது செய்யப்பட்டால் பின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும் என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று கூறுகையில், “காஷ்மீரில் சமீபகாலமாக நடைபெற்று வரும் கொலைகள் கவலைக்குரியது. இது அரசாங்கத்தின் தோல்வியாகும். அதை மறைக்கும் விதமாக மக்களை எந்தவித ஆதாரமும் இன்றை அரசாங்கம் கைது செய்கிறது. அவர்கள் கைது நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் பின் விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும். அனைவரும் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.

From around the web