மீண்டும் முதல்வராக மம்தா பானர்ஜி? பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

 
Mamata-Banerjee

மேற்குவங்கத்தில் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதால், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார். அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

பவானிபூரில் பெரும்பாலும் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. அங்கு 53.32 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது. சாம்சர்கஞ்ச் தொகுதியில் 78.60 சதவீத வாக்குகளும், ஜங்கிபூர் தொகுதியில் 76.12 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web