மத்திய பிரதேசதம்: எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக போலீசில் புகார்..!

 
Babulal-Jadev

மத்திய பிரதேசத்தில் மாடு பால் கறக்காததால், அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்த ருசிகர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் உள்ள நயாகான் என்ற கிராமத்தை சேர்ந்தவர், பாபுலால் ஜாதவ் (வயது 45). விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு எருமை மாடு உள்ளது. இந்த மாடு கடந்த சில நாட்களாக பால் கறக்க விடுவதில்லை.

இதனால் வேதனை அடைந்த அவர், அங்குள்ள காவல் நிலையத்துக்கு சென்றார்.  “அய்யா, என் மாடு நாலஞ்சு நாளா பால் கறக்க விட மாட்டேங்குது. யாரோ சூனியம் வச்சுட்டாங்க, அதான் மாடு பால் கறக்க விட மாட்டேங்குது ஊரே சொல்லுது. இந்தப் பிரச்சினையை நீங்கதான் தீர்த்து வைக்கணும்” என்று புகார் செய்தார். இந்த காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

இவர் புகார் கொடுத்து 4 மணி நேரம் ஆன நிலையில், போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லையே என கருதினார் போலும். இந்த முறை, மனிதர் அந்த மாட்டைப் பிடித்துக்கொண்டு நேராக போலீஸ் நிலையத்துக்கு போனார். “இதோ என் மாட்டையே கொண்டாந்துட்டேன். என் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்க” என்று அங்கிருந்த பொறுப்பு அதிகாரியிடம் முறையிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப் பகுதி போலீஸ் துணை சூப்பிரண்டு அரவிந்த் ஷா, கால்நடை மருத்துவர் ஒருவரை கொண்டு அந்த கிராமவாசிக்கு உதவுமாறு காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டார். மேலதிகாரி உத்தரவுக்கு இணங்க அவரும் உடனே நடவடிக்கை எடுத்தார். இப்போது அந்த மாடு பால் கறக்க அனுமதிக்கிறதாம்.

From around the web