கேரள காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் மாரடைப்பால் மரணம்..!

 
கேரள காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் மாரடைப்பால் மரணம்..!

கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.வி. பிரகாஷ் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 56.

வருகிற ஜூன் 1-ம் தேதியுடன் 14வது கேரள சட்டசபைக்கான பதவி காலம் நிறைவடைகிறது. இதனால், கடந்த 6-ம் தேதி கேரள சட்டமன்றத்திற்கான தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்திற்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில், ஆளும் கம்யூனிஸ்டு, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 பெரிய கட்சிகள் இடையே பெரும் போட்டி நிலவியது.  ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்தித்துள்ளது.

அந்த கட்சியின் நிலாம்பூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக வி.வி. பிரகாஷ் போட்டியிட்டார்.  அவர், மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குன்னுமேல் கிருஷ்ணன் நாயர் மற்றும் சரோஜினி அம்மா ஆகியோரின் மகனான வி.வி. பிரகாஷ் எடக்காராவில் பிறந்தார். தனது கல்லூரி நாட்களில் கே.எஸ்.யு ஆர்வலராக இருந்ததார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். தற்போது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வருகிறார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக போட்டியிட்டார்.

From around the web