ராகுல் காந்தியிடம் நெருக்கமாக இருந்த ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்தார்!!

 
Jitin-Prasada

உத்தர பிரதேசத்தின் முக்கிய காங்கிரஸ் நிர்வாகியான ஜிதின் பிரசாதா பாஜகவில் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் நிலையான முழு நேர தலைவர் வேண்டுமென சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஜிதின் பிரசாதா தற்போது ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமாக சில காலம் இருந்திருந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு பாஜகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை உறுதியாக மறுத்திருந்த ஜிதின் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதற்காக அம்மாநில கட்சி தலைமை, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இதன் பின்னணியில் அவர் கட்சி மாறியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் நிலவி வருகின்றன.

கடந்த 1999-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு சோனியா காந்தியை எதிர்த்து ஜிதின் பிரசாதாவின் தந்தை ஜிஜேந்திர பிரசாதா போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web